எது சொர்க்கம்!

எது சொர்க்கம்!

Share it if you like it

சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார். பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டு போய் வைத்தார். இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம்.

ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதேபோல சொர்க்கத்திலும் கொண்டுபோய் வைத்தார். நரக வாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்துவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, ஒரு சிறிதும் செலவாகமலே, ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் சாப்பிட்டு  முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.

நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள்? என்று கேட்டார். அவர்கள் சொன்னார்கள். நான் எடுத்து அவருக்கு ஊட்டினேன். அவர் எடுத்து எனக்கு ஊட்டினார். இவ்வாறு எல்லோரும் மற்றவர்களுக்கு ஊட்டினோம். அனைவரும் உண்டோம். அண்டாவும் காலி, எங்கள் பசியும் போச்சு என்றனர். நரகவாசிகள் தங்களுக்கு இந்த தந்திரம் தெரியாமல் போயிற்றே என்று நினைத்து வெட்கப்பட்டனர்.

இந்தக் கதை என்ன சொல்கிறது? எல்லோரும் மற்றவர்களுக்கு உதவும் நிலை வந்தால் ஒருவரும் துன்பபடமாட்டார். சொர்க்கம் என்பதே எல்லாரும் எல்லார்க்கும் உதவிசெய்து வாழும் இடந்தான். இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க. தன்னைப் பற்றியே கவலைப்படுகிறவர்கள் நிறைந்த இடமே நரகம்…

தட்டச்சு: கதிர் கலியமூர்த்தி

 

 


Share it if you like it