மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த சிவலிங்கத்தை மொகலாய படைத்தளபதி மாலிக்கபூர் இடித்ததையும், இது மக்கள் பார்வையில் படும்படி பொற்றாமரை குளத்தின் சுவர் அருகே வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், அதை யாரும் பார்ப்பதே இல்லை என்றும் ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியின் பேசுகையில், “டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியாக இருந்தவன் மாலிக்கபூர். இவன் ஒரு திருநங்கை என்று கூறப்படுவதுண்டு. இவன்தான் இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஹிந்துக் கோயில்களை சீரழித்தவன். அந்தவகையில், தமிழகத்தில் காஞ்சிபுரம் கோயில்கள், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், திருவண்ணாலை அருணாச்சலேஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ஆகியவற்றையும் பலத்த சேதத்துக்கு உள்ளாக்கியவன். தமிழகத்தைப் பொறுத்தவரை கோயில்கள் மிகவும் பிரமாண்டமாக இருந்ததால் இடிக்க முடியவில்லை. இதனால், மூல விக்கிரக மூர்த்திகளை சேதப்படுத்தி, கோயிலை இழுத்து மூடினார்.
இவன் ஒருமுறை மதுரைக்கு படையெடுத்து வந்து கொண்டிருந்தான். இதை கேள்விப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோயிலை காப்பாற்ற வேண்டும். சுவாமி மீது ஒரு அயோக்கியன் கை வைத்து விடக் கூடாது என்று சபதம் செய்து கொண்டார்கள். உடனே, சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கர்ப்பகிரக்கத்திற்குள்ளேயே ஒரு கல் திரை எழுப்பினார்கள். வெளியே இன்னொரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப் போலவே நகை, விளக்கு, மாலை எல்லாம் ஏற்பாடு செய்தார்கள். மதுரை வந்த மாலிக்கபூர், ஆயிரக்கணக்கானோரை கொன்றான். போலி விக்கிரகத்தை உண்மை என்று நினைத்து இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றான்.
இதன் பிறகு 48 ஆண்டுகள் கோயிலில் பூஜை இல்லை. பின்னர், விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்கள் துவம்சம் செய்த எல்லா கோயில்களையும் மறுசீரமைப்பு செய்தார்கள். அப்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்த சிவலிங்கத்திற்கு பதில் வேறொரு சிலையை செய்ய சொல்ல எண்ணினார்கள். அப்போது, வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்கிரகமெல்லாம் வேண்டாம். இது மூல விக்கிரகமில்லை. சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்று சொல்லி நடந்ததை சொன்னார். உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால், உள்ளே 48 மூல விக்கிரம் இருந்தது.
பின்னர், அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழாக் கோலம் பூண்டது. இந்த அதிசயத்தை காண மீண்டும் புதுப்பொலிவுடன் கோயில் திறக்கப்பட்டது. அதேசமயம், இடிக்கப்பட்ட சிவலிங்கம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அப்போது, அந்த அருங்காட்சியகத்துக்கு எம்.ஜி.ஆர். வந்தார். அந்த சிவலிங்கத்தை பார்த்துவிட்டு, இது என்ன என்று கேட்டார். அங்கிருந்தவர்கள் விவரத்தை கூறியதும், அடேங்கப்பா எவ்வளவு பெரிய வரலாது இது. இந்த சிவலிங்கம் யாருக்கும் தெரியாமல் அருங்காட்சியகத்தில் இருப்பதா? உடனடியாக இதை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலேயே பக்தர்கள் பார்வையில் படும்படியாக வைத்து, அறிவிப்பு பலகையும் வையுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து, மாலிக்கபூரால் உடைக்கப்பட்ட சிவலிங்கம், மதுரை மீனாட்சி அம்மனை கோயில் பொற்றாமரை குளத்தின் சுவரின் அருகே வைக்கப்பட்டு, அதுகுறித்த விவரமும் ஒரு அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், கோயிலுக்கு வரும் இதை யாருமே பார்ப்பதில்லை. நான் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம், சிறிது நேரம் நின்று கவனிப்பேன். யாருமே பார்க்க மாட்டார்கள். எனக்கு மிகவும் வேதனையாக இருக்கும். ஆகவே, இனிமேல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும்போது, தவறாமல் அந்த சிவலிங்கத்தை பார்வையிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.