தத்தாத்ரேய பாபுராவ் ததொபந்த் டெங்கடி நவம்பர் மாதம் 10ஆம் நாள் 1920ல் மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதி ஆர்வியில் பிறந்தவர். இவர் தனது பள்ளிப் படிப்பை முடித்து விட்டு நாகபுரி மௌரிஸ் கல்லூரியில் சேர்ந்தார். பள்ளியில் தனது முதல் வகுப்பிலிருந்தே முதல் மாணாக்கராகத் திகழ்ந்தார். தனது சட்டப் படிப்பை முடித்ததும் 1942ல் ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக முதலில் கேரளாவிலும் பின்பு வங்காள மாநிலத்திலும் தன் தேசியப் பணியைத் தொடர்ந்தார். பின்பு நாகபுரி திரும்பியதும் ஜன சங்கம், வித்யார்த்தி பரிஷத் மற்றும் INTUC போன்ற தொழிற்ச் சங்கத்தில் அனுபவம் பெற்றார். பாரதீய மஸ்தூர் சங்கத்தைத் தொடங்கி இடது சாரிய தொழிற்ச் சங்கத்திற்குச் சவாலாக விளங்கினார். அதன் பின்பு பாரதீய கிசான் சங்கம், ஸ்வதேஷி ஜாகரண் மன்ச், சர்வ பந்த் சமதர்ம மன்ச் போன்ற இயக்கங்களை நிறுவி தேசிய எண்ணத்தை பலப் படுத்தினார்.
12 வருடம் ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தார். எளிய வாழ்விற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்கினார். பகவத் கீதையில் கூறப்படுள்ள ஜீவன்முக்திக்கு டெங்கடிஜீ ஒரு வாழும் உதாரணம் என மூத்த ப்ராசரக் பி.பரமேஸ்வரன்ஜீ அவர்களால் புகழப் பட்டவர்.
தொழிலாளர்களுக்கு தேசிய உணர்வை ஊட்டும் விதத்தில், ஒரு தொழிற் சங்கத்தை துவக்குவதற்காக பரம பூஜனீய ஸ்ரீ குருஜி அவர்களால் அனுப்பப் பட்ட, டெங்கடிஜியின் அழைப்பிற்கு இணங்க, 1955 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி, போபாலில் சில சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்தனர். பெயர் வைப்பது சம்பந்தமான சர்ச்சை நடந்த போது “பாரதிய ஷ்ரமிக் சங்” என்ற பெயரை முன் மொழிந்தார். அப்போது பஞ்சாபில் இருந்து வந்தவர்கள், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு “ஷ்ரமிக்” என்ற வார்த்தையை சரியாக உச்சரிக்க முடியாது எனவும், வேறு பெயரை வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அப்போது வங்கத்தில் இருந்து வந்தவர்கள், “பாரதிய மஸ்தூர் சங்கம்” என்ற பெயரைக் கூறினார்கள். அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றனர். கலந்து கொண்டவர்கள் மத்தியில் தான் முன் மொழிந்த பெயருக்கு, மாற்றுப் பெயர் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்தால், அதை அப்படியே அங்கீகரித்து, கூட்டு முடிவை எடுக்கும் கலாச்சாரத்தை இயக்கத்தின் துவக்கத்திலேயே தெங்கடிஜி உணர்த்தினார்.
டெங்கடிஜீ பல இயக்கங்களின் நிறுவனரானாலும் அவற்றில் அவர் பெரும் அதிகாரப் பொறுப்புகளில் பங்கு வகித்ததில்லை. கோடானு கோடி கார்யகர்த்தர்களுக்கு ஒளி விளக்காக அவர் விளங்கினார். 1967ல் பி.எம்.எஸ்ஸின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பின்னர் 1975ல் அவசர நிலை பிரகடனத்தின் காரணமாக அந்த பொறுப்பிலிருந்து விலகினார். மிஸா சட்டத்திற்க்கு எதிராகப் போராட அமைக்கப் பட்ட “லோக் சங்கர்ஷன சமிதி”யின் செயலாளராக டெங்கிடிஜீ ஸ்ரீ ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களால் நியமிக்கப்பட்டார். அதன் ஏனைய தலைவர்களான நானாஜீ தேஷ்முக் மற்றும் ரவீந்திர வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்ட போது, டெங்கடிஜீ அவசர நிலைக்கு எதிரான போராட்டத்தில் கைதாகும் நிலையை தவிர்க்க தலை மறைவானார். அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக வழி நடத்திய அவர் ஜனதா கட்சியினைத் தொடங்குவதிலும் பெரும் பங்கு வகித்தார். 1975 முதல் 1977 வரை அவசர நிலைக் காலத்தில் இடது சாரிகள், பழைய காங்கிரஸ், லோக் தள், அகாலி தள் முதலிய கட்சிகளுடனும் மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரசேகர், சுப்பிரமணிய சுவாமி, வி.எம்.தற்குண்டே, மோஹன் தரியா, மதுலிமாயே, சுந்தர் மோஹன் மற்றும் க்ருஷ்ண காந்த் போன்றோருடனும் ஜன நாயகத்தை நிலை நாட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
1977ல் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி மொராஜி தேசாய் பிரதமரான பின் டெங்கிடிஜீ அரசியலை விட்டு விலகி தனது பி.எம்.எஸ். (BMS) பணியில் இணைந்தார்.
பிரதமர் மொராஜி தேசாய் அவர்கள் மத்திய அமைச்சக குழுவில் டெங்கடிஜீக்கு தொழிலாளர்களின் அமைச்சர் பொறுப்பை வழங்க விரும்பியதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு செய்தி நிலவியது. டெங்கடிஜீயின் அரசியல் சார்பற்ற தன்மையினை அனைவரும் நன்கு அறிந்திருந்தனர். அப்போதைய ஜனதா கட்சியின் தலைவர் சந்திரசேகர் பி.எம்.எஸ்ஸை ஐ.என்.டி.யு.சி.–காங்கிரஸ் போல சார்பு இயக்கமாக்க முயற்சித்தார். ஆனால் டெங்கடிஜீ ஒரு மாபெரும் இயக்கம் அரசியலுக்கு அப்பால் செயல்பட வேண்டும் என்று எண்ணினார்.
டெங்கடிஜீ புகழுக்கும், அதிகாரத்திற்குமான இவற்றைப் போன்ற பல வாய்ப்புகளை துச்சமாக எண்ணி தன் கொள்கையை எள்ளளவும் விட்டுக் கொடுக்காமல் இருந்தார். அவர் மதமும், அரசியலும் தொழிற் சங்கத்தில் கலவாது காத்தார். சுப்பிரமணிய சாமி தன் எழுத்துக்களில் குறிப்பிடும் போது, “அவசர நிலை பிரகடனத்தின் போது நான் ஒரு பெரும் நாயகனாக கருதப் பட்டேன். ஆனால் டெங்கடிஜீயும், மாதவராவ் முளேயும் தான் உண்மையான நாயகர்கள். அவசர நிலை போராட்டத்தில் பெரும் பங்காற்றிய ததொபந்த் டெங்கடிஜீ எனது ஆசானாக விளங்கினார். ததொபந்த் டெங்கடிஜீயின் அவசர நிலையை எதிர்த்து அவர் ஆற்றிய பணி ஒன்றே அவர் ஒரு வரலாற்று நாயகனாகத் திகழ போதுமானது. ஆனால் மக்கள் இன்னும் இப்பெரும் பணியை அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது” என்றார்.
டெங்கடிஜீயின் தேசப்பணியானது செங்கோட்டையை நோக்கிச் செல்லும் புரட்சிகர சிகப்புக் குதிரையால் இயங்கும் சிகப்பு ரத்தத்தில் வாழும் இடது சாரிகளின் பிடியில் இருக்கும் தொழிலாளர் வர்க்கத்தை விடுவிப்பதில் நிறைந்திருந்தது. 1950களில், பொதுவுடைமை வாதம் தன் சிகரத்தை எட்டிய காலத்தில், ராஷ்ட்ர சக்தியின் ஒலி கேட்க, டெங்கடிஜீயால் உருவாக்கப்பட்ட பி.எம்.எஸ். 23 நவம்பர்; 1955 அன்று போபாலில் பூஜ்யத்திலிருந்து தொடங்கப் பட்டது. பூஜ்யத்திலிருந்து பேரண்டத்தினை உருவாக்கும் முனைப்பில் அக்காலத்தில் தொழிற்ச் சங்கமோ, கார்யகர்த்தர்களோ, நிதியோ இருக்கவில்லை. டெங்கடிஜீ இயற்கை நீதியிலும், பாரதீய கலாச்சாரத்திலும், சத்தியத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.
பி.எம்.எஸ். டெங்கிடிஜீயின் சிறந்த நிர்வாகத் திறனால், 35 ஆண்டுகளுக்குள் கம்யூனிச சங்கம் உட்பட அனைத்து தொழிற்ச் சங்கங்களையும் பின்னுக்குத் தள்ளி மஹோன்னத நிலையை அடைந்தது. துனி மனித அதிகாரம் மற்றும் முதலாளிகளின் பிடியிலிருந்து தொழிலாளர்களை பி.எம்.எஸ். மீட்டதைக் குறிப்பிடுகையில் அவர் இச்செயல் “தொழிலாளர்களால், தொழிலாளர்களுக்கு, தொழிலாளர்களோடு நிறைவேற்றப் பட்டது” என்றே குறிப்பிடுகிறார். தொழிலாளர்களை தேசியமயமாக்கு; தொழிற் சாலைகளை தொழிலாளர் மயமாக்கு; தேசத்தை தொழில் மயமாக்கு (Nationalise the labour, Labourise the Industry and Industrialise the country) என்பதே அவரது தாரக மந்திரம்.
1948ஆம் வருடம் ஆர்எஸ்எஸ்.ன் இரண்டாவது சர்சங்கசாலக்கான ப.பூ.குருஜி கோல்வால்கர், டாக்டர் அம்பேத்கரை சந்தித்துப் பேசினார். அப்போது பட்டியலின மக்கள் தீண்டாமையால் எவ்விதமெல்லாமல் பாதிக்கப் பட்டிருக்கிறார்களென பாபாசாஹேப் எடுத்துரைத்தார். அதற்கு ஸ்ரீகுருஜி, இந்து சமுதாயத்தில் தீண்டாமை இடைப்பட்ட காலத்தில் வந்தது எனவும், அதைக் களைய தாங்கள் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் கூறினார்.
1954 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள (இன்றைய பாந்த்ரா) நாடாளுமன்ற தொகுதியில், அம்பேத்கரின் தேர்தல் முகவராக (ஏஜென்டாக) டெங்கடி பணியாற்றினார். காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து அம்பேத்கரை தோற்கடித்தனர். பின்னர், பாரதிய ஜன சங்கம் மற்றும் ஹிந்து மகா சபையும் சேர்ந்து, டாக்டர் அம்பேத்கரை ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்க செய்தனர்.
பின்னர், டாக்டர் அம்பேத்கரிடம் டெங்கடிஜி உரையாற்றிய போது “ஆர்எஸ்எஸ். உறுப்பினர்களுக்கு தீண்டாமையில் நம்பிக்கையில்லை” என எடுத்து உரைத்தார். அதற்கு பதிலளித்த அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் முகாமை பார்வையிட்ட நான், அதை உணர்ந்துள்ளேன், அது எனக்கு தெரியும். உங்களைப் பின் தொடர்பவர்களுக்கு நம்பிக்கையிருக்கிறதா, இல்லையா என்பதல்ல பிரச்சனை, சமுதாயத்தில் இருந்து இத்தீமையை அகற்ற உங்களால் முடியுமா? என்பது தான் முக்கியம் என்றார்.
தீண்டாமை சம்பந்தமாக சமுதாயத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டு, அதில் உங்கள் குருஜி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் போது, அதற்கு மாறுபட்ட அபிப்ராயத்தை (VERDICT) சங்கராச்சாரியார்கள் கூறினால், அதில் யாருடைய தீர்ப்பை அடிப்படைவாதிகளான ஜாதி ஹிந்துக்கள் ஏற்பார்கள் எனக் கேட்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஏற்கனவே சங்கராச்சாரியார்களிடம், இது சம்பந்தமாக விவாதித்துக் கொண்டிருந்த, ஆர்எஸ்எஸ். தனது முயற்சியில் தீவிரம் காட்டியது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் (VHP) முதலாவது தேசிய மாநாடு, 1966 ஆம் ஆண்டு, பிரயாகையில் நடந்தது. அம்பேத்கரின் சந்தேகத்திற்கு விடை அளித்தது. நூற்றுக் கணக்கான தர்மாச்சாரியார்கள், ஜெகத் குருக்கள், உள்ளிட்ட ஏறத்தாழ 50,000 பேர் மாநாட்டில் பங்கேற்றனர். நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஹிந்துக்களுடைய அனைத்துப் பிரிவினரும் பங்கேற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு அது.
“தீண்டாமை என்னும் நோயை அகற்ற, இது ஒரு பொன்னான வாய்ப்பு என ஸ்ரீகுருஜி கருதினார். தீண்டாமைக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துத் தரப்பினரும் வரவேற்றனர். ஆனால் பூரி கோவர்த்தன பீட ஜெகத்குரு சங்கராச்சார்யார் கடுமையாக எதிர்த்தார். நமது சாஸ்திரங்களில் அதற்கு இடமில்லை என கூறினார். அதனால் அனைவருக்கும் மிகப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஸ்ரீகுருஜி சங்கராச்சாரியாரை தனியாக சந்தித்து பிரச்சனைகளைப் பற்றி கலந்தாலோசித்தார். தீண்டாமை தொடர்ந்தால், இந்து சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் ஏற்படக் கூடிய ஆபத்தை உணர்த்தினார். இறுதியாக, சங்கராச்சாரியார் ஸ்ரீகுருஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார். இந்து சமய சாஸ்திரங்களில் “தீண்டாமைக்கு இடமில்லை என” மாநாடு ஏகோபித்த தீர்மானத்தின் வாயிலாக நாட்டுக்கு அறிவித்தது.
1956-ல் பாபா சாஹேப் மனதில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு, 10 வருடங்கள் கழித்து, 1966-ஆம் வருடம், ஸ்ரீகுருஜியின் வாயிலாக, இந்து சமுதாயம் பதில் அளித்தது. அதில் தத்தோபந்த டெங்கடிஜியின் பங்கு அளப்பரியது.
இந்து சமுதாயத்தில் இடைக் காலத்தில் வந்து சேர்ந்த, தீண்டாமையை அகற்றி, “அனைவரும் சமம்” என்பதை உணர்த்திட, “சாமாஜிக் சமரஸதா” (சமுதாய நல்லிணக்க பேரவை), 1983-ல் துவக்கினார். டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 இல், மத்திய பிரதேசத்தில் உள்ள மான்டாஸ்பூரில், லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாநாட்டில், இதை அறிவித்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 அன்று, சமூக நல்லிணக்க தினமாக கொண்டாடி வருகின்றோம்.
ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளர் :
தொலை நோக்கு பார்வை கொண்ட டெங்கடிஜீ, 1984ம் ஆண்டு இந்தூரில், தொழிலாளர்களின் ஆர்வம், தேசிய நலனுக்கேற்ப உள்ளதாகக் கூறினார். “தேசம் நிலையாக இருக்கும் வரை தொழிலாளர்கள் வீழ்ச்சி அடைய மாட்டார்கள். தேசம் வீழ்ச்சியடைந்தால் யார் தொழிலாளர்களைக் காப்பாற்றுவார்கள்? அதேபோல் தொழிலாளர்கள் நிலையாக இருக்கும் வரை தேசத்தை வீழ்ச்சியடைய விட மாட்டார்கள். ஆனால் தொழிலாளர் வீழ்ச்சியடைந்தால் நாட்டை காப்பாற்றுவது யார்?” என்ற அவர் தேச துரோகிகளாலும், இடதுசாரிகளாலும் சூழப்பட்ட தொழிலாளர்களின் அடிப்படையான நாட்டுப் பற்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்தார்.
இவ்வாறு டெங்கடிஜீ பொதுவுடைமை வாதத்தின் வேடத்தை உலகிற்கு அம்பலப்படுத்தத் துவங்கினார். டெங்கடிஜீ ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடு’ (Workers of the world unite) என்ற முழக்கத்தை ‘தொழிலாளர்களே உலகை ஒன்றுபடுத்து’ (Workers unite the world) என்று மாற்றினார். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’திற்கு பதிலாக ‘வந்தே மாரம்’ என்றும் ‘பாரத் மா கீ ஜெய்’ என்றும் மாற்றினார். ‘நிர்பந்தம் எதுவாக இருந்தாலும் எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்பதை நாம், தேசிய நலனுக்காகப் பணி புரிந்து அதற்கு எதிராக முழு ஊதியம் கோருவோம்’ என்று மாற்றினார்.
சிகப்புக் கொடிக்கு பதிலாக காவிக் கொடியை பறக்க விட்டு ‘விஸ்வகர்மா ஜெயந்தி’யை தேசிய தொழிலாளர் தினமாக அறிமுகப் படுத்தினார். இருப்பவர் மற்றும் இல்லாதவர் என்னும் பொதுவுடைமை சித்தாந்தத்தை முழுமையாக நிராகரித்தார். வர்க்க ஒத்துழைப்பு என்னும் சக வாழ்வுக் கொள்கையையும் அநீதி மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தையும் அறிமுகப் படுத்தினார்.
பொதுவுடைமை சித்தாந்தத்தை ஆழ்ந்து ஆய்வு செய்தவர். அக்கொள்கை பொருளை மையப்படுத்தி உள்ளதாலும் முரண்பாடுகள் உள்ளதாலும் அது நிலையானதல்ல என்றார். டெங்கடி ஜீ கார்ல் மார்க்ஸ் மீது பெருமதிப்பு கொண்டவர். ஆனால் மார்க்சியத்தின் கொள்கைகளில் பல தவறானவை என்றும் மார்க்சின் கணிப்பு தவறு என்றும் டெங்கடிஜீ கூறினார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பெலேன்ஸ்கியிடமிருந்து பெற்ற கார்ல் மார்க்ஸ் அசல் சிந்தனையாளர் அல்ல.
‘தொழிலாளர்களுக்கு நாடு இல்லை’, ‘தொழிலாளர்களே! உங்களை அடிமைப்படுத்தும் விலங்கைத் தவிர இழப்பதற்கு ஒன்றும் இல்லை’ என்பன மௌரெட்டிடமிருந்தும் ‘உலக தொழிலாளர்களே ஒன்றுபடு’ என்பது கார்ல் ஷாப்பரிடமிருந்தும் மார்க்ஸ் பெற்றவை என்றார் டெங்கடிஜீ. புரட்சி என்னும் வாக்கு கூட மார்க்ஸ் வழி வகுத்தபடி நடக்கவில்லை என்றார். ‘Das Capital’ (முதலாளித்துவம்) எனும் நூல் வெளியிட்டு, 31 ஆண்டுகளுக்குப் பின் 1898ம் ஆண்டு பெட்ரிக் ஏஞ்செல்ஸ் எனும் மார்க்ஸிய மேதை தங்களைப் போன்ற சிந்தனையாளர்கள் கூறியதனைத்தும் தவறு என்றதை சுட்டிக் காட்டினார்.
1970ல் டெங்கடிஜீ கான்பூரில் கம்யூனிசம்-மார்க்ஸிஸம் 1989க்குள் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றார். USSR அப்பொழுது சிதில் சிதிலாக தவிடு பொடியாகும் என்றார். அவரது இரண்டு கணிப்புகளும் மெய்யானது. 2010க்குள் இம்பீரியலிஸம் வீழ்ச்சி அடையும் என்று கணித்ததும், இப்பொழுது மெய்யாகி வருகிறது. பூஜனீய டாக்டர் ஹெட்கேவர் அவர்களின் 100வது பிறந்த வருடமான 1989ல் நாகபுரியில் ஒன்று கூடிய பிரச்சாரக்கர்களின் கூட்டத்தில் அகண்ட பாரதத்தின் படத்தின் முன்னால் “தேசிய மற்றும் உலக நிகழ்வுகளின் மெய்ஞ்ஞான பார்வை கொண்டு சொல்கிறேன் அடுத்த நூற்றாண்டில் பரிதி துயில் நீங்கி சூர்ய நாராயணராக எழும்போது பாரதத்தின் பொருளாதாரத் துறையில் சிகப்பு முதல் ஊதா, கடும் சிகப்பு வரை அனைத்துக் கொடிகளும் ஹிந்து ராஷ்ட்ர ஸநாதன பகவா த்வஜத்தில் ஐக்கியமாகி விட்டது என்று த்ருப்தி கொள்வான்”’ என்றார். இந்த கணிப்பு தற்காலத்தில் நிஜமாகி வருகிறது.
1968ம் ஆண்டு பாராளுமன்ற குழுவின் உறுப்பினராகச் சென்றபோது ஹிரேன் முகர்ஜி எனும் கம்யூனிஸ்ட் தலைவர் “டெங்கடி! இந்த பேரண்டத்தில் எனக்குக் கிடைக்காத இடத்தை நீ பெற்று விட்டாய்” என்றதற்கு “இந்த நாட்டின் அடிக்கல்லின் கீழ் இருக்கும் ஒரு சிறு கல்லாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார் டெங்கடிஜீ.
டெங்கடிஜி எழுதிய புத்தகங்கள்:
ஹிந்தி – 27
ஆங்கிலம் – 12
மராத்தி – 3 மற்றும் ஏராளமான கட்டுரைகள்
ஸ்தாபகர்:
பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) – 1955 ஜூலை 23
பாரதிய கிசான் சங்கம் (BKS) – 1979 மார்ச் 4
சாமாஜிக் சமரஸதா – 1983 ஏப்ரல் 14
சர்வபந்த் சமாதார் மஞ்ச் – 1991 ஏப்ரல் 14
சுதேசி ஜாக்ரன் மஞ்ச் – 1991 நவம்பர் 22
ஸ்தாபக உறுப்பினர்:
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) – 1949 ஜூலை 9
பாரதீய விசார கேந்திரம் – 1982 அக்டோபர் 7
ஸஹகார் பாரதி
– அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai