குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பத்ரிநாராயணன் கோவில் நிர்வாகமானது, சோலார் தகட்டின் மூலம் மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்தி உள்ளது. மிச்சப்படுத்திய மின்சார கட்டணத்தின் மூலம் சேமித்த பணத்தை கொண்டு அந்த பகுதியில் கல்வி வளர்ச்சி பணிகளில் கோவில் நிர்வாக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் அறக்கட்டளை நிர்வாகி பிரவீன் சந்திரா கூறியதாவது ‘கோவிலை நிர்வகிக்க ஆகும் மின்சார செலவு மிகவும் அதிகமாக இருந்தது. அதனால் கோவிலின் மேற்கூரையில் சூரியமின்தகட்டை பொருத்தி மின்சார கட்டணத்தை குறைத்துள்ளோம். மேலும் முன்னர் மின்சார கட்டணமானது ஒன்றிலிருந்து இரண்டு இலட்சம் வரை வந்துகொண்டிருந்தது. தற்போது அது 10,000-12,000 என குறைந்துவிட்டது. இந்த பணத்தின் மூலம் சமஸ்கிருத பள்ளி மற்றும் கல்லூரியை தொடங்கியுள்ளோம்’ என்றார். கோவிலின் மேற்கூரையில் 50 கிலோவாட் திறனுள்ள சூரியமின்தகடுகள் 25 இலட்ச ரூபாய் மதிப்பில் பொருத்தப்பட்டுள்ளன.
இதே போன்று கடந்த அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் 29 கல்லூரிகளில் சூரியமின்தகடுகள் பொருத்தப்பட்டு மின்சார செலவு முழுவதுமாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சூரியசக்தி மின்சாரம் சுற்றுசூழலுக்கு தீங்குவிளைவிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.