உலகின் மிகவும் பழமையான தமிழ்மொழி நம் நாட்டில்தான் இருக்கிறது என்கிற கர்வம் நமக்கு வேண்டும் என்று பாரத பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி, பயனுள்ள அறிவுரைகளை வழங்கும் வகையில், ஆண்டுதோறும் ‘பரிட்சா பே சர்ச்சா’ (தேர்வும் தெளிவும்) என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், 6-வது ‘பரிட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சி டெல்லி டால்கட்டோரா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். நாடு முழுவதிலும் இருந்து காணொலி வாயிலாகவும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மொத்தம் 38.80 லட்சம் பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், அதிகபட்சமாக தமிழக மாணவ, மாணவிகள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதை வரவேற்கும் விதமாக தமிழகத்தில் இருந்து முதல் கேள்வி எழுப்பப்பட்டது. மதுரை கேந்திரிய வித்யாலயா எண்-2 பள்ளி மாணவி அஸ்வினி, காணொலி வாயிலாக பிரதமரிடம் முதல் கேள்வியை முன்வைத்தார்.
பின்னர், அனைத்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்து பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியாவில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. இதை நாம் கர்வத்துடனே கூறலாம். இவை நமது பாரம்பரியம், கலாச்சாரத்துடன் இணைந்தவை. ஒரு மொழி என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து பலம் பெறுகிறது. புதிய மொழியை கற்பதால், அதன் பின்னணியில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றை அறிந்துகொள்ள முடியும். எனவே, சுமையாக கருதாமல் புதிதாக மொழிகளை கற்க வேண்டும். உலகின் மிகவும் பழமையான மொழி இந்தியாவில் பேசப்படுகிறது. அது நமது தமிழ் மொழிதான். இவ்வளவு பெரியசொத்து, கவுரவம் நமது நாட்டில் இருக்கிறது. இதில் நமக்கு கர்வம் இருக்க வேண்டாமா? இதன் காரணமாகவே, உலகில் உள்ள அனைத்து மொழிகளையும்விட பழமையானது நம் நாட்டின் தமிழ் மொழி என்பதை எடுத்துரைக்கும் நோக்கில், ஐ.நா. சபையில் வேண்டுமென்றே சில வார்த்தைகளை தமிழில் பேசினேன். நம் தாய்மொழியைத் தவிர, இந்தியாவின் இதர மொழிகளில் சில வார்த்தைகளாவது கற்பது அவசியம். மொழியை கற்கும் திறன், குழந்தைகளிடம் அதிகம். எனவே, மொழிகள் கற்பதை சிறுவயதில் இருந்தே ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.
இதனிடையே, அகமதாபாத், சண்டிகரைச் சேர்ந்த மாணவர்கள், ‘‘எதிர் தரப்பில் இருந்து வரும் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?’’ என்று அரசியல் தொடர்பான கேள்வியை கேட்டனர். இதற்கு பிரதமர் சிரித்துக் கொண்டே, ‘‘பாடத் திட்டத்துக்கு வெளியில் இருந்து (அவுட் ஆஃப் சிலபஸ்) கேள்வி கேட்கிறீர்களே, இது முறையா?’’ என்று கேட்டுவிட்டு, ‘‘குடும்பத்தினர், நண்பர்கள் விமர்சிப்பதை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உங்கள் நன்மைக்காகவே விமர்சனம் மூலம் ஆலோசனைகளை கூறுகின்றனர். அதேநேரம், மற்றவர்கள் விமர்சிப்பதை கவனத்தில் கொள்ளக் கூடாது. ஜனநாயகத்தில் விமர்சனம் அவசியம். விமர்சனத்தால் அழுக்குகள் மறைந்து தூய்மையாகும்’’ என்று கூறினார்.