தமிழகத்தின் கோவையைப் போலவே, கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டம் நந்திமலை அடிவாரத்தில் 112 அடி ஆதியோகி சிலை நேற்று திறக்கப்பட்டிருக்கிறது.
1994-ம் ஆண்டு கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் திறக்கப்பட்டது. இங்கு 112 அடி உயரத்திலான மார்பளவு ஆதியோகி சிலை நிறுவப்பட்டு 2017-ம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலை என்ற கின்னஸ் சாதனையை இச்சிலை பெற்றது. இதன் பிறகு, ஈஷா யோகா மையம் சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்றது. கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய சுற்றுலா மையமாக உருவெடுத்தது இந்த ஆதியோகி சிலைதான்.
இதையடுத்து, இதேபோன்றதொரு ஆதியோகி சிலையை கர்நாடகாவில் நிறுவ விரும்பினார் சத்குரு ஜக்கி வாசுதேவ். இதைத் தொடர்ந்து சிலை தயாராகி வந்த நிலையில், கர்நாடாக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டம் நந்தி மலை அடிவாரத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. மகர சங்கராந்தி நாளான நேற்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த ஆதியோகி சிலையை திறந்து வைத்தார். சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோக மையத்தின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இந்த ஆதியோகி சிலை திறப்பு விழா நடைபெற்றது.
ஆதியோகி சிலை திறப்புக்கு முன்னதாக, அங்கு யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்தார். தொடர்ந்து, ஆதியோகி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும் ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் சத்குருவின் மகள் ராதே ஜக்கியின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், கேரளாவின் தொன்மமான தேயம் நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றன. இந்த ஆதியோகி சிலை இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சிலையும் உலக சாதனை படைத்திருக்கிறது.