கோவையில் தனியாக வாக்கிங் சென்ற பெண்ணிடம், நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த மர்ம நபர்கள், பட்டப்பகலில் செயின் பறிக்க முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை பீளமேடு ஹட்கோ காலணி பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. 38 வயதான இவர், தினமும் காலையில் தனது கணவருடன் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த சூழலில், நேற்று கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் காலை 6.30 மணியளவில் கவுசல்யா மட்டும் தனியாக வாக்கிங் சென்றிருக்கிறார். ஜி.வி. ரெசிடென்ஸி அருகே நடந்து வந்தபோது, பின்னால் நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று வந்தது. திடீரென காரில் இருந்த மர்ம நபர் ஒருவர், கவுசல்யா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்.
கவுசல்யா சுதாரித்து செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இதனால், அவர் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்ம நபர்கள் விட்டு விட்டுச் சென்று விட்டனர். நல்ல வேளையாக கார் சக்கரத்தில் சிக்காமல் கவுசல்யா உயிர் தப்பினார். இக்காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த பலரும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை விமர்சித்து வருகின்றனர்.