புதிய பார்லிமென்ட் கட்டடம் சவப்பெட்டியைப் போல இருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வரும் நிலையில், இதைவிட பார்லிமென்டை யாரும் அவமரியாதை செய்ய முடியாது. அரசியல் கட்சிளின் மலிவு சிந்தனையையே இது காட்டுகிறது என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்திருக்கிறது.
தலைநகர் டெல்லியில் நேற்று புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்பட்டது. பாரத பிரதமர் மோடி இக்கட்டடத்தை திறந்து வைத்து, தமிழகத்தின் பெருமையை போற்றும் வகையில், திருவாவடுதுறை ஆதீனம் கொடுத்த செங்கோலையும் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார். இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான பல்வேறு பதிவுகளும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சூழலில், புதிய பார்லிமென்ட் கட்டடம் சவப்பெட்டியைப் போல இருப்பதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் விமர்சனம் செய்திருக்கிறது. இது தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனாதா தளம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சவப்பெட்டி மற்றும் புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் புகைப்படத்தை பகிர்ந்து ‘என்ன இது’ என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, புதிய பார்லிமென்ட் கட்டடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷில் மோடி கூறுகையில், புதிய பார்லிமென்ட் கட்டடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட நபர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருப்பதோடு, சவப்பெட்டிதான் உங்கள் எதிர்காலம் என்றால், புதிய பார்லிமென்ட் கட்டடம் இந்தியாவின் எதிர்காலம் என்று கூறியிருக்கிறார். மேலும், இதைவிட துரதிருஷ்டவசமானது என்ன? அவமரியாதை என்ன? அரசியல் கட்சியின் மலிவு சிந்தனையையே இது காட்டுகிறது. பார்லிமென்ட்டை நிரந்தரமாக புறக்கணிக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் முடிவு செய்திருக்கிறதா? அக்கட்சியின் எம்.பி.க்கள் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இருந்து ராஜினாமா செய்வார்களா?” என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், “2024-ல் நாட்டு மக்கள் உங்களை இதே சவப்பெட்டியில் புதைப்பார்கள். ஜனநாயகத்தின் புதிய கோயிலுக்குள் நுழைய வாய்ப்பளிக்க மாட்டார்கள். பார்லிமென்ட் கட்டடம் நாட்டிற்குச் சொந்தமானது” என்று கூறியிருக்கிறார். இதனிடையே, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து அப்பதிவை நீக்கிய அக்கட்சியின் மூத்த தலைவர் சக்தி சிங் யாதவ், “எங்கள் சவப்பெட்டி ட்வீட் ஜனநாயகம் புதைக்கப்படுவதை பிரதிபலிக்கிறது. பார்லிமென்ட் ஜனநாயகத்தின் கோயில். அது உரையாடலுக்கான இடம். ஆகவே, இதை நாடு ஏற்காது. இது அரசியலமைப்பு மற்றும் பாரம்பரியத்தை மீறும் செயலாகும்” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.