ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினர்: இந்தியாவுக்கு 4 நாடுகள் ஆதரவு!

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினர்: இந்தியாவுக்கு 4 நாடுகள் ஆதரவு!

Share it if you like it

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு 4 நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன என்று மக்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் கூறியிருக்கிறார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினராக இருக்கின்றன. தவிர, 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் இருக்கின்றன. இந்த நிரந்தரமற்ற உறுப்பினர்கள் ஐ.நா. பொதுசபையால் 2 வருடத்திற்கு ஒரு முறை தேந்தெடுக்கப்படுகின்றனர். இதனிடையே, தற்போதைய உலக சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. ஆகவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா, பிரேசில், தென்னாப்ரிக்கா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முயன்று வருகின்றன.

குறிப்பாக, பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமாகி இருக்கிறது. இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவாக இருக்கும் நிலையில், சீனா மட்டும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில்தான், விரிவாக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர இடத்திற்கான இந்தியாவின் வேட்புமனுவிற்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள 5 நிரந்தர உறுப்பினர்களில் 4 பேர், இரு தரப்பு ஆதரவை அதிகாரப்பூர்மாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர். இந்த கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவதற்கு, அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்திருக்கிறது என்று மக்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.

கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்றிருந்தபோது வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். அப்போது, விரிவாக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் மற்றும் அணுசக்தி விநியோக குழுவில் நுழைவதற்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். அதேபோல, கடந்தாண்டு பிப்ரவரியில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தங்களுக்கு தங்களது நாடு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்தார்.


Share it if you like it