ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் மசோதாவுக்கு பிரிட்டன் பாராளுமன்ற மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. தங்களின் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பறிபோவதாகக்கூறி பிரிட்டன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் ‘பிரெக்சிட்’ மசோதா கொண்டுவரப்பட்டது.
ஆனால் மக்களவையில் பெரும்பான்மை இல்லாததால் மசோதாவை நிறைவேற்ற இயலவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியானது 337 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
தற்போது மீண்டும் ‘பிரெக்சிட்’ மசோதாவானது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான வழி ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் மேலவையான பிரபுக்கள் சபையில் மசோதாவானது நிறைவேற்றப்பட்டால் ஒரு வருட ஒப்பந்ததுடன் வர்த்தக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு பிரிட்டன், யூனியனிலிருந்து வெளியேறும்.