யோகாவும் பதஞ்சலியும்
நமது புண்ணிய பூமி பாரத திருநாட்டில் எத்தனை பொக்கிஷம் உள்ளது. அந்தப் பொக்கிஷங்கள் மூலம் நமக்கு எவ்வளவு பயன் கிடைத்துள்ளது. நமக்காக இந்த புண்ணிய பூமியில் அவதரித்து பல அறிய கண்டுபிடிப்புகளை நமக்கு அள்ளிக் கொடுத்து சென்றுள்ளனர் நமது முன்னோர்கள். அவற்றில் ஒன்றுதான் யோகக்கலை. நமது உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பல யோக சூத்திரத்தை அள்ளிக் கொடுத்தவர் தான் பதஞ்சலி மாமுனிவர் ஆவார்.
பதஞ்சலி முனிவர்
18 சித்தர்களில் ஒருவர் பதஞ்சலி மாமுனிவர். சப்த ரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமகா பிரகாசிப்பவர்தான் அத்திரி மகரிஷி. இந்த அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசூயா தேவிக்கும் மகனாய் பிறந்தவர் தான் பதஞ்சலி முனிவர். இவர் ஆதிசேஷனின் அவதாரம் என்று கூறப்படுகிறது.
இன்று ஆன்மிக ரீதியாகவும் இயற்கை மருத்துவ ரீதியாகவும் பலராலும் உச்சரிக்கப்படும் வார்த்தையாகிவிட்டது யோகா.
இந்த யோகா சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை சிந்து சமவெளி நாகரிக கல்வெட்டில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம்தான் யோகக் கலையைப் பற்றிய தெளிவை இன்று நமக்கு தந்திருக்கிறது.
இவரின் உடல் பாம்பு வடிவம் கொண்டது போல் சித்திரங்கள் உள்ளன. புராண ரீதியில் இவர் ஆதிசேஷனின் அவதாரம் என்பதால் பாம்பு வடிவத்தில் சித்திரங்கள் உள்ளன. ஆனால் யோக தத்துவத்தின்படி இதற்கு வேறு பொருள் உண்டு. யோகத்தின் மூலம் மனிதனுக்குள் எழும் ஆன்ம ஆற்றல் குண்டலினி சக்தி எனப்படுகிறது. இந்த குண்டலினி சக்தி பாம்பாக உருவகப்படுகிறது. பதஞ்சலி முனிவர் குண்டலினி சக்தி மிகுந்தவர் என்பதை குறிக்கிறது.
பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சூத்திரம் நூல் 195 சூத்திரங்களை கொண்டது. இந்நூல் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாதமான சமாதி பாதம் 51 சூத்திரங்களையும், இரண்டாவது பாதம் சாதனா பாதம், மூன்றாவது பாதம் விபூதி பாதம் இவை தலா 55 சூத்திரங்களையும், நான்காவது பாதம் கைவல்ய பாதம் 34 சூத்திரங்களையும் கொண்டது.
சமாதி பாதம்: எவ்வித சலனமின்றி பரமானந்தத்தில் ஆழ்ந்திருக்கும் நிலைக்குப் பெயர்தான் சமாதி. இந்த அத்தியாயத்தில் யோகம் என்றால் என்ன? சமாதி நிலையை எப்படி அடைவது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கான யோக பயிற்சியின் மூலம் எண்ணங்களும், உணர்வுகளும் கட்டுப்படுத்துவதே யோகம். இந்த உட்பொருளை உணர்த்துவதுதான் சமாதி பாதத்தில் இடம் பெற்றுள்ளன.
சாதனா பாதம்: இரண்டு வகையான யோகப் பயிற்சிகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை கிரியா யோகம், ராஜயோகம் எனப்படும்.
கிரியா யோகம்: செயல் சார்ந்த யோகப் பயிற்சிகள் இதை பகவத்கீதையில் கர்ம யோகம் என்று கூறப்படுகிறது. சுயநலம் சாராத செயல்கள் மூலம் வினைப்பயன்களை அறுப்பதே கிரியா யோகம் (அ) கர்ம யோகம் எனப்படும்.
ராஜயோகம்: அஷ்டாங்க யோகம் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்துதல் ஆகும்.
விபூதி பாதம்: விபூதி பாதம் என்றால் மேன்மை என்று பொருள். யோகப் பயிற்சி மூலம் கிடைக்கும் உயர்ந்த ஆற்றல்களை அடைவதற்கான வழிமுறை இந்தப் பாதத்தில் கூறப்பட்டுள்ளது.
கைவல்ய பாதம்: கைவல்ய என்றால் மோன நிலை தனித்திருத்தல் என்று பொருள். யோகப் பயிற்சியின் மூலம் இறுதியில் அடையப்படும் இலக்காகிய மோட்சம் எனப்படும் தனித்துவ நிலையயை இது எடுத்துரைக்கிறது. ஆன்மாவை மோட்சத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த யோகம்தான் வழிகாட்டியாக உதவுகிறது. இந்த யோக முறையில் ஈஸ்வரன் வழிகாட்டியாக அமைகிறார். இந்த வகையில் உள்ள சாங்கியத்தில் 25 தத்துவங்கள் போக, 26வது தத்துவமாக ஈஸ்வரனை யோகம் முன்வைக்கிறது.
யோக சூத்திரத்தின் சமாதி பாதத்தில் 24வது ஸ்லோகம் ஈஸ்வரனை பற்றி இவ்விதம் குறிப்பிடுகிறது.
“க்லேஷ் கர்ம விபாகஷயைஹ் (அ) பராம் ருஷ்டஹ்
புருஷ விசேஷ ஈஸ்வரஹ்”
இதன் பொருள் சிறப்பு தன்மை கொண்ட ஆன்மாவே, விசேஷ புருஷனே ஈஸ்வரன். ஒருவனுடைய கிலேசங்கள் எனப்படும் தடைகள், கர்மங்கள் எனப்படும் வினைகள், விபாக எனப்படும் பலன்கள், அக்ஷய எனப்படும் மனவிருப்பங்கள் ஆகியவற்றால் எவ்வித பாதிப்புகளுக்கும் உள்ளாகாமல் இருக்கின்ற தன்மையாகிய சிறப்புத் தன்மை கொண்டவரே ஈஸ்வரன்.
பதஞ்சலி யோகாவின் எட்டு நிலைகளையும் மிக எளிமையாக கூறியுள்ளார்.
1. யமா – அஹிம்சை, சத்தியம், திருடாமை, பேராசையின்மை
2. நியமா – சுத்தம் (உள் மற்றும் புறம்), தவம், சுயமாய் கற்றல்
3. ஆசனா – யோகாசனங்கள்
4. ப்ரணாயாமா – மூச்சுப் பயிற்சி
5. ப்ரத்யாஹாரா – மனதைப் புலன்கள் வழியாக போகாமல் தடுத்தல்
6. தாரனா – மனதை ஓரிடத்தில் குவித்தல்
7. தியானா – தியானம்
8. சமாதி – இறைநிலை அடைந்து அதுலேயே ஐக்கியமாதல்
இவ்வாறாக இந்த 7 யோக பயிற்சியின் மூலம் தான் 8வது நிலையை அடைய முடியும். அதாவது மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்தி, மனதில் இறை சிந்தனையை தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருப்பது தான் சமாதி நிலை. இந்த நிலை அடைந்தால் இறை நிலையில் ஐக்கியமாகலாம் என்று பதஞ்சலி முனிவர் யோகசூத்திரத்தில் கூறியுள்ளார்.