ஸ்டாலினுக்கு மூளையாக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இருந்து வருகிறார் என்று தன்னையும் அறியாமல் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு அதிகம் இருப்பதாக விமர்சனங்கள் றெக்கை கட்டி வருகின்றனர். உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்போதும் சரி, சமீபத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டபோதும் சரி, பின்னணியில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருப்பதாகக் கூறப்பட்டது. அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், இதுகுறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, எனக்கு எதுவும் தெரியாது, நீங்கள் சித்தரஞ்சன் சாலைக்கு சென்றுதான் கேட்க வேண்டும் என்று கூறினார்.
பொதுவாக, துரைமுருகனை பொறுத்தவரை, குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, முதல்வரிடம் கேளுங்கள், தலைவரிடம் கேளுங்கள் என்றுதான் கூறுவார். ஆனால், இந்த முறை சித்தரஞ்சன் சாலை என்று முதல்வர் ஸ்டாலின் வீடு அமைந்திருக்கும் சாலையை குறிப்பிட்டது அமைச்சரவை மாற்றத்தில் குடும்பத்தினர் தலையீடு இருப்பதை மறைமுகமாக உணர்த்தியது. அதேபோல, தற்போது அமைச்சர் பொன்முடியும், ஆட்சியிலும், அரசியலிலும் ஸ்டாலின் குடும்பத்தின் தலையீடு இருப்பதை பொதுவெளியில் ஓப்பனாகவே போட்டு உடைத்திருக்கிறார்.
அதாவது, சாந்தகுமாரி எழுதிய ‘கதை சொல்லும் குறள்’ என்கிற நூல் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்தது. இப்புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வெளியிட, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, விழாவில் பேசிய பொன்முடி, திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் தி.மு.க. அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டார். பின்னர், துர்கா ஸ்டாலினை புகழ்ந்து பேசிய அவர், “மனைவி அமைவதெல்லாம் வரம். முதல்வரின் அரசியலுக்கு ஆலோசனை சொல்லும் திறமைமிக்கவர்” என்று தன்னையும் அறியாமல் உண்மையோ போட்டு உடைத்திருக்கிறார்.