துரைமுருகன் மீது சமூக ஆர்வலர் ஆளுநரிடம் புகார் அளித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. மூத்த தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். இவர், எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்களை நக்கலாக கிண்டல் செய்ய கூடியவர். இவரது, பேச்சு சில நேரங்களில் தி.மு.க. தலைவர்களையும் பதம் பார்த்து விடுவது உண்டு. அந்த வகையில், துரைமுருகன் பேச்சு பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அதாவது, கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துரைமுருகன். கல்லூரி மாணவிகள் முகம் சுளிக்கும் வகையில், பேசியிருந்தார். இவரின் கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், பெரம்பூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் திரு. கல்யாண சுந்தரம் என்பவர், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது :
அரசு வழங்கும் 1,000 ரூபாயை கல்லூரி மாணவியர், பெண்கள் தங்கள் முன்னேற்றத்துக்காக பயன்படுத்துவர். ஆனால், அரசில் மூத்த அமைச்சராக இருக்கும் துரைமுருகன் இதுகுறித்த பேச்சு, தரக்குறைவாக உள்ளது. சமூகத்தில் பெண்களுக்கான மரியாதையை குலைக்கும் வகையிலும், அவர்களை அவதூறு செய்யும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே, இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, அவர் மீது சட்ட ரீதியாக வழக்கு பதியவும், தொடர் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இந்த புகாரை, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய மகளிர் ஆணையத்துக்கும் அனுப்பி, துரைமுருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.