சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிவப்புக் கம்பளம் விரித்து ஸ்டாலின் மரக்கன்று நட்ட போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாள் விழா மார்ச் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மரக்கன்று நட்டார் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில்தான் மரக்கன்று நடும் இடத்தைச் சுற்றி சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. இதில், நின்று கொண்டு மரக்கன்றை நட்டார் ஸ்டாலின். இதுதான் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. காலில் செருப்பு அணிந்திருக்கும் நிலையில், சிவப்புக் கம்பளம் விரிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார்கள் நெட்டிசன்கள்.
ஏற்கெனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் கரும்புத் தோட்டத்தை பார்வையிடச் சென்றார். அப்போது, கரும்புத் தோட்டத்திற்குள் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நெல் வயலை பார்வையிடச் சென்றபோதும், பாலத்தை பார்வையிடச் சென்றபோதும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து நெட்டிசன்கள் ஸ்டாலினை விமர்சித்து வருகின்றனர்.