பொங்கல் இந்திய பண்டிகை இல்லை. அது தமிழர்களின் பண்டிகை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக சாணக்கியா யூடியூப் சேனல் செய்தி வெளியிட்டிருப்பதாக பொய்யான போஸ்டர் கார்டை உ.பி.ஸ்கள் வைரலாக்கி வருகின்றனர். ஆனால், இது பொய்யான கார்டு, இதை சாணக்கிய சேனல் வெளியிடவில்லை என்று அந்த சேனல் தெரிவித்து உ.பி.ஸ்களுக்கு குட்டு வைத்திருக்கிறது.
பாரத பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் பேசாத மற்றும் சொல்லாதவற்றை எல்லாம் சொல்லியதாகவும், பேசியதாகவும் பொய் செய்தி வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் தி.மு.க.வினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும். இது பொய் என்பது பேக்ட் செக் மூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது மத்திய நிதியமைச்சர் சொன்னதாக பொய்யான போஸ்டர் கார்டை வைரலாக்கி வருகிறார்கள் தி.மு.க.வினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும்.
விஷயம் இதுதான்…
நாடு முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) கிளார்க் பணிக்கான தேர்வு ஜனவரி 15-ம் தேதி நடைபெறும் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், ஜனவரி 15-ம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகை திருநாள். ஆகவே, தேர்வு தேதியை மாற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன், கடந்த 13-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.பி.ஐ. வங்கி எதிரே தர்ணா போராட்டம் மேற்கொண்டார். இதையடுத்து, அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் வங்கி அதிகாரிகள். ஆனால், இந்தக் கூட்டத்தில் உயரதிகாரிகள் கலந்துகொள்ளாததாகக் கூறி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் வெங்கடேசன். மறுநாள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டது தனிக்கதை.
அதாவது, எஸ்.பி.ஐ. வங்கி கிளார்க் பணிக்கான தேர்வு ஜனவரி 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது கடந்தாண்டு செப்டம்பர் மாதம். தமிழகத்தில் ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே, உண்மையிலேயே தமிழகத்தின் மீதும் தமிழகத்திலிருந்து வங்கித் தேர்வு எழுதும் தேர்வர்களின் மீதும் சு.வெங்கடேசனுக்கு அக்கறை இருந்திருந்தால், அப்போதே எதிர்ப்புத் தெரிவிக்கலாம். அப்படிச் செய்திருந்தால் தேர்வு தேதியை மாற்றி இருக்கலாம், மாற்றி இருப்பார்கள். ஆனால், தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக, தான் நல்ல பெயர் வாங்க வேண்டும். அதற்காக சுயலாப அரசியல் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் அப்போது விட்டுவிட்டு, இப்போது வந்து போராட்டம் என்கிற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் சு.வெங்கடேசன். ஆனால், இதற்கு அதிகாரிகள் மசியவில்லை.
இந்த சூழலில்தான், தனது இயலாமையை வேறு வகையில் திசை திருப்பி விட்டிருக்கிறார் சு.வெங்கடேசன். அதாவது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது போல, பொய்யான ஒரு போஸ்டர் கார்டை தயாரித்து, அதை தங்களது கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினரை தூண்டிவிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக்கச் செய்திருக்கிறார். அந்த போஸ்டர் கார்டு சாணக்கியா யூடியூப் சேனல் பெயரில் வெளியாகி இருக்கிறது. அக்கார்டில் ஹிந்தி மொழி பேசுபவர்களுடன் ஒப்பிட்டால் தமிழர்கள் சிறுபான்மையினர். மேலும், பொங்கல் தமிழர் பண்டிகை மட்டுமே. இந்தியப் பண்டிகை இல்லை. ஆகவே, சிறுபான்மையின மக்களின் பண்டிகைக்காக, இந்தியா முழுவதும் நடைபெறும் வேறு தேதிக்கு தள்ள வைக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கார்டு சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சாணக்கியா யூடியூப் சேனல் நிர்வாகம், அது எங்களது கார்டு கிடையாது. அப்படியொரு கார்டை நாங்கள் வெளியிடவே இல்லை. மேலும், அது ஒரு பொய்யான செய்தி, நிர்மலா சீதாராமன் அப்படி எதுவும் சொல்லவில்லை. ஆகவே, அந்த கார்டை டெலிட் செய்யுங்கள் என்று சொல்லி தி.மு.க. உ.பி.ஸ்களுக்கு குட்டு வைத்திருக்கிறது. ஆக, நாட்டில் பொய்யை பரப்பி மக்களை திசை திருப்பும் வேலையையே தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள் என்பது இதன் மூலம் நிரூபணாகி இருக்கிறது.