அமீர்கான் நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம், ஹிந்துக்களின் எதிர்ப்பால் படுதோல்வியை சந்திருப்பதின் மூலம், பாலிவுட் நடிகர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டிருக்கிறது. அதேசமயம், படத்தை பார்க்க வரும்படி ஹிந்துக்களிடம் கெஞ்சி வருகிறார் படத்தின் கதாநாயகி கரீனா கபூர்.
1994-ம் ஆண்டு ஹாலிவுட் திரையுலகில் வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ என்கிற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்தான் இந்த படம். இது ஹாலிவுட்டில் ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த ரீமேக் படத்தில் ஹிந்து கடவுளை இழிவுபடுத்துவது போல பல்வேறு காட்சிகளை அமைத்திருக்கிறார் அமீர்கான். இப்படத்தில் மட்டுமல்ல அமீர்கானின் பெரும்பாலான படங்களில் ஹிந்து தெய்வங்களையும், சாமியார்களையும் அவமதிப்பது போல காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.
மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார் அமீர்கான். குறிப்பாக, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை பற்றி வாய் திறக்காத அமீர்கான், அதன் பிறகு நடந்த குஜராத் கலவரத்தை கண்டித்து பேசினார். குறிப்பாக, தற்போதைய பிரதமரும், அப்போதைய குஜராத் முதல்வருமான மோடி, சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம்சாட்டினார். தவிர, இந்தியாவில் மத சகிப்பின்மை அதிகரித்து வருவதாகவும் கூறினார். இதுபோன்ற சம்பவங்களால் அமீர்கான் மீது ஹிந்துக்கள் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், லால் சிங் சத்தா படத்திலும் ஹிந்து தெய்வங்களை அவமதிப்பது போல காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. இதையடுத்து, அமீர்கானுக்கு எதிராக ஹிந்துக்களும் களமிறங்கினர். #பாய்காட் அமீர்கான், #பாய்காட் லால் சிங் சத்தா என்று ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங் செய்தனர். இது வைரலான நிலையில், தானும் தேசியப் பற்று உடையவன்தான். ஆகவே, எனது படத்தை புறக்கணிக்காதீர்கள் என்று ஹிந்துக்களிடம் மன்றாடினார். அதேசமயம், இப்படத்தின் கதாநாயகியான கரீனா கபூரோ, நீங்கள் படத்தை பார்த்தால் பாருங்கள், பார்க்கா விட்டால் விடுங்கள். உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று திமிராகப் பேசினார்.
இந்த சூழலில், லால் சிங் சத்தா திரைப்படமும் வெளியானது. எதிர்பார்த்தபடியே இப்படத்தை ஹிந்துக்கள் புறக்கணிக்கத் தொடங்கினர். மேலும், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், லால் சிங் சத்தா திரைப்படம் வெளியான தியேட்டர்களுக்கு வெளியே நின்று, அப்படத்தை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனால், படத்தை பார்க்க வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். இதன் காரணமாக படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. இதனால், மிரண்டுபோன கரீனா கபூர், தயவு செய்து படத்தை பார்க்க வாருங்கள் என்று அமீர்கான் பாணியில் ஹிந்துக்களிடம் கெஞ்சி வருகிறார்.