சமீப காலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து இயக்கங்களும் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளது. அம்மனுவில் கூறியதாவது.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வி.களத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் வகையறா கோயில் வாகனங்கள் வைக்கப்பட்டிருந்த மண்டபம் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் 23.9.2021 அன்று இஸ்லாமிய நபர் ஒருவன் காலை நேரத்தில் அதே மண்டபத்தில் பூட்டை உடைத்து உள்ளே உள்ள சிலைகள் மற்றும் தேரை எரிக்க முயற்சி செய்துள்ளான். அருகே இருந்த இந்துக்கள் அவனை கையும், களவுமாக பிடித்து, காவல் துறையில் ஒப்படைத்துள்ளனர். (அவர்களிடம் இதற்கு முன் தேர் எரிக்கப்பட்ட சம்பவத்தை தானே செய்ததாகவும், இனியும் செய்ய உள்ளதாகவும் அடாவடியாக கூறியுள்ளான். இதை சமூக வலை தளங்களில் நேரடியாக பார்க்க முடிந்தது) உடனடியாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த இரு சம்பவங்களுக்கு இடையில் 02.6.2021 அன்று வேப்பூர் ஒன்றியம் எழுழூர் கிராமத்தில் அய்யனார் கோயிலில் உள்ள சிலைகள் உடைக்கப்பட்டன. இச்சம்பவத்திலும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான மலை மீது அமைந்துள்ள பெரியசாமி, செல்லியம்மன் மற்றும் சப்த கன்னிமார் கோயில் சிலைகள் கொடூரமாக தகர்கப்பட்டுள்ளன.
இதனை அடுத்து 9.10.2021 அன்று சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியாண்டவர் கோயிலிலும் சிலைகள் உடைக்கப்பட்டன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.
வி. களத்தூர் கோயில் சிலைகள் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை மனநிலை தவறியவராக காட்டும் முயற்சி நடைபெறுவதாக அறிகிறோம்.
சிறுவாச்சூர் பெரியசாமி கோயிலில் நடந்த சிலை உடைப்பு சம்பவம் தனி நபர் செய்திருக்க சாத்தியமில்லை. உடனடியாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்து முன்னணி இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த கோயில்கள் தாக்கப்படுவதற்கு முன்னதாக இந்து இயக்க பொறுப்பாளர்களின் வியாபார நிறுவனம் ஒன்றும் தொழிற்சாலை ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தீக்கிரையான சம்பவம் மூன்றும் ஒன்று போல் அமைந்துள்ளன. இந்த அனைத்து செயல்களும் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக இந்து அமைப்பினர் கருதுகிறோம். இது போன்ற மத நல்லிணக்கத்தை சீர் குலைக்க கூடிய சம்பவங்களை காவல்துறை துரிதமாக செயல்பட்டு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்போது மட்டுமே நமது மாவட்டத்தில் உண்மையான அமைதி திரும்பும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
உடனடி நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அல்லது தாமதிக்கும் பட்சத்தில் பொதுமக்களின் கோபத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தான் பொறுப்பாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இந்து இயக்கங்கள் தெரிவித்து உள்ளது.