திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிகளிலும் புரையோடிப் போயிருக்கிறது லஞ்சம். டி.சி., மார்க் ஷீட் வழங்குவதற்கு மாணவரிடம் 500 ரூபாய் கேட்டு தலைமை ஆசிரியர் அடம் பிடிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பாக, அரசு பணிகளுக்கான டெண்டர் எடுக்கும் கான்ட்ராக்டர்களிடம் 30 சதவிகிதம் வரை கமிஷன் வாங்கப்படுகிறது. இதனால், பணிகள் தரமற்றவையாக இருக்கின்றன. அதேபோல, அரசுத் துறைகளிலும் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்கிற நிலைதான் இருந்து வருகிறது. சமீபத்தில்கூட, தனது கணவரின் இறப்புச் சான்றிதழ் வாங்க லஞ்சம் கொடுப்பதற்காக, பெண் ஒருவர் தாலியை கழற்றிக் கொண்டு வந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், கல்வித்துறையிலும் லஞ்சம் புரையோடிப் போயிருப்பது அம்பலமாகி இருக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது கோவில்பட்டி. இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 2020-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 4 பேர், ஐ.டி.ஐ.யில் சேர்வதற்காக டி.சி. மற்றும் மார்க் ஷீட் வாங்குவதற்காக சென்றிருக்கிறார்கள். அந்த மாணவர்களிடம் டி.சி. மற்றும் மார்க் ஷீட் வழங்குவதற்கு தலா 500 ரூபாய் பணம் கேட்டிருக்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.
மாணவர்கள் தங்களிடம் பணம் இல்லை என்று கூறவே, ஏ4 பேப்பர் பண்டல் வாங்கி வரும்படி கூறியிருக்கிறார். இல்லாவிட்டால், மார்க் ஷீட்டில் ஃபெயில் மதிப்பெண் போட்டுத் தருவதாக மிரட்டி இருக்கிறார். இதை வீடியோவாக பதிவு செய்த மாணவர்கள், அதை அப்படியே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி, திராவிட மாடல் ஆட்சியில் கல்வித்துறையிலும் லஞ்சம் புரையோடிப் போயிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.