ஒரு முறை பயன்படுத்தி கடாசப்படும் பிளாஸ்டிக் கப்புகளுக்கு மாற்றாக, செல்லுலோஸ் மூலம் கப்புகள், தட்டுக்களை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது, ‘பல்பாக்!’
ஏற்கனவே பல துறைகளில் புழங்கும் செல்லுலோசைக் கொண்டு, உலர்ந்த பொருட்கள், ஈரமுள்ள பொருட்கள் என, இரண்டையும் கையாளும் வகையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, பல்பாக் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. உலர் கலன்களுக்கான செல்லுலோஸ் கூழினை, வார்ப்புகளில் ஊற்றி, ஒரே நொடி அழுத்தம் தந்தால், ஒரு செல்லுலோஸ் கப் தயாராகிவிடுகிறது.
ஈரப் பொருட்களை சுமக்கும் செல்லுலோஸ் கப்பை தயாரிக்க, ‘ஐசோஸ்டாடிக் பிரஸ்’ முறையில் அழுத்தம் தந்து பொருட்களை தயாரித்து விடலாம். ஈரப் பொருட்களை வெகுநேரம் தாங்கும் வகையில், இது சற்றே கூடுதல் கடினமாகவும் இருக்கும்.
இரண்டு முறைகளிலும் பிளாஸ்டிக்கைவிட குறைந்த நேரத்தில், குறைவான செலவில் கப்புகள் போன்றவற்றை தயாரிக்க முடியும் என்கிறது, பல்பாக். செல்லுலோஸ் நீரில் கரையும்; எளிதில் மட்கிவிடும்.
இதனால், ஒரு முறை பயன்படுத்தி எறியப்பட்டாலும், அவை சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருக்காது. ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உலகெங்கும் பரவும் நிலையில், வந்திருக்கும் செல்லுலோஸ் கப்புகள், தட்டுகளுக்கு வரவேற்பு பெருகுமா?

பிளாஸ்டிக்கிற்கு மாற்று செல்லுலோஸ்?
Share it if you like it
Share it if you like it