எனது ஆசான் வீரபாகுஜி – I

எனது ஆசான் வீரபாகுஜி – I

Share it if you like it

சங்க ஸ்வயம்சேவக சகோதரர்களே! நமது அன்பிற்குரிய வீரபாகுஜி விண்ணுலகம் ஏகிவிட்டார். இன்னும் ஒரு பத்தாண்டுகள் வாழ்வதற்கான உடல்நிலையும் ஆரோக்கியமும் அவருக்கு இருந்தன. ஏனோ இறைவன், இந்த உலக நாடக மேடையிலிருந்து ‘திடுதிப்’பென்று அவரை அழைத்துக் கொண்டுவிட்டான்.

1978 முதல் 1987 வரை கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நானும் அவரும் சேர்ந்து ஒரே மாவட்டத்தில் (வட ஆற்காடு) சங்கப் பணி ஆற்றியிருக்கிறோம். அவரது தலைமையின் கீழ், நகர் பிரசாரக்காக, தாலுகா பிரசாரக்காக, ஜில்லா பிரசாரக்காகப் பணியாற்றிய அரும்பெரும் பாக்கியம் எனக்கு வாய்த்தது. வீரபாகு எனும் ஆலமரத்தின் கீழே சுகமான பாதுகாப்புடன் நான் வளர்ந்தேன். ‘வாழைக்கன்று அன்னையின் நிழலில் வாழ்வதுபோலே வாழ வைத்தாயே’ என்ற கவிதை வரிகளுக்கேற்ப பல பிரசாரகர்களை அவர் உருவாக்கினார்.

எனக்கு உடன்பிறவா அண்ணனாக, தோள்மேலே கைபோட்டு சிரித்து மகிழும் தோழனாக, உணர்ச்சியூட்டும் தலைவனாக, எதிர்ப்புகளை- தடைகளைச் சிதறடித்து வெற்றிக்கொடி நாட்டும் வீரனாக, சமயோசிதம் மிகுந்த காரியவாதியாக, புத்தம் புதிய யுக்திகளை- திட்டங்களைப் புகுத்தும் புத்திளமை கொண்டவராக, திறமையான சாரீரிக் பிரமுக்காக (உடற்பயிற்சிப் பொறுப்பாளர்), சிறந்த மேடைப் பேச்சாளராக, ஊழியர்களை உருவாக்குவதில் நிபுணராக, பிரசார பீரங்கியாக, மிகப் பெரிய நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்தும் தலைமை எக்ஸிக்யூட்டிவாக, சங்கப் பிரசுரங்களை விற்கும் விற்பனை எக்ஸ்பர்ட்டாக – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்- அவர் இருந்தார்.

அவருடனான எத்தனையோ ஷிபிர்கள் (கூடுதல்கள்), மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், வர்காக்கள் (பயிற்சி முகாம்கள்), பைட்டக்குகள் (ஆலோசனை அமர்வுகள்), கதை நிகழ்ச்சிகள், எதிர்ப்புகள், போராட்டங்கள் என பல்வேறு சம்பவங்கள் என் மனதில் ஒரு சினிமா படக் காட்சிகள் போன்று ஓடிக் கொண்டிருக்கின்றன. அவை கிட்டத்தட்ட 40- 45 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை. தமிழகம் உடைக்க முடியாத பாறையைப்போன்று இருந்த காலகட்டத்தில் அவர் ஒரு சூறாவளியைப் போன்று சுழன்று சுழன்று சங்கப்பணி செய்து வந்தார். எனவே, அவர் தொடர்புடைய முக்கியமான சம்பவங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது.

சில ஊர்கள், தேதிகள், பெயர்கள் எல்லாம் தற்போது ஞாபகத்தில் இல்லையென்றாலும், முடிந்த வரை அவற்றைக் கவனத்திற்குக் கொண்டுவர முயற்சிக்கிறேன்.

வீரபாகுஜியின் பிரசாரக் வாழ்க்கையில் ஷாகா களப்பணியின் பெரும்பகுதி வேலூர் விபாக்கில்தான் (வேலூர் கோட்டம்) கழிந்தது. வேலூர் விபாக்கைப் பொருத்த மட்டிலும் ‘வாராது வந்த மாமணி’ அவர். அவரோடு தொடர்புடைய சம்பவங்களை, குணாதிசயங்களை, வெளிப்பட்ட ஆளுமைகளை ‘சிரத்தாஞ்சலி புஷ்பம்’ என்ற பெயரில் ஒவ்வொன்றாக, தொடர்ச்சியாக உங்களிடம் முன்வைக்க முயலுகிறேன்.

வேலூர் கோட்டையில் எழுந்தருளியிருக்கும் பேரருளாளன் அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் – ஜ்வரஹரேஸ்வரர் இதற்கு அருள் பாலிக்கட்டும்!

வரும் நாட்களில் சிரத்தாஞ்சலி புஷ்பங்களுடன் மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்.

வணக்கம்!

– சுந்தர.ஜோதி


Share it if you like it