நீங்கள் மேலே பார்க்கும் புகைப்படம் தொலைக்காட்சி தொடரிலோ திரைப்படத்திலோ வரும் காட்சி அல்ல . நிஜ வாழ்க்கையில் எதிர்பாராத துயரத்தில் தன் மகனை இழந்த தாயின் குமுறல். தேசம் காக்க தன் மகன் உயிரிழந்த காரணத்தால் அவனின் மரணத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக கதறியப்படியே அவனுக்கு இறுதியாக வீரவணக்கம் செலுத்தும் ஒரு பாரதத் தாயின் கண்ணீர் குமுறல் தான் இந்த புகைப்படம்.
சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒரு தேர்தல் வேட்டையின் போது பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் மேஜர் ஆசிஷ் தோண்சக் மற்றும் மன்பிரீத் சிங் என்ற இரண்டு ராணுவ அதிகாரிகள் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். அனந்தநாக் மாவட்டத்தை சார்ந்த ஒரு காவல்துறை உயர் அதிகாரியும் இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்திருக்கிறார். இதை தவிர இராணுவத்தின் பாதுகாப்பு பணியில் இருந்த கெனட் என்ற நாயும் உயிரிழந்தது. தனது காப்பாளனை நோக்கி வந்த துப்பாக்கி தோட்டா கெணட் தனது காப்பாளனை பாதுகாக்க வேண்டி குறுக்கே பாய்ந்து தன் உயிரை இழந்தது குறிப்பிடத்தக்கது
உயிரிழந்த ராணுவ அதிகாரி மேஜர் ஆஷிஷ் தோண் சக் மற்றும் மன்பிரீத் சிங் இருவரின் புகழுடல் ஹரியானா மாநிலம் பானிபட் அருகே இருக்கும் அவரது சொந்த ஊருக்கு வெள்ளிக்கிழமை காலை கொண்டுவரப்பட்டது. மேஜர் ஆசிஷ் தோண்சக் கிற்கு மனைவி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் மூன்று சகோதரிகள் என்று கூட்டுக் குடும்பம் சார்ந்தவர். தனது குடும்பத்தில் தனது பாட்டனார் தந்தையார் அடுத்து தான் என்று மூன்று தலைமுறைகளாக ராணுவத்தில் பணியாற்றும் மன்பிரீத் சிங் கிற்கு ஒரு மனைவி இரண்டு வயதில் பெண் குழந்தை ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு. அவரின் தாயாரோடு குடும்பம் வசித்து வருகிறது. மன்பிரீத் சிங் உடல் மொகாலியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது.
இதில் மேஜர் ஆஷிக் பானிபட்டில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் . இந்த அக்டோபரில் விடுமுறையில் வந்து வேறு ஒரு வசதியான வீட்டிற்கு மாற வேண்டும் என்ற திட்டத்தோடு விடுமுறைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர். எதிர்பாராத விதமாக பயங்கரவாதிகளுடன் நேரிட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியாகி அவர் உடல் வீடு வந்து சேர்ந்திருக்கிறது. இந்த இரண்டு ராணுவ வீரர்களின் உடல்களும் ராணுவ வாகனத்தில் கொண்டுவரப்படும் போது இரண்டு மாவீரர்களையும் பெற்ற தாயார்கள் மகனின் வருகைக்காக வாயிலில் காத்திருந்து தன் மகன்களின் புகழ் உடலை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
ஆஷிஷ் தோன்சக் மண் ப்ரீத் சிங் போல எண்ணற்ற இளைஞர்கள் வாழ்வில் வசந்தங்களை மகிழ்ச்சியோடு கடந்து போக வேண்டிய வயதில் இந்த தேசம் பாதுகாக்க வேண்டி வீரமரணம் தழுவி யிருக்கிறார்கள். இதில் ராணுவம் காவல்துறை உளவுப் பிரிவு தீயணைப்பு இதர பாதுகாப்பு படைகள் மீட்பு படைகள் என்று ஒட்டுமொத்தமாக சுதந்திர பாரதத்தின் மண்ணையும் மக்களையும் காக்க உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை நீங்கள் கணக்கில் வைத்தால் நிச்சயம் அது லட்சத்தை தொடும்.
ஆஷிஷ் – மன் பரீத் போன்ற இளைஞர்களுக்கு நல்ல உயர் கல்வியும் தொழில்நுட்ப அறிவும் இருந்ததால் மட்டுமே இராணுவத்தின் நுண் னறிவு தேர்வுகள் சோதனைகளை கடந்து மேஜர் துணை மேஜர் என்று உயர் பதவிகளுக்கு வர முடிந்தது. இந்த தகுதி திறமைகளை வைத்து அவர்கள் ஏதேனும் பன்னாட்டு கம்பெனிகளில் நுழைந்திருந்தால் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை தேடி இருந்தால் பல லட்சங்களில் ஊதியம் ஆடம்பரமான வசதி வாய்ப்புகளோடு வாரம் இரண்டு நாள் விடுமுறையோடு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஏதேனும் வெளிநாடுகளில் வேலை தேடிப் போயிருந்தாலும் என் ஆர் ஐ என்ற அந்தஸ்தோடு பெரும் செல்வம் செல்வாக்கோடு குடும்பத்தோடு வெளிநாடு வாசிகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கலாம். சொந்த ஊரில் வேறு ஏதேனும் நல்ல வேலை நிம்மதியான வாழ்க்கை வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால் கூட அழகான வருமானம் மகிழ்ச்சியான வாழ்க்கை என்று நிம்மதியான ஒரு வாழ்க்கையை நிச்சயம் வாழ்ந்திருக்க முடியும்.
ஆனால் அத்தனையும் ஒதுக்கிவிட்டு எந்நேரமும் உயிருக்கு அச்சுறுத்தல் வரலாம் என்ற நிலையில் இராணுவத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். அதிலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத காஷ்மீர் மாநிலத்தில் தான் பணி என்று தெரிந்த பிறகு கூட அதை மறுக்காமல் அங்கு போய் பணியாற்றி இருக்கிறார்கள். தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டையில் முன்னேறிச் சென்றவர்கள் உயிர் போகும் நிலையில் கூட அவர்களது கடமையை சரியாக செய்து விட்டு தான் மரணித்திருக்கிறார்கள். ஆமாம் அந்த தேடுதல் வேட்டையில் மூன்று அதிகாரிகளை இழந்தி ருக்கிறோம். வாயில்லா ஜீவனாக ஒரு நாயை இழந்திருக்கிறோம். ஆனால் இதற்குக் காரணமான பயங்கரவாதிகள் ஒருவரும் உயிரோடு இல்லை . அத்தனை பேரையும் சரித்து விட்டே மண்ணில் சாய்ந்திருக்கிறார்கள் பாரதத்தில் இந்த மாவீரர்கள்.
உள்ளூரில் சாதாரண அரசு பணியில் இருப்பவர்கள் கூட லஞ்சம் வாங்குவதை அவர்களின் உரிமையாக நினைப்பவர்கள் உண்டு. எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் சாதிக்க முடியாது என்ற நிலையும் சில இடங்களில் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் உயர்ந்த ராணுவ பதவி உச்சபட்ச பாதுகாப்பு பணியில் இருக்கும் கடமை பொறுப்பு உணர்ந்து தேசத்தின் மாண்பு என்று வரும்போது மற்ற அனைத்தையும் புறம் தள்ளி மரணத்தை எதிர்நோக்கி பயங்கரவாதிகளை தேடி அவர்களைக் கொன்றழித்து தானும் அழிகிறார்கள் எனில் இது போன்ற வீரர்கள் இவர்களின் தியாகம் காட்டிலும் இந்த தேசத்தில் உயர்ந்ததாக வேறென்ன இருக்க முடியும் ? .
கொஞ்சம் வளைந்து கொடுத்து போயிருந்தால் வெளிநாட்டு கரன்சிகளில் புரண்டு இருக்க முடியும். மாடமாளிகைகள் ஆடம்பர வாகனங்கள் பணம் கொழிக்கும் பொருளாதார மூலங்கள் என்று பல தலைமுறைகளுக்கு சேர்த்து வைத்திருக்க முடியும். ஒரு சிறு தகவலை பரிமாறி இருந்தால் கூட எதிரி நாடுகள் கொட்டிக் கொடுத்திருக்கும். இதெல்லாம் இவர்களுக்கு தெரியும். ஆனால் அத்தனை வாய்ப்புகளையும் உதாசீனம் செய்து நான் ஏற்றுக் கொண்டது என் தேசம் காக்கும் பணி. அதில் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை அறிவேன். ஆனாலும் என் நேரமும் மரணத்திற்கு சித்தமாகவே இருக்கிறோம் . இலக்கு ஒன்றே . மரணம் எதிர்ப்படும் போதும் கூடுமானவரையில் எதிரிகளை சம்ஹாரம் செய்து விட வேண்டும். மரணிப்பதற்கு முன் எதிரிகளை மிச்சம் இல்லாமல் ஒழித்து விட்டு மரணிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கை தவிர வேறொன்றும் இல்லாமல் உயிரை துச்சம் ஆக்கி எதிரிகளை நோக்கி முன்னேறிச் செல்லும் இது போன்ற மாவீரர்களின் வீரமும் தியாகமும் தான் என்றளவும் பாரதத்தை பாதுகாத்து வருகிறது.
ஒற்றைப் பிள்ளை பெற்றவளாயினும் 10 பிள்ளைகளை பெற்றவள் ஆயினும் தாய்க்கு தங்களின் பிள்ளைகள் எப்போதும் விலை மதிப்பில்லாத செல்வங்கள் . வெயிலின் சூடும் பனியின் தாக்கமும் கூட குழந்தைகளை பாதிக்க கூடாது என்று முந்தானைகளில் பொத்தி வளர்க்கும் தாயின் கண் முன்னே தன் மகன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு சமமாக வீடு வந்து சேர்வதும் அந்த மரணத்தை எதிர்நோக்கி அவன் தானே முன்வந்து களமாடி மரணித்திருக்கிறான் என்பதும் எப்படிப்பட்ட கொடூரமான வேதனை ?
அந்த தாய்களுக்கு நன்கு தெரியும் தன் மகன் ராணுவத்தில் போய் சேருகிறான். உயிருக்கு ஆபத்தான பணி என் நேரமும் அச்சுறுத்தல் வரலாம். அவன் வீட்டிற்கு உயிரோடு வருவானா அல்லது பிணமாக வருவானா அல்லது பிணம் கூட கிடைக்காமல் போகும் நிலை வருமா என்று யாருக்கும் தெரியாது. இதையெல்லாம் தெரிந்து தான் இதை எல்லாவற்றிற்கும் தயாராகத்தான் ஒவ்வொரு தாயும் தன் மகனை ராணுவத்திற்கு வழி அனுப்பி வைக்கிறாள். அவர்களின் மனதில் தன் மகன் வாழ்ந்தால் எதிரிகளை வெற்றி கொண்டு தேசத்தை பாதுகாத்து வரப் போகிறான். ஒருவேளை தன் மகன் விழுந்தாலும் எதிரிகளை வீழ்த்தி தேசத்தை பாதுகாக்கவே விழப் போகிறான். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது இந்த தேசத்திற்காகவே அப்படிப்பட்ட ஒரு மகனை பெற்றதற்கு நாம் பெருமைப்பட வேண்டும் என்ற உணர்வோடு தான் அவள் தனது துயரங்களை அடக்கிக் கொண்டு ஒவ்வொரு முறையும் அவனது மகனுக்கு விடை கொடுத்து வழி அனுப்பி வைத்திருப்பாள்.
வெளியூரில் கல்வி வேலை வாய்ப்பு உத்தியோகம் காரணமாக தொழில் வியாபாரம் காரணமாக குடும்பமாக இடம்பெயர்ந்திருக்கும் தனது மகன்கள் பேரப்பிள்ளைகளைக் காண ஆவலோடு போகும் தாய்கள் உண்டு. தீபாவளி பொங்கலுக்கு தன் மகன் வருவான் என்றால் வாசலை பார்த்து காத்திருக்கும் தாய்கள் உண்டு. எதிர்பார்த்த நேரத்திற்கு சில நாழிகைகள் தாமதம் ஆனாலே அடுத்த கணம் அலைபேசியில் அழைத்த எங்கிருக்கிறாய் எப்போது வருவாய் என்று பரிதவிக்கும் தாய்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தாயிடம் இதோ உன் மகனின் பிணம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்று விட்டார்கள் பிணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கொண்டு வந்து கொடுத்தால் அவளின் மனம் எப்படி பதைக்கும்?
ஆனால் ஒரு தாயாக தன் மகனை இழந்து துயரத்தில் கதறிய போதும் தேசத்தின் மாண்பு காக்க வீர மரணம் தழுவிய ஒரு மாவீரனை பெற்ற பெரும் தாயாக அவள் தனது மகனுக்கு வீர வணக்கம் செலுத்தி அவனது சவத்தைப் பெற்றுக் கொள்வாள் எனில் இவளைக் காட்டிலும் மேலான தாய் இந்த உலகத்தில் இருக்க முடியுமா . இவளை விடவும் மேலான வீரமும் தியாகமும் கொண்ட தாய்கள் இந்த பாரதத்திற்கு வெளியே எங்கேயும் இருக்க முடியுமா .
என் மகன் இந்த தேசத்திற்காக உயிரை விட்டிருக்கிறான். தேசத்தின் மாண்பிற்காக வீர மரணத்தை தழுவி இருக்கிறான் என்பது உயர்ந்த பெருமை தான் ஒரு தாய்க்கு. அவ்வகையில் தேசம் அவளை வணங்கும். பெருமிதமாக உயர்த்திப் பிடிக்கும். அதில் அவளுக்கு கௌரவம் தான் . ஆனால் எல்லாம் முடிந்து எல்லோரும் அகன்ற பிறகு நான்கு சுவருக்குள் பூட்டிய அறையில் இனி எப்போதும் என் மகன் வரப் போவதில்லை எனக்காக என் மகன் இனி வரமாட்டான். அவனின் குடும்பமும் நானும் இனி அவன் இல்லாமல் தான் வாழப் போகிறோம் என்று நினைக்கும் போது அவளின் இருதயம் வெடித்து சிதறுமே அதற்கு எத்தனை ரப்பேலும் அப்பாச்சியும் ஒன்று கூடி வந்தால் கூட பதில் தர முடியுமா?.
ஒரு கணவனாக தகப்பனாக சகோதரனாக மகனாக நண்பனாக அவன் பல பேருக்கு நண்பனாக உறவாக வாழ்ந்திருக்கிறார். இவை அனைத்தையும் இரண்டாம் பட்சமாக தள்ளிவிட்டு அவன் ஏற்றுக்கொண்ட கடமைக்காக இந்த தேசத்தின் மகனாக தேசம் காக்க இன்று அவன் தன்னை அர்ப்பணித்து போய்விட்டான். நாளை அவனது இடத்திற்கு வேறு ஒரு அதிகாரியை ராணுவ தலைமை நியமித்து விடும் . அந்த மாவீரனும் மரணத்தை எந்நேரமும் எதிர்கொள்ள சித்தமாக களத்தில் போராட போய்விடுவான். ஆனால் குடும்பத்தின் ஆணிவேராக இருந்த ஒரு ஆண்மகனை இழந்த அந்த குடும்பத்தில் மகனை இழந்த தாய்க்கும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கும் தனது கணவனை வாழ்வை தன் மங்கல அடையாளங்கள் அனைத்தையும் இழந்த அந்த இளம் வயது பெண்ணிற்கும் எந்தப் பிருத்வியும் அக்னியும் பதில் கொடுக்க முடியும்? எத்தனை கோடிகள் கொடுத்து ஈடு செய்ய முடியும். என்று யோசியுங்கள்.
என் நேரமும் மரணத்திற்கு தயாராக களமாட துடிக்கும் ராணுவ வீரர்கள் மாவீரர்கள் என்றால் அந்த ராணுவ வீரர்கள் மன நிம்மதியோடு தங்களின் களப்பணிகளை செய்வதற்கு தங்களின் எதிர்பார்ப்பு அச்சம் பயம் என்ற அனைத்தையும் மனதுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு சிரித்த முகத்தோடு வழி அனுப்பி வைத்துவிட்டு ஒரு ஒரு நிமிடமும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் இது போன்ற குடும்பங்கள் மகா தியாக குடும்பங்கள் என்று போற்றுவதற்கு நூறு சதம் தகுதியான குடும்பங்கள்.
ராணுவம் என்றால் உயிருக்கு ஆபத்து என்று தெரியும் தானே? தெரிந்து தானே பணிக்கு போகிறீர்கள். பல லட்சங்கள் பணம் வரும் என்று தானே போனார்கள்? . பிறகு ஏன் இந்த மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும்? என்று நா கூசாமல் பேசுபவர்களுக்கு வாயும் வலிக்காது. மனமும் வலிக்காது. காரணம் அவர்களுக்கு மனிதாபிமானமும் இருக்காது . தான் வாழும் தேசம் பாதுகாப்பாக இருப்பதால்தான் தன்னால் இவ்வளவு சுதந்திரமாக பேச முடிகிறது. இந்த பாதுகாப்பும் சுதந்திரமும் தனக்கு கிடைத்த காரணமான இருப்பவர்கள் கூட இதுபோன்ற உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கும் ராணுவ வீரர்களால் தான் என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாத மனித பதர்கள் அவை.
இது போன்ற பதர்கள் ஏராளம் நாட்டில் உண்டு என்று தெரிந்தும் தன் மரணமும் தன் இறப்பும் கூட மலிவான அரசியல் செய்யப்படும் என்று உணர்ந்தும் கூட எது எப்படி இருந்தாலும் என் தேசத்தை பாதுகாப்பது என் கடமை என்று தாமாக முன்வந்து முன்னேறிச் சென்று மரணத்தை எதிர்கொள்ளும் இந்த மாவீரர்கள் பாரதத்தின் பொக்கிஷங்கள். மரணிக்கும் வேளையில் கூட எதிரிகளை சம்ஹாரம் செய்து விட்டு தான் மண்ணில் சாய வேண்டும் என்ற உறுதியோடு போராடி வீர மரணத்தை தழுவும் இது போன்ற வீரர்களின் வீரமும் தியாகமும் இருக்கும் வரையில் பாரதத்தின் எதிரிகள் இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட ஆக்கிரமிக்கவோ அபகரிக்கவோ முடியாது என்பதே இந்த மாவீரர்களின் வீரமரணம் எதிரிகளுக்கு சொல்லும் பாடம்.
ஜெய் ஜவான்
ஜெய் ஹிந்த்.