கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஃப்ளெக்ஸ் பேனரால் 23 வயது உடைய அப்பாவி இளம் பெண் சுபஸ்ரீ இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு, முழு பொறுப்பு ஏற்க வேண்டியது அ.தி.மு.க. அரசுதான் என அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பச்சையாக அரசியல் செய்த நிகழ்வை யாரும் மறந்திருக்க முடியாது. தவிர, சுபஸ்ரீ இல்லத்திற்கு நேரில் சென்று அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறியது மட்டுமில்லாமல் மாநிலத்தில் “பேனர் கலாச்சாரத்தை” முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து தனது கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து இருந்தார்.
எதிர்க்கட்சியாக இருக்கும் வரை தான் நாங்கள் வாக்குறுதி கொடுப்போம். ஆளும் கட்சியாக மாறிய பின்பு எது குறித்தும் எங்களுக்கு கவலையில்லை என்பது போல் இன்றுவரை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உட்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தெக்கலூர் பகுதியில், விளம்பரப் பலகை சரிந்து 3 பேர் உயிரிழந்தனர். விளம்பரப் பலகை அமைக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது. ஆளும் கட்சியாக மாறிய பின்பு அதனை காற்றில் பறக்க விடுவது இதுதான் தி.மு.க.வின் அரசியல் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.