வேலூர் அருகே பாம்பு கடித்து உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் பாதி வழியிலேயே இறக்கி விட்டதால், கண்ணீரோடு 10 கிலோ மீட்டர் தூரம் பெற்றோர் கையால் தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறி, அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலை கிராமத்திற்கு உட்பட்டது அத்திமரத்து கொல்லை. இக்கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளிகளான விஜி – பிரியா தம்பதியின் ஒன்றரை வயது மகள் தனுஷ்கா. கடந்த 26-ம் தேதி இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்த தனுஷ்காவை நல்ல பாம்பு கடித்து விட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர், குழந்தையை அணைக்கட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அந்தோ பரிதாபம் மலை கிராமத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால், குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நீண்ட நேரமாகி விட்டது. இதன் காரணமாக, பாதி வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டது. தகவலறிந்த அணைக்கட்டு போலீஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால், சாலை வசதி இல்லாததை சுட்டிக்காட்டி, குழந்தையின் சடலத்தை பாதி வழியிலேயே ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கி விட்டார் டிரைவர். இதையடுத்து, சிறிது தூரம் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள், பின்னர் கால்நடையாகவே சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் கண்ணீரோடு குழந்தையின் சடலத்தை தூக்கி சென்றனர் பெற்றோர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அதேசமயம், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் 55 வருடங்களாக திராவிட கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், மலை கிராமங்களுக்கு இன்றுவரை முறையான சாலை வசதி மற்றும் மின்சார வசதி கூட கிடையாது. நிலைமை இப்படி இருக்க, நம்பர் 1 முதல்வர், திராவிட மாடல் ஆட்சி என்றெல்லாம் பீற்றிக் கொள்கிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.