மேகதாது அணை விவகாரம்: தேவை இல்லாமல் எங்களை இழுத்து விட வேண்டாம்!

மேகதாது அணை விவகாரம்: தேவை இல்லாமல் எங்களை இழுத்து விட வேண்டாம்!

Share it if you like it

“காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு கூறியதற்கு தேவை இல்லாமல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக காங்கிரஸை சீண்டிப் பார்க்கிறார். அதாவது, எங்களை இழுத்து விட வேண்டாம் என்ற ரீதியில் அவரது கருத்து அமைந்துள்ளது.

மேகேதாது அணை தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் :

“காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு கூறியதற்கு தேவை இல்லாமல் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக காங்கிரஸை சீண்டிப் பார்க்கிறார். தமிழக அரசு தடுக்காவிட்டால் மேகேதாட்டுவில் அணை கட்டுவதை பாரதிய ஜனதா தடுத்து நிறுத்தும் என பேசியிருக்கிறார்.

தமிழக காங்கிரஸை பொறுத்தவரை நடுவர் மன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாதகமாக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரின் அளவிற்கு பாதிப்பு ஏற்படுகிற வகையில் மேகேதாட்டுவில் அணை கட்டப்படுவதை கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம். மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ரூபாய் 9000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஏறத்தாழ 60 டி.எம்.சி. கனஅடி கொள்ளளவு கொண்ட அணை கட்டப்படுமேயானால் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

நமது உரிமையின்படி, நாம் பெற வேண்டிய தண்ணீரை தடுக்கிற வகையில் காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே தமிழக எல்லையில் இருந்து 4 கி.மீ. தொலைவில் பிலி குண்டுலு நீர் அளவை நிலையத்திற்கு மேலே அணை கட்டப்படுமேயானால், தமிழகத்தின் நீர் வரத்து கடுமையாக பாதிக்கப்படும். இதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது.

கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே வருகிற நீர் தமிழகத்துக்கு இயல்பாக வர வேண்டியதாகும். அந்த நீரை தடுத்து, தேக்கி வைத்து பயன்படுத்துவது தான் மேகேதாட்டு அணை கட்டுவதன் நோக்கமாகும். இந்த அடிப்படையில் தான் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கிறது. தற்போது கர்நாடக அரசு அணை கட்ட எடுக்கிற முயற்சிகள் நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும். கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்தின் நலனை காப்பதற்காக தமிழக அரசு எடுக்கிற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம்.


Share it if you like it