தங்களது இயக்கத்தினரை என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்து வருவதால், பழிவாங்கும் நடவடிக்கையாக எஸ் எஸ் ஐ வில்சனை சுட்டுக்கொன்றதாக கைதான இரு தீவிரவாதிகளும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குமரி மாவட்டம் களியக்காவிளை எஸ் எஸ் ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கர்நாடாகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் தவுபீக், அப்துல் சமீம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை 5.30 மணிக்கு களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர்.
எஸ்பி ஸ்ரீநாத் தலமையிலான தனிப்படையினர், கியூ பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்பு படையினர் ஆகியோர் விடிய விடிய விசாரித்தனர். அப்போது இருவரும் தமிழ்நாடு நேஷனல் லீக் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்றும், ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்துடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்
மேலும் தங்களது இயக்கத்தினர் மற்றும் அல்உம்மா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளை சேர்ந்த பலரையும் தேசிய புலனாய்வு துறை கைது செய்து வருவதால், எஸ் எஸ் ஐ யை சுட்டுகொன்றோம் என்று கூறியுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்குப்பின் இரு தீவிரவாதிகளும் தக்கலை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். நண்பகலில் அவர்களை நீதிபதி முன் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர். பின்னர் முறைப்படி காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கைதான இரு தீவிரவாதிகளிடம் தக்கலை காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு, 21 கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
காவல் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தக்கலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாதாரண உடையில் 50 போலீசாரும், சீருடை அணிந்த 25 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபினவ், விசாரணை அதிகாரியான எஸ்.பி. ஸ்ரீநாத் ஆகியோர் தக்கலை காவல் நிலையத்தில் வைத்து தீவிரவாதிகளிடம் நேரடி விசாரணை நடத்தினார்கள்.
அதன்பின்பு குழித்துறை அரசு மருத்துவர்கள் காவல் நிலையம் வந்து இரு தீவிரவாதிகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து குழித்துறை நீதிபதி முன் இருவரையும் ஆஜர் படுத்த போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்