இராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய மியான்மர் படகு தேர்!

இராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய மியான்மர் படகு தேர்!

Share it if you like it

ஆந்திராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தங்க நிறத்திலான தேர் கரை ஒதுங்கியது போல, தற்போது ராமேஸ்வரத்தில் மியான்மர் நாட்டின் தேர் ஒன்று கரை ஒதுங்கி இருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் மரத்தினால் செய்யப்பட்ட தேர் போன்ற படகு ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து மீனவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, தங்கச்சிமடம் காவல்துறையினரும், கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினரும், உளவுத்துறை அதிகாரிகளும் படகை ஆய்வு செய்தனர். அந்த தேர் படகில் பருமிய‌ மொழியில் எழுதப்பட்டிருந்தது. மேலும், அத்தேரில் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை, புத்தர் படங்கள் மற்றும் சில சிறு சிலைகள், பூஜை பொருட்கள் மற்றும் அரிசி, காலணிகள், விசிறிகள் இருந்தன. மேலும், அந்த புத்தர் சிலையை பக்தர் ஒருவர் வணங்குவது போன்ற நிலையிலான காட்சியும் இருந்தது.

அதாவது, புத்தமத திருவிழாவின்போது மியான்மர் போன்ற நாடுகளில், இதுபோன்ற தெப்ப தேர் படகுகளை தயாரித்து கடலில் விடுவது வழக்கம் எனகிறார்கள். இப்படி கடலில் விட்ட தெப்ப தேர் படகுகளில் சில இதற்கு முன்பு, கடல் நீரோட்டம் காரணமாகவும், காற்றின் வேகம் காரணமாகவும் ஆந்திராவிலும், நாகப்பட்டினத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த தெப்பத் தேரும் மியான்மர் நாட்டில் இருந்து நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது. கரை ஒதுங்கிய இந்த தெப்பத் தேர் படகை அப்பகுதி மீனவர்களும், பொதுமக்களும், வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்வதோடு, தேர் படகை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.


Share it if you like it