எடப்பாடிக்கு எதிராக வீடியோ: சுளுக்கெடுத்த ர.ர.க்கள்!

எடப்பாடிக்கு எதிராக வீடியோ: சுளுக்கெடுத்த ர.ர.க்கள்!

Share it if you like it

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வீடியோ வெளியிட்ட நபரை, மதுரை விமான நிலையத்தில் சுளுக்கெடுத்திருக்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டது. ஓ.பி.எஸ். தலைமையில் ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். அப்போது, இ.பி.எஸ். அணிக்கு தலைமை தாங்கியவர் சசிகலா. கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். பின்னர், இரு அணிகளும் இணைந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த சூழலில், பொதுச்செயலாளர் பதவி விவகாரத்தில் ஓ.பி.எஸ்.ஸுக்கும், இ.பி.எஸ்.ஸுக்கும் மோதல் ஏற்படவே சமீபத்தில் மீண்டும் பிரிந்து விட்டார்கள்.

இந்த நிலையில், சிவகங்கையில் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்த இ.பி.எஸ்., விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய வளாகத்திற்கு வெளியே வரும் பேருந்தில் ஏறி வந்து கொண்டிருந்தார். அவருடன் சிங்கம்புணரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும் பயணம் செய்தார். அப்போது, தனது முகநூல் பக்கத்தில் எடப்பாடி பயணிப்பதாக கூறி நேரலை செய்து கொண்டிருந்த ராஜேஷ், திடீரென “எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம். சின்னமாவிற்கு துரோகத்தை பண்ணியவர். 10.5% இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராகக் கொடுத்தவர்” என்று கூறினார். உடனே, எடப்பாடியாரின் பாதுகாவலர், ராஜேஷின் செல்போனை பறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார்.

இதனிடையே, எடப்பாடியாரிடம் ஒரு நபர் வம்பிழுத்த தகவல் வெளியே காத்துக் கொண்டிருந்த அ.தி.மு.க.வினருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ர.ர.க்கள், விமான நிலைய வளாகத்திலேயே ராஜேஷை சுளுக்கெடுத்து விட்டார்கள். பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து, ராஜேஷை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ராஜேஷ் சிங்கப்பூரில் கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து வருவதும், விடுமுறையில் ஊர் வந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Share it if you like it