இந்தியாவுக்கு எதிராக சதி செய்தால்… மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

இந்தியாவுக்கு எதிராக சதி செய்தால்… மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

Share it if you like it

இந்தியாவுக்கு எதிராக சதி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்தியாவில் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்ததும் போதும், இணையத்தில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் குறிப்பிட்ட சில நபர்கள் விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை, விஷம பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். உதாரணமாக, குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) கொண்டு வரப்பட்டபோதும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோதும், புதிய விவசாய சட்டம் அறிவிக்கப்பட்டபோதும் சில தீய சக்திகள் இந்தியாவுக்கு எதிராக பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி விஷம பொய் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள், இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருபவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியது. இந்த யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களில் பாகிஸ்தானில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தவறான பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதன் மூலம், இந்தியாவிலுள்ள சிறுபான்மை மதத்தினரை மத்திய அரசுக்கு எதிராக தூண்டி விட முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்தே, மேற்கண்ட யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், சில விஷமிகள் இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரங்ளில் ஈடுபடுவது தற்போதுவரை நின்ற பாடில்லை.

இந்த நிலையில்தான், நம் நாட்டிற்கு எதிராக சதி செய்யும் நபர்கள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார். அதாவது, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதால்தான் 20 யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல, எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுவது, பொய்களைப் பரப்புவது மற்றும் சமூகத்தை பிளவுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதையடுத்து, விஷமிகளின் பொய் பிரசாரத்துக்கு இடமளித்து விடக்கூடாது என்பதில் யூடியூப் சேனல்களும், இணையதளங்களும் உஷாராக இருக்கின்றன.


Share it if you like it