மோடியால் தூக்கத்தை தொலைத்த பாகிஸ்தான் மற்றும் சீனா…!

மோடியால் தூக்கத்தை தொலைத்த பாகிஸ்தான் மற்றும் சீனா…!

Share it if you like it

காஷ்மீர் எனும் காலச்சக்கரம்.

கி.மு மூன்றாம் நூற்றாண்டு காலம் அது. அபிசரிஸ் என்ற இந்(து)திய மன்னர் காஷ்மீரை ஆண்டுவந்தார். அன்றைய காஷ்மீர் மக்கள் நிச்சயம் காஷ்மீர் பல மதங்களுக்கான தளமாக அமையும் என்பதனை நினைத்திருக்க வாய்ப்பில்லை.

அபிசரிஸ் காலத்தில் இந்து மதமே பிரதானமாக இருந்தது. பின்பு மௌரியப் பேரரசரான ‘அசோகர்’ காலத்தில் ‘காஷ்மீர்’ அவர் ஆண்ட பகுதியில் ஒரு அங்கமானது‌. அதன் பின் தான்‌ அங்கு பௌத்த மதம் பரவ ஆரம்பித்தது. பௌத்த மதமிருப்பினும் பல இந்து கோவில்களும் ஸ்ரீநகரில் எழுப்பப்பட்டது. இதன் பின் கவனிக்கத்தக்க மன்னர் குசான் பேரரசின் ‘கனிஷ்கர்’ ஆவார். அவர் காஷ்மீரை கைப்பற்றி அங்கே கனிஷ்கபுரம் என்ற நகரையும் உருவாக்கினார். பின் காஷ்மீரில் நான்காவது பௌத்த அவையை நடத்தினார். அதில் பௌத்த பிரிவில் ஒன்றான மகாயானம் தோற்றுவித்தார்.

அதைத் தொடர்ந்து திபெத், சீனா வரை வென்று அங்கே பௌத்த மதத்தைப் பரப்பினார்கள் குசானர்கள். அந்த காலகட்டத்தில் சீனா மத்தியில் காஷ்மீரின் பெருமை நன்றாக வளர்ந்தது. அதன்பின்‌ இந்து குஷ் மலைத்தொடர்களைக் கடந்த டோரமனா தலைமையிலான ஹெப்தலைட்டுகள் காஷ்மீர் உட்பட மேற்கு இந்தியாவை வென்றனர். இவரது மகன் மய்ரகுலா, வட இந்தியாவை வெல்ல முயன்று, மகதம் மற்றும் மால்வா மன்னர்களிடம் தோல்வியுற்றார்.

அதன் பின் பௌத்த துறவியால் அவமதிக்கப்பட்ட மய்ரகுலா காஷ்மீரிலுள்ள பௌத்த கோவில்கள் மீதும் பௌத்தர்கள் மீதும் கடும் தாக்குதல் நிகழ்த்தினார். இதற்கு முன்பு வரையில் பெரிய அளவில் மத தாக்குதலைக் காணாத காஷ்மீர் மத வேறுபாட்டில் சிக்கியது. அதன்பின் 9-ஆம் நூற்றாண்டில் வசுகுப்தர் என்பவரால் சைவ நூல்களும் தத்துவங்களும் எழ தொடங்கி ‘காஷ்மீர் சைவம்’ மக்கள் மத்தியில் சிறப்பாக பரவியிருந்தது. காஷ்மீர் மட்டுமின்றி தென் இந்தியாவிலும் ‘காஷீமீர் சைவம்’ பரவியதாக அறியப்படுகிறது.

பின், லெகரா பேரரசு காஷ்மீரை 11-ஆம் நூற்றாண்டு தொடங்கி 14-ஆம் நூற்றாண்டு வரை ஆண்டது. அந்த காலகட்டத்தில் ஊழல், அடக்குமுறை, வரிவிதிப்பு, குறுநில மன்னர்களின் எழுச்சி, உட்பகை போர்கள் போன்றவற்றின் காரணத்தால் காஷ்மீர் நிலை தடுமாறியது. இந்த தடுமாற்றம் வேறு ஆதிக்க சக்திக்கு வழி வகுத்தது. ஆம், துருக்கிய மங்கோலிய படைகள் காஷ்மீரைக் கொடூரமாக தாக்கின. அதில் தோற்ற லெகரா பேரரசின் கடைசி மன்னனான சுகதேவன் காஷ்மீரை விட்டு தப்பிச் சென்றான். அதன் பின் திபெத்திய பௌத்தரான ‘ரின்சானா’ காஷ்மீர் அரசராக உருவானார். இந்த காலகட்டத்தில் காஷ்மீரைச் சுற்றி இஸ்லாமியர்களின் ஆதிக்கமாகவே இருந்தது.

இந்நிலையில் ரின்சானாவும் இஸ்லாமியத்தை ஏற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். குறிப்பாக ரின்சானாவின் அமைச்சரான ஷா மிர் என்பவரால் இத்தகைய நிலைக்கு ஆளானார். இருப்பினும் ரின்சானாவின் ஆட்சியைக் கவிழ்த்த ஷா மிர், 1339ஆம் ஆண்டு காஷ்மீரில் ‘ஷா மிர்’ பேரரசைத் தோற்றுவித்தார். அதன் முன்பு வரை இந்து, பௌத்தம், சைவம் என்றிருந்த காஷ்மீர் இஸ்லாம் மதத்தையும் ஏற்றது. ஷா மிர் வம்சத்தில் ஒரு சிலர் மற்ற சமயத்தை ஏற்றாலும் மற்றவர்கள் ஏற்கவில்லை. குறிப்பாக சுல்தான் ‘சிக்கந்தர்’ ஒரு படி மேலே போய் மற்ற சமய கோவில்களை அழிக்கத் தொடங்கினான். சிலைகளை அழித்ததற்காகப் பட்டங்கள் பெற்றான். மதமாற்றம் செய்தான். திலகமிடுவதற்கு தடைவிதித்தான். இஸ்லாம் அல்லாதவர்களுக்கு வரி விதித்தான். இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் காஷ்மீரை விட்டு சென்றவர்கள் பலர்.

இவனுக்கு பின் ஆட்சி செய்த சுல்தான் ‘செயின் உல் அபிடின்’ பாரசீகத்திலிருந்து நெசவு கலைஞர்களைக் குடியேற்றினார். இதன்பின் மரகலைகள், நெசவு கலைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் பூர்வீக காஷ்மீர் மக்கள் பலர் வெளியேறி, மத்திய ஆசியாவிலிருந்து பலர் காஷ்மீரில் குடியேறிவிட்டனர்.(இதனால் தான் தற்போதுள்ள காஷ்மீர்வாசிகள் பாரசீகர்களைப் போல் இருக்கின்றனர்). அவர்களுக்கு வழங்கிய முக்கியத்துவம் பூர்வீக காஷ்மீர்வாசிகளுக்கு வழங்கவில்லை. காலப்போக்கில் இந்து சமய தத்துவங்கள், சமஸ்கிருதம், ஆகியவை அழிந்து பாரசீக மொழியே காஷ்மீரின் ஆட்சி மொழியாக மாறியது. இதன்பின் முகலாயப் பேரரசின் ஆட்சி, நாதிர் ஷாவின் நாசம், ஆப்கானிய துரானி பேரரசின் ஆளுமை என 19-ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை காஷ்மீர் சுழன்றது.

1819-யில் ஆப்கானிய துரானிப் பேரரசை தோற்கடித்து ரஞ்சித் சிங் தலைமையிலான சீக்கிய படை காஷ்மீரைக் கைப்பற்றியது. சீக்கியர்கள் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு சிக்கல்களே மிச்சம். பசுவதை தடுக்கப்பட்டும், பள்ளிவாசல்கள் அடைக்கப்பட்டும், ஒரு கட்டத்தில் வறுமைக்கே தள்ளப்பட்டுவிட்டனர்‌. பின் சில சலுகைகள், கடன்கள் வழங்கி மீதமிருந்த மக்களைக் காப்பாற்றிய சீக்கிய அரசுக்கு ஆங்கிலேயர்கள் மூலம் அடுத்த பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையில் ரஞ்சித் சிங் படை தளபதியான ‘குலாப் சிங்’ ஜம்மு அரசனானார். ஆங்கிலேய – சீக்கியப் போரில் ரஞ்சித் சிங் தோற்கடிக்கப்பட்டு காஷ்மீரை ஆங்கிலேயர் வசம் விட, குலாப் சிங் ஆங்கிலேயர்களிடமிருந்து காஷ்மீரை வாங்கி விட்டார். குலாப் சிங் வம்சம் தான் சுதந்திரம் வரை, இல்லை அதன் பின்னும் காஷ்மீர் மற்றும் ஜம்மு பகுதியை ஆண்டனர்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க குலாப் சிங் யின் வம்சாவழி ‘ஹரி சிங்’ தயாராக இல்லையென்றாலும் பாக்கிஸ்தானின் அத்துமீறல்கள், காஷ்மீரைத் தற்காலிகமாக இந்தியாவுடன் இணைக்க வேண்டிய சூழலை ஏற்படுத்திவிட்டது. அது பின்னால் பல சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டு இந்தியாவில் ஒரு மாநிலமாக திகழ்ந்தது. ஆனால் காஷ்மீரில் மேற்கு மற்றும் வடக்கில் சில பகுதியை பாக்கிஸ்தான் கைப்பற்றிவிட்டது. பின் 1962’யில் நடந்த இந்திய – சீனப் போரில் கிழக்கிலுள்ள சில பகுதியை சீனா கைப்பற்றியது. பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீரில் சில சதுர கிலோமீட்டர் இடத்தை சீனாவுக்கு தானம் வேறு வழங்கிவிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தான் தீவிரவாதிகளின் தலைநகராக செயல்பட்டு வருகிறது. தீவிரவாதம் காஷ்மீரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதென்பதில் ஐயமில்லை.

பொதுவாக டெல்லி வரலாற்றைப் போல் காஷ்மீரின் வரலாறு பெரும்பாலும் தலை தூக்குவதில்லை. அதுவே பலருக்கு காஷ்மீரில் காலம் காலமாக நடந்துவரும் இனம், மதம் மற்றும் மொழி மீது நடத்தப்படும் போர் பற்றிய புரிதல் இல்லாமல் போனதற்கு காரணம். இந்த வரலாற்றைத் தெரிந்தவர்கள் பலர் காஷ்மீரின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது என்ற வாதத்தை கையில் எடுப்பதாக தெரியவில்லை. ஏனெனில் கொஞ்சம் அசந்தாலும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் காஷ்மீரைக் கைப்பற்ற நாலு திசைகளிலிருந்தும் முயற்சி செய்யும். செய்துக் கொண்டு தான் இருக்கிறது. அதை தடுக்க இந்தியா செய்யும் முயற்சிகள் லெகரா பேரரசு செய்யாத முயற்சிகளாக இருக்க வேண்டும். இல்லையெனில் தற்போதுள்ள காஷ்மீர்வாசிகள் வெளியேற்றப்படும் நிலை உருவாகிவிடும்.

காஷ்மீரில் முன்பிருந்த உருது மற்றும் ஆங்கில மொழியுடன் காஷ்மீரி, டோங்கிரி மற்றும் ஹிந்தி மொழியையும் அலுவல் மொழியாக அறிவித்துள்ள செய்தியை மொழி கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் பணிக்கான ஒரு சான்றாக தான் நான் பார்க்கிறேன். ‘Article 370 இருந்த வரையில் இந்திய அரசுக்கு அங்குள்ள குழப்பவாதிகளைத் துடைத்தெறிவது சுலபமாகயில்லை. அதை நீக்கிய பின் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் தூக்கமேயில்லை.’


Share it if you like it