காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கம் செய்திருக்கிறார்.
சென்னையை அடுத்த கோவலத்தில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இலக்கு 2024: தெற்கில் வெல்லப்போவது யார்? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார் ;
“எனக்கு முன்னால் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்கூர், கட்சித் தலைவரை ’ஹை கமாண்ட்’ என்று குறிப்பிட்டார். தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் நற்பெயர் இல்லாததற்குக் காரணம் காங்கிரஸ் ஏற்படுத்திவைத்துள்ள இதுபோன்ற கலாச்சாரம்தான். ஆனால் நான் மோடிஜியை செயல் வீரர் (கார்யகர்த்தா) என்று அழைக்க முடியும்.
ராகுல் காந்திக்கு வேலையில்லை என்பதால் நாட்டில் உள்ள இளைஞர்கள் எல்லோருமே வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாகக் கூறுவது தவறு.
நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் பாஜக தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டது. புதுச்சேரியில் நாங்கள் ஆட்சியில் கூட்டணியில் உள்ளோம். வரும் 2024 தேர்தலில் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு நல்ல திருப்புமுனை ஏற்படும். அந்த வெற்றிக்கு மோடி முக்கியப் பங்கு வகிப்பார்.
2014-க்கு முன்னர் தென்னிந்தியாவின் அரசியல் வேறாக இருந்தது. தமிழகத்தில் பாஜக சற்று தாமதமாகவே தடம் பதித்தது. வாஜ்பாய் காலத்தில் தமிழகத்தில் பாஜக ஓர் ஏற்றம் கண்டது என்றால், 2014-க்குப் பின்னர் பாஜக தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. இந்த முறை பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களும், கலாச்சார மீட்டெடுப்பு முயற்சிகளும் சேர்ந்தே தெற்கில் பலன் தரப் போகின்றன” என்று அண்ணாமலை பேசினார்.