நாராயண வழிபாட்டுக்குரிய புரட்டாசி மாதம் தொடங்கி விட்டது. காவல் கொடியேனின் பிரியப்பட்ட அடியார்கள் அவன் திருத்தலங்களில் கோவிந்தா என்று கோஷமிட்டு குவிகிறார்கள். திருப்பம் தரும் திருத்தலங்களில் கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலமாக தான் தோன்றி மலை பெருமாள் கோயில் தனித்துவமானது. கரூரில் ப்ரசித்திப் பெற்று விளங்கும், தாந்தோன்றிமலைப் பெருமாள் கோயில் கரூரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில், தான்தோன்றி மலை என்ற இடத்தில், அருள்மிகு கல்யாண வெங்கடரமண ஸ்வாமி பெருமாள் கோவிலாக அமைந்துள்ளது. குறிப்பாக திருப்பதிக்குச் சென்று பெருமாளை தரிசனம் செய்ய முடியாதவர்கள் யாராக இருந்தாலும், இங்கு உள்ள, தான்தோன்றிமலைப் பெருமாளை தரிசனம் செய்ய வரலாம்.. இத் திருத்தலத்தை தென் திருப்பதி என்றும் அழைப்பார்கள். இவர் திருப்பதி பெருமாளின் அண்ணா என்ற பெயரும் உண்டு.
இந்தக் கோவிலின் சிறப்பு பெருமாள் மேற்கு நோக்கி, பக்தர்களுக்காக கொஞ்சம் தன் தலையத் தாழ்த்திக்கொண்டு அருள் பாலிப்பது . இங்கு தாயாருக்கு என்று தனிச் சந்நிதி கிடையாது என்பதால் வச்சத்ஸ்தலம் என்று சொல்லக்கூடிய ஸ்வாமியின் திருமார்பில் தாயார் வீற்றிருக்கிறார். மேலும் அதே கருவறையில் பெருமாள் உற்சவமூர்த்தியாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சித்தருகின்றார்.பிரகாரத்தில் பெருமாளுக்கு எதிரே உபய தெய்வமாக ஆஞ்சநேயர், கருடாழ்வார், பகவத்ராமானுஜர் மற்றும் ஆழ்வார்களின் தரிசனத்தைப் பெறலாம். இங்கு பெருமாளுக்கு தீபாராதனை காண்பித்தவுடன், மஞ்சளும், தீர்த்தமும் கொடுப்பார்கள். அவ்வளவு அற்புதமாக இருக்கும். பெருமாள் துளசி ப்ரியர்.. அலங்கார பிரியர்.
இங்கு கல்யாண உற்சவம் ஞாயிறு,திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் நடைபெறும். நமக்கு திருமணநாள், அல்லது பிறந்த நாளுக்கு ஒரே ஒரு முறை அவர்கள் குறிப்பிடும் சிறிய தொகையைச் செலுத்திவிட்டால், போதும். பிறகு நாம் எந்த முகவரி கொடுக்கின்றமோ, அந்த முகவரிக்கு ஒவ்வொரு வருடமும் நம் விசேஷ நாட்களை முன் கூட்டியே தபாலில் தெரிவித்து சீட்டு அனுப்புவார்கள். அன்றைய நாளில் நாம் கோவிலுக்குப் போனால், அபிஷேகம் முடிந்து பிறகு ப்ரசாதம் தருவார்கள். அந்தச் சீட்டை நம் சார்பாக, நமக்கு வேண்டியவர்களிடம் கொடுத்து அனுப்பினாலும், ப்ரசாதம் தருவார்கள்…
இங்கு காது குத்து, திருமணவைபோகம், எல்லாம் நிறைய நடக்கும்.. இக்கோவிலில் 3 ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. கீழே வீர ஆஞ்சநேயர், குகை ஆஞ்சநேயர் பெருமாள் அருகில் இருக்கும் வீர ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. இரண்டு பக்கத்திலும் உள்ள படிக்கட்டு வழியாக பெருமாளை தரிசிக்க செல்லலாம்.. பிரதான மண்டபத்தைத் தாண்டி, படியேறுவதற்கு முன் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருப்பார். அவ்வளவு சக்தி வாய்ந்தவர்.. எத்தனையோ பேரின் குறைகளை நிவர்த்தி செய்து இருக்கின்றார். நல்லபடியாக நாம வேண்டியது நிறைவேறினால், இவருக்கு 25 பைசா சூடம் ஏற்றுவார்கள். துளசி சார்த்துவார்கள்.
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை அன்று சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும், ஊர்களில் இருந்தும் மக்கள் விரதம் இருந்து, பெருமாளை தரிசிக்க வருவார்கள்.. பிறகு ஊரில் விளைந்த அரிசி,காய்கறி எல்லாம் கொண்டு வந்து, கோவிலை சுற்றி எங்கு இடம் இருக்கின்றதோ? அங்கு குழுவாக சமைப்பார்கள். பிறகு “தாதன்” (பெருமாளின் அடியவர்) என்பவரை சாப்பிட முதலில் அழைப்பார்கள்.. இவர்கள் நெற்றியில திருமண் நாமம் இட்டுருப்பார்கள். கையில் சங்கு வைத்திருப்பார்கள். வட்டமாக இருக்கும் மணி ஓசை எழுப்புவார்கள். அவர் சாப்பிட்டு முடித்தவுடன் தான் மற்றவர்கள் சாப்பிடுவாங்க…பொதுவாக சனிக்கிழமை மட்டும் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி மாசம். என்பதால் தற்போது. எல்லா நாளும் கூட்டமாகத் தான் இருக்கும்..
சனிக்கிழமைகளில் வரிசையில் நின்று காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டும். அர்ச்சனை செய்ய, முடி இறக்க கட்டண சேவை உள்ளது.. மற்ற நாட்களில் அவ்வளவாக கூட்டம் இருக்காது.. கோவிலுக்கு அருகிலேயே முட இறக்கும் வசதி உண்டு. பெருமாள் சந்நிதிக்கு எதிரே தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் மீன்களுக்கு பொரி போட்டால், நம் கர்மவினைகள் தீரும் என்பது ஐதீகம்… இக்கோவிலை கிரிவலம் செய்ய, அதிகபட்சம் 30 நிமிஷம் மட்டுமே ஆகும். கோவிலைச் சுற்றி நிறைய கல்யாண மண்டபங்கள் இருக்கின்றது.. எந்தக் கட்சியாக இருந்தாலும் வேட்பு மனு தாக்கலுக்கு முன் இங்கு வந்து, பெருமாளை தரிசனம் பண்ணிவிட்டுத் தான் செல்வார்கள்..
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். இக்கோவில் கரூர், திண்டுக்கல் சாலையில் உள்ளது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசுத் மற்றும் தனியார் பேருந்துகள் சிற்றுந்துகள் நிறைய இருக்கிறது. தாந்தோணிமலைப் பெருமாள் ப்ரத்யக்ஷமான தெய்வமாக நின்றருளும் சுயம்பு பெருமாளை சேவிப்போம். அவனது மலர் மகளின் கனிவாலே சௌபாக்கியம் பெறுவோம்.
ஏழுகொண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, கோவிந்தா.. கோவிந்தா..
– திருமதி சுபஸ்ரீ ஸ்ரீ ராம்