படலை வீடு வயலுக்கு அரணாக இருந்த கவசம். படலை தொறந்து கெடந்தா ஊர் மாடு அத்தனையும் உள்ள வந்து நஞ்சைய மேஞ்சிட்டு போயிறுது.. படலையை தொறந்து போட்டுட்டு போயிடாதே இந்த வார்த்தைகள் கடந்த தலைமுறை வரை பரிச்சயமானது. இந்த தலைமுறைக்கு தெரியாதது.
அது என்ன படலை.. புடலை கொடி தெரியும்.. கடலைச்செடி தெரியும்.. சுடலை சாமி தெரியும்.. படலை அப்படின்னா என்ன? வேலியில் மூங்கில் கழைகளால் செய்யப்பட்ட தட்டி தான் படலை படலை படலை ன்னா யாருக்கும் தெரியாது. தட்டி என்றால் சிலருக்கு தெரியும்.
வழக்கம் போல் தெரியாததை சொல்லி தரும் கூகுள் ஆண்டியிடம் கேட்டு பார்ப்போம் என்று தேடி பார்க்கவும். படலை என்ற அந்த வார்த்தை பழந்தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட சுத்தமான பழமையான அழகிய தமிழ் வார்த்தை என புலப்பட்டதோடு அதனை பற்றி கிடைத்த தகவல்கள் நிறையவே சுவாரசியத்தை தந்தன..
வாருங்கள் படலையை பற்றி பார்ப்போம்:
படலை என்பது சுற்றி வேலியால் அல்லது சுவரால் அரண் அமைத்து திறந்து மூடும் வகையில் மனிதர்கள் நுழைவு வாயிலாக பயன்படுத்தும் அமைப்பை படலை என அழைத்திருக்கின்றனர்.கிட்டத்தட்ட கதவின் மூதாதையர் அல்லது கதவின் முந்தைய வடிவம் படல் அல்லது படலை ஆகும். மூங்கிலின் சிறு சிறு கிளைகளை வெட்டியெடுத்து நன்றாகச் சீர் செய்து நுனிப்பகுதியை கூர்மையாக்கி ஒன்றாகப் பிணைத்து கட்டி முற்காலங்களில் வீட்டை மூடி வைப்பர்.
இதைப் ‘படல்’என்பார்கள். குடிசை வீட்டில் ‘படல்’ வேலியாக இருக்கும். இன்றைக்கும் சில கிராமத்து வீடுகளில் படல்கள் இருக்கின்றன.பனையோலையிலும் கூட படலை செய்வது உண்டு..
ஆடு, மாடுகளை மந்தையாகவோ அல்லது கிடையாக இருத்தி வைத்து இருக்கும் இடங்களில் நாய், நரி போன்ற மிருகங்கள் நுழைவதை தடுக்க முள்ளாலாகிய ‘படல்’ பயன்படுத்தப்படும்.இந்த படல் எனும் சொல்‘படலை’ எனும் சொல்லிலிருந்து வந்துள்ளது.மனித சமூகம் கற்காலத்தில் வேட்டை தொழில் செய்து காடுகளில் நாடோடியாய் வாழ்ந்து வந்த காலத்திற்குப் பின்னர் ஓரிடத்தில் நிலையாக நிலைத்திருக்க கருதியது.வெயில், மழை ஆகிய இயற்கை சூழலிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டி தங்குவதற்கு ஏற்ற இடத்தை உருவாக்கி இருக்கின்றது.
தம் நிலப்பகுதியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தங்கும் இடத்தை சமவெளிப்பகுதியில் ஆதி மனிதர்கள் ஏற்படுத்தி இருந்திருக்கின்றார்கள்.
மணலாலும், பனை ஓலைகளாலும் தங்குவதற்கான குச்சு போன்ற இடத்தை ஏற்படுத்திய பின்னர் வீட்டினுள் உள்ளே வந்து செல்லும் வகையில் திறந்து மூடும் படியான மறைப்பினை பயன்படுத்தி வந்துள்ளனர் பண்டை காலத்தமிழர்.அந்த வேலி நுழைவு அமைப்பை ‘படலை’என குறித்திருக்கின்றனர்.
இந்த படலை ஆனது வீட்டினுள் உள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியா வண்ணம் இலை தழைகளையுள்ள சிறு சிறு கிளைகளைக் கொண்டு பிணைக்கப்பட்டு தட்டையாக அமைக்கப் பட்டிருக்கின்றது.
‘படலை முன்றில் சிறுதினை உணங்கல்’ (புறம் 319: 5).
உணங்கல் என்றால் உலர வைப்பது என்ற அர்த்தம். ஆடு மாடுகள் வந்து தினையை தின்பதை தடுக்க படலை கட்டி வைத்து தினையை உலர வைத்ததை புறநானூற்று 319. 5 ஆவது பாடல் குறிப்பிடுவதன் மூலம் படலை என்ற வார்த்தையின் பழமையை அறிந்து கொள்ள முடிந்தது.
உடும்புஇழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார் (புறம் 325: 6-8)
என்ற புறநானூற்று பாடலிலும் வீட்டு வாயிலில் திறந்து மூடத்தக்க அமைப்பிலிருந்த படலை பயன்படுத்தி (கதவை) வந்ததை குறிப்பிடுகின்றது.
இன்றும் தென் தமிழகத்தில் அதிலும் குறிப்பாக நெல்லை, குமரி மாவட்டங்களில் வீதியிலிருந்து வீட்டுக்குள் செல்ல உபயோகிக்கும் வாயிலை “படலை” என்பார்கள்.முந்தைய தலைமுறை வரை கட்டிய வீடுகளில் வீதிகளில் செல்லும் வழிப்போக்கர்கள் சற்று ஆற, அமர இருந்து விட்டுச் செல்லும் நோக்கத்தில் வீடுகளின் வாயில்களின் இரு புறம் திண்ணைகளும் வெயில் படாதவாறு அமர்வதற்காக மேலே கூரையும் அமைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட ஆர்ச் போன்ற அமைப்பில் காணப்படும் இந்த அமைப்பு “சங்கப்படலை” என அழைக்கப்பட்டு வந்து உள்ளது.
ஆரம்ப காலங்களில் தென்னையோலையில் பின்னிய கிடுகுகள் ஓலை தட்டிகள் கொண்டு அமைக்கப்பட்ட சங்கப் படலையானது காலப்போக்கில் ஓடுகள், சீமை சாந்து என்ற சிமெண்ட் கொண்டு அமைக்கப்பட்டது. சங்கப் படலை அமைப்பில் ஆலயங்களுக்கு கால்நடையாக செல்லும் புனித யாத்ரீகர்கள் ஆன சங்கத்தார், சமயத்தார் தாக நிவர்த்தி செய்யும் வகையில் மண் பானையில் தண்ணீரும், அருகே குவளையையும் வைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.
போகும் போது டோரை லாக் பண்ணிட்டு போங்க!! திருட்டு பயலுவ வந்துறானுவ! என சொல்வதை கேட்டு ..”நீ சொல்வது சரியாக படலை” என கதவை சாத்தாமல் செல்லுவதில்லை யாரும்.. டோரை சாத்தி செல்வதால் பண்டைய காலம் போல் பரந்த மனம் சுருங்கி குறுகிய மனப்பான்மையோடு தற்போது மக்கள் வாழ்வதற்கு …டோரை சாத்தி, டோர் முகப்பில் CCTV கேமரா பொருத்திய பின்னும் வீட்டு முன் வைத்திருக்கும் பைக்கை திருடும் அளவிற்கு திருட்டு மனப்பான்மை பொருந்திய நபர்களும் காரணமாக இருக்கலாம்..
திருட்டு தனத்தால் நம்மை விட்டு காணாமல் போனது வீட்டு முகப்பு படலையும், அழகான தமிழ் வார்த்தையும்… நவீனம் என்ற பெயரில் நம் தலைமுறை இழந்த இயற்கை விஷயத்தில் இந்த படலையும் ஒன்று. அருகிப் போனது படலை மட்டும் அல்ல நம் பாரம்பரிய வாழ்வியலும் தான்.
சுரேஷ் அய்யாப்பழம்