‘ஈட்டி’ நீரஜ் சோப்ரா மீண்டும் சாதனை!

‘ஈட்டி’ நீரஜ் சோப்ரா மீண்டும் சாதனை!

Share it if you like it

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அமெரிக்காவில் ஓரிகான் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. 18-வது சீசன் போட்டியான இதில், இந்தியா சார்பில் 23 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில், ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோகித் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில்; 88.13 மீட்டர் தூரம் எரிந்து நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியனும் கிரெனடா நாட்டைச் சேர்ந்தவருமான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.40 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜூலியன் வெபர் 87.28 மீட்டர் ஈட்டி எரிந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

இதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய ஆண் வீரர் என்கிற பெருமையையும், பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்கிற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றார். ஏற்கெனவே 2003-ம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலப் பதக்கம் வெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முதல் பதக்கம் வென்றிருக்கிறது. அதேசமயம், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை மட்டுமே வென்றிருக்கிறது.

நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான ஹரியானா மாநிலம் பானிபட்டில் அவரது பெற்றோர்களும், உறவினர்களும், ஊர் மக்களும் நடனமாடியும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதேபோல, பாரத பிரதமர் மோடி, ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். நீரஜ் சோப்ரா, கடந்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it