உலக வங்கித் தலைவராக இந்தியர்!

உலக வங்கித் தலைவராக இந்தியர்!

Share it if you like it

இந்தியாவில் பிறந்த அமெரிக்கரான அஜய் பங்கா, உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமை இடமாகக் கொண்டு உலக வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக அமெரிக்கர் டேவிட் மல்பாஸ் இருந்து வருகிறார். இவர், ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் பதவி விலகப் போவதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, உலக வங்கிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கின. இதைத் தொடர்ந்து, உலகளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவை அளிக்கும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்திய அமெரிக்கருமான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த, அமெரிக்க அரசு பரிந்துரைப்பதாக அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பங்காவின் வேட்புமனுவை ஆமோதித்தன. அதோடு, வேறு எந்த நாடும் மாற்று வேட்பாளரை முன்வைக்கவில்லை. இதனிடையே, உலக வங்கித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. எனவே, உலக வங்கியின் புதிய தலைவராக அஜய் பங்கா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அஜய் பங்காவின் தேர்வு, உலக வங்கியின் இயக்குனர் குழுவால் உறுதி செய்யப்படும். இத்தலைவர் பதவியில் அஜய் பங்கா 5 ஆண்டு காலத்துக்கு இருக்க முடியும்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் மகனான அஜய் பங்கா, புனேவின் காட்கி கன்டோன்மென்ட்டில் பிறந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அஜய் பங்கா, அகமதாபாத் ஐ.ஐ.டி.யில் எம்.பி.ஏ. படித்தார். தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். 63 வயதான அஜய் பங்கா, நெஸ்லே நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெப்சிகோ இன்க் நிறுவனம், சிட்டி ஃபைனான்சியல் மற்றும் அமெரிக்க நுகர்வோர் சொத்துக்கள் பிரிவின் வணிகத் தலைவர் என பல பதவிகளை வகித்தவர். 2007-ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சாதனை செய்ததற்காக அஜய் பங்காவிற்கு 2016-ம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.


Share it if you like it