ஏ! உதை வாங்க போற உக்காருடா! திமுக எம்பி தயாநிதி மாறன்- தலைமுறைகள் மாறினாலும் மாறாத திமுகவின் அநாகரீக அரசியல்

ஏ! உதை வாங்க போற உக்காருடா! திமுக எம்பி தயாநிதி மாறன்- தலைமுறைகள் மாறினாலும் மாறாத திமுகவின் அநாகரீக அரசியல்

Share it if you like it

சமீபத்தில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் ஐந்து நாள் அமர்வாக புது தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் நடந்தது. மக்களவை மாநிலங்களவை இரண்டு அவைகளும் ஒரே நேரத்தில் கூடி அமர்வுகளை முன்னெடுக்கும் படியான மிகப்பெரிய வளாகமாக கட்டப்பட்ட இந்த வளாகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பல்வேறு மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதில் நாடு முழுவதும் இருந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்ட தொடர் என்பதாலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்க இருக்கும் முதல் கூட்டத்தொடர் என்பதாலும் நாடு முழுவதிலும் இருந்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கி அவர்களின் கருத்துக்கள் பரிமாறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டது. திமுகவின் நீலகிரி ( தனி ) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ ராசா அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தனது உரையை நிகழ்த்தினார் . மணிப்பூர் விவகாரம் தொடங்கி பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி திமுகவின் வழக்கமான பாஜக எதிர்ப்பு அரசியல் மோடியின் அரசு மீதான குற்றச்சாட்டுகள் என்று அவரது வழக்கமான அறிக்கைகள் தொடர்ந்தது. இடையில் சம்பந்தமே இல்லாமல் சனாதனத்தின் வழியில் வாழ்ந்த சங்க கால புலவர்கள் இலக்கியங்கள் அனைத்தையும் மேற்கோள் காட்டி தனது வழக்கமான மொழி அரசியலையும் முன் வைத்தார் .

சந்திராயன் ஆதித்யா உள்ளிட்ட விண்வெளி ஆய்வுகளின் வெற்றிப் பயணங்களையும் அதில் பங்களிப்பு வழங்கிய தமிழர்களின் பெயரையும் குறிப்பிட்டு இவை அனைத்தையும் தமிழர்களின் வெற்றி. தமிழ் வழியில் அரசு பள்ளியில் படித்தவர்களின் வெற்றி. ஹிந்தி சமஸ்கிருதம் தெரியாத தமிழர்களின் வெற்றி என்று வழக்கமான இன மொழி அரசியலை பதிவு செய்தார் ‌ ஆனால் இவர்கள் அனைவரும் மத்திய அரசின் பள்ளிகளில் படித்தவர்கள் என்பதையோ நன்றாக ஹிந்தி எழுத பேச படிக்க தெரிந்தவர்கள் என்பதையும் மறந்தும் அவர் குறிப்பிடவில்லை. அவர்கள் திராவிடர்கள் என்றோ தவறி கூட அவர் குறிப்பிடவில்லை அந்த வகையில் அவர் மிகத் தெளிவாக தனது குழப்பு அரசியலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்.

இடையில் மணிப்பூர் விவகாரம் தொடங்கி பல்வேறு விஷயங்களை சம்பந்தமே இல்லாமல் மோடியை விமர்சிக்கிறேன். அவரது அரசை குறை கூறுகிறேன் என்ற பெயரில் அவர் முன்வைத்த மலிவான சாதிய அரசியல் மத அரசியல் நாடாளுமன்றத்தில் கூடியிருந்த பாஜக எம்பிக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. சனாதனம் உள்ளிட்ட விஷயங்களில் அவர் தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தமாக ஏற்கனவே அவர் மீது கடும் எரிச்சலும் கோபமும் இருந்த நிலையில் கூட்டணி கட்சி எம்பிக்களே அவரை அலட்சியப்படுத்தி வந்தார்கள். அவ்வகையில் முதல் சிறப்பு கூட்ட தொடரில் வழங்கப்பட்ட நேரத்தில் இப்படி சில்லறைத்தனமாக அவர் பேசியது பாஜக கடந்து கூட்டணி கட்சி எம்பிக்களை கூட முகம் சுளிக்க வைத்தது. இதில் தொடர்ச்சியாக அவர் மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட விஷயங்களில் மோடி அரசை விமர்சனம் செய்யும் போது அதற்கு எதிர்ப்பு குரல் எழுப்பி பாஜக எம்பிக்கள் குறுக்கீடு செய்தார்கள். ஆனால் ஆ ராசா தொடர்ந்து பேசியபடி இருந்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஆ ராசாவின் இருக்கைக்குப் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு திமுக எம்பியான தயாநிதி மாறன் எழுந்து நின்று ஆ ராசாவிற்கு வக்காலத்து வாங்குகிறேன் பேர்வழி என்று ஆராசாவிற்கு எதிர்ப்பு குரல் எழுப்பிய பாஜக எம்பிக்களை பார்த்து ஏய் உக்காருடா உதை வாங்க போற நீ என்று ஒற்றை விரலை காட்டி எச்சரிக்கும் விதமாகவும் மலிவான உடல் மொழியிலும் பேசியது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. வழக்கமாக சனாதனம் ஹிந்து தர்மம் ஆரியம் பார்ப்பனம் என்ற பெயரில் ஏதாவது ஒரு சர்ச்சை கருத்தை மேடையில் பேசி கொந்தளிப்பு ஏற்படுவது தான் ஆ ராசாவின் வழக்கம். ஆனால் இம்முறை அவருக்கு பரிந்து பேசுகிறேன் .அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற பெயரில் தயாநிதி மாறன் பேசிய பேச்சுக்கள் ஆ ராசாவிற்கு மேலும் வெறுப்பையும் முக சுளிப்பையும் தேடிக் கொடுத்திருக்கிறது.

காரணம் தயாநிதி மாறனின் இந்த குறுக்கீடு அவரின் தரம் தாழ்ந்த உடல் மொழி நாடாளுமன்றத்தின் மாண்பு சபை நாகரீகம் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு அவர் பேசிய விதமும் நடந்து கொண்ட விதமும் அதை ஆராசா கேட்டவுடன் அவரின் முகமும் மாறியதும் ஆவணபூர்வமாக நாடாளுமன்றத்தில் பதிவாகிவிட்டது. இனி யாரும் அதை இல்லை என்று மறுக்கவும் முடியாத சூழல். ஆனால் தயாநிதிமாறனின் இந்த நடவடிக்கையை ஆ ராசா கண்டிக்கவோ தடுக்கவோ இல்லை. மாறாக அமைதி காத்து அதை ஆதரிக்கும் மனநிலையில் அவரின் நிலைப்பாட்டை பதிவு செய்து விட்டார் என்பதே அவரின் மீதான அவமரியாதையையும் ஒரு படி உயர்த்தி விட்டது.

திமுக என்றாலே உள்ளூர் மேடை முதல் சட்டசபை வரை எல்லா இடத்திலும் அராஜகம் அடிதடி வன்முறை அத்துமீறல் தான் என்பது திமுகவின் அரை நூற்றாண்டு கால அரசியலை உணர்ந்தவர்கள் எல்லோருக்கும் அத்துப்படியான விஷயம்தான். திராவிட நாடு எங்கே இருக்கிறது? என்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனந்தநாயகி அம்மையாருக்கு சட்டசபையில் வைத்து கருணாநிதி அவர்கள் கொடுத்த விளக்கம் பெண்களின் மீது ஜனநாயகத்தின் மீது திமுகவின் நிலைப்பாடு என்ன? குறிப்பாக கருணாநிதியின் அரசியல் நாகரீகம் என்ன ? என்பதற்கு வரலாற்று சாட்சியமாக இன்றும் நிலை பெற்று விட்டது.

ஒரு வலுவான எதிர்க்கட்சித் தலைவர் மாநில அமைச்சர் அந்தஸ்துக்கு இணையாக இருக்கும் ஒரு சட்டசபை அமர்வாளர் என்ற வரைமுறைகளை எல்லாம் மீறி 1989 ல் அப்போதைய அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்த ஜெயலலிதாவின் மீது திமுகவின் ஆற்காடு வீராசாமி துரைமுருகன் உள்ளிட்ட அவர்களின் தலைமையில் கட்டமைத்து விடப்பட்ட அராஜகமும் அதை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் திமுகவின் ஆட்சியில் பெண்களுக்கும் சட்டசபையில் கூட பாதுகாப்பு இல்லை. அதிலும் எதிர்க்கட்சிகள் அவர்களின் கருத்துக்கள் எந்த அளவு வன்மத்தோடு எதிர்கொள்ளப்படும்? அடக்கப்படும் என்பதற்கு வரலாற்று சாட்சியமாக நிலை பெற்று விட்டது.

இந்திரா காந்தியின் மீதான தாக்குதல் ஜெயலலிதாவின் மீதான தாக்குதல் இந்திரா காந்தி இலங்கை அதிபர் உள்ளிட்டவர்களின் சந்திப்பு பற்றிய விமர்சனம் என்று பெண்கள் அவர்களின் பொது வாழ்க்கை அவர்களின் ஆளுமை பற்றிய மதிப்பீடு எல்லாம் திமுகவில் எந்த அளவு தரம் தாழ்ந்து இருக்கும் ? அவர்கள் நாவில் நரம்பில்லாமல் விமர்சனம் செய்தால் அது எந்த அளவு அரசியல் நாகரீகத்தை சிதைத்துப் போடும்? என்பதெல்லாம் கருணாநிதி முதல் ஆராசா வரை தீப்பொறி ஆறுமுகம் தொடங்கி சமீபத்திய சைதை சாதிக் வரை பல்வேறு உதாரணங்களை நாம் முன் வைக்க முடியும்.

ஆனால் அதே திமுகவில் கருணாநிதியின் மருமகனாக திமுக தலைமையின் அசைக்க முடியாத ஆளுமையாக வலம் வந்தவர் முரசொலி மாறன் . எப்படி தமிழக அரசியலில் கருணாநிதி என்பவர் தவிர்க்க முடியாத சக்தி .அவரே திமுகவின் அடையாளம் என்ற பிம்பம் இருந்ததோ ? அதே அளவில் கருணாநிதியின் மனதிலும் திமுகவினரின் மனதிலும் தேசிய அரசியலின் முகமாக இன்றளவும் நிலைத்து நிற்பது முரசொலி மாறனின் முகமும் ஆளுமையும் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் கும்மிடிப்பூண்டியை தாண்ட முடியாத திமுகவையும் கருணாநிதியையும் தேசிய அரசியலுக்கு வெற்றிகரமாக கொண்டு போய் சேர்த்தவர் முரசொலி மாறன் .அவரின் சாதுரியமான அணுகுமுறைகள் எந்த விஷயத்தை யாரிடம் எப்படி பேச வேண்டும்? எப்படி அணுக வேண்டும் ? எந்த விஷயத்தில் விட்டுக் கொடுத்து பேச வேண்டும்? எந்த விஷயத்தில் விடாப்பிடியாக இருக்க வேண்டும் ? என்ற அவரின் ராஜதந்திரம் தான் வி பி சிங்கின் ஆட்சி காலம் முதல் வாஜ்பாயின் ஆட்சி காலம் வரை திமுக உரிய மரியாதையோடும் வலுவான துறைகளோடும் கூட்டணியில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அளவிற்கு வளர காரணமாக இருந்தது.

குறிப்பாக வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் வளம் கொழிக்கும் இலாகா பெற்றுக் கொண்டு வாஜ்பாயின் நம்பிக்கைக்கு உரியவராக தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுவாக கட்டமைக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கைகுரியவராக வலம் வந்தவர் முரசொலி மாறன். அந்த வகையில் மாநில அரசியல் என்று வரும்போது கருணாநிதியின் பேச்சுக்கு மற பேச்சு மாட்டார் முரசொலி மாறன். தேசிய அரசியல் நிலைப்பாடு என்று வரும்போது முரசொலி மாறனின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேச மாட்டார் கருணாநிதி . மாமனும் மருமகனும் இரட்டை ஆளுமைகளாக இருந்து தான் திமுகவை இப்படி ஒரு வலுவான கட்சியாக மத்தியில் மாநிலத்தில் ஆளும் கட்சி என்ற அந்தஸ்திற்கு வளர்த்தெடுத்தார்கள். அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் புரிந்துணர்வும் தான் திமுகவை இன்றளவும் பாதுகாத்து வருகிறது என்பது திமுகவில் காலம் காலமாக இருக்கும் ஒவ்வொரு மூத்த நிர்வாகிக்கும் நன்றாக உணர்ந்த விஷயம். அதை எதிர்க்கட்சிகள் கூட மறுக்க முடியாது.

வலுவான துறைகளில் அமைச்சராக வலம் வந்தவர். திமுகவின் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் பின்னணியில் இருந்தவர். அந்த வகையில் கருணாநிதிக்கு முழு மூளையாக செயல்பட்டவர் என்று பல்வேறு விமர்சனங்கள் முரசொலி மாறன் மீது இருந்தாலும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரின் கண்ணியமான அணுகுமுறை சபை நாகரிகம் நாடாளுமன்றம் பொதுவெளிகள் மேடைகள் உள்ளிட்டவற்றிலான அவரது சொல்லாடல் எதிர்க்கட்சிகள் கூட அவரின் மீது ஒரு மரியாதையை புரிதலை ஏற்படுத்தியது . திமுக அரசியலில் கட்சி நிலைபாடுகளில் அவர் ஆதரவாக வெளிப்படையாக பங்கேற்றாலும் கூட எந்த ஒரு இடத்திலும் அவரின் தனிமனித மாண்பையோ தனித்துவத்தையோ எப்போதும் இழந்ததில்லை. அவரின் மரணத்திற்குப் பிறகு திமுகவின் வழக்கமான குடும்ப அரசியலை நிலை நிறுத்தவும் ஆங்கிலம் இந்தி உள்ளிட்ட புலமை இருப்பதால் தங்களுக்கு அது பல்வேறு வகையில் தகவல் தொடர்புகளுக்கு உதவும் என்ற கணக்கிலும் தயாநிதி மாறன் முரசொலி மாறனின் வாரிசாக திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் மகுடம் சூட்டப்பட்டார்.

ராஜா வீட்டு செல்ல பிள்ளையாக மத்தியிலும் மாநிலத்திலும் முரசொலி மாறனின் மகனாக திமுகவின் வலிமையான தேசிய அரசியல் முகமாக தயாநிதி மாறன் இருந்தார். ஆனால் அவரின் தனிப்பட்ட லாபி கருணாநிதி குடும்பத்தை பின்னுக்கு தள்ளும் முயற்சி எல்லாம் அறிந்த கருணாநிதி அவரின் முக்கியத்துவத்தை குறைக்கவும் அனைத்தும் தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் கனிமொழி திருச்சி சிவா உள்ளிட்ட அவர்களை எல்லாம் உரிய முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தெடுத்து தயாநிதி மாறனுக்கு பதிலடி கொடுத்தார். இதன் காரணமாக சில காலம் தயாநிதி மாறன் கட்சியிலும் குடும்பத்திலும் ஓரம் கட்டப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல்கள் அதன் காரணமாக தினகரன் பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு ஊழியர்கள் உயிரிழப்பு வம்பு வழக்கு என்று எவ்வளவோ கசப்புகள் கடந்து பிறகு ஆட்சி அதிகாரம் தொடர வேண்டுமானால் குடும்பத்தின் முருகல் முடிவுக்கு வரவேண்டும் என்ற கட்டத்தில் இதயம் இனிக்க கண்கள் பனிக்க மீண்டும் குடும்பம் ஒன்றிணைந்தது. ஆனால் கருணாநிதியே தனது இறுதிக் காலத்தில் தனது குடும்பத்தாரிடம் தயாநிதி மாறனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியதாக தகவல்கள் வெளியானது . காரணம் முரசொலி மாறனை போல் குடும்ப பாசமோ அன்போ நல்லிணக்கமோ தயாநிதி மாறன் இடத்தில் இல்லை என்பது கருணாநிதியின் கணிப்பாக இருந்திருக்கிறது. அதனால் மாமாவை நம்பிய அளவிற்கு மாமனின் மகனை நம்பக் கூடாது என்ற அறிவுரையை தனது மகன்களுக்கு அவர் வழங்கி இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சனங்கள் அப்போது எழுந்தது.

ஆயிரம் விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கருணாநிதி ஒரு மிகப்பெரிய ராஜதந்திரி. அரசியல் சாணக்கியர். அவரின் கணிப்புகள் எப்போதும் பொய்யாகாது என்பது எதிர் கட்சிகள் கூட அவர் மீது வைத்திருக்கும் ஒரு புரிதல்‌ . அந்த வகையில் தயாநிதிமாறனை பற்றிய அவரது கணிப்பும் கருத்தும் இன்று உண்மையாகி விட்டதாகவே திமுகவில் இருக்கும் மூத்த தலைகளும் புலம்பத் தொடங்கி விட்டார்கள். காரணம் ஏற்கனவே திமுகவின் மீது மாநில அளவில் அதிருப்தி உதயநிதியின் பேச்சுக்கள் அதைத் தொடர்ந்து சர்ச்சைகள் காரணமாக கூட்டணி கட்சிகள் இடையே முருகல் உதயநிதிக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்ற பெயரில் ஆராசா பேசியது அவருக்கு எப்படி சிக்கலாக மாறும்? அதன் மூலம் திமுக கட்சிக்கு எப்படி எல்லாம் சிக்கலை கொண்டு வரும் ? என்று தலையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இருக்கும் குழப்பம் எல்லாம் போதாது என்று தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் அவை நாகரீகத்தை மீறி ஒழுங்கு நடவடிக்கைக்கு உரிய வகையில் நடந்து புதிதாக ஒரு குழப்பத்தை இழுத்து வைத்திருப்பதில் அவர்களுக்கு பெரும் அதிருப்தி. தயாநிதி மாறன் ஒன்றும் புதிதாக நாடாளுமன்ற வளாகத்திற்குள் போகும் நபர் அல்ல. அவருக்கு நாடாளுமன்ற விவகாரங்களும் அதன் விதிகளும் தெரியாத விஷயமும் இல்லை. அதிலும் நாம் ஆளும் கட்சி அல்ல. எதிர்க்கட்சியாக இருக்கிறோம். எதிர்கட்சியில் இருக்கும் நமது கூட்டணி கட்சிகளே நம் மீது ஏகப்பட்ட வருத்தம் அதிருப்தியில் இருக்கிறார்கள். குறிப்பாக ஆண்டு கொண்டிருக்கும் பாஜக மோடி அரசிற்கு திமுகவின் மீது பல்வேறு விஷயங்களில் பெரும் அதிருப்தியும் எதிர்ப்பும் இருக்கிறது. இந்த வகையில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் ? என்று இருக்கும் திமுகவிற்கு மேலும் ஒரு வலுவான அவமதிப்பையும் சட்ட ரீதியான ஒரு சிக்கலையும் தேடித் தரும் வகையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களை நேருக்கு நேராக எதிர்த்து நின்று நீ உதை வாங்கப் போற உக்காருடா என்று கைநீட்டி பேசியதும் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை தனிமனித தாக்குதல் அவமதிப்பு செய்யும் விதமாக நடந்து கொண்டதும் பெரும் அவமதிப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்நிகழ்வு புகாராக அவை தலைவரிடம் போகும் பட்சத்தில் அவர் நிச்சயம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது திமுகவின் தயாநிதி மாறனுக்கு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு அவமதிப்பு தான். கட்சி என்ற வகையிலும் இது திமுகவிற்கு மட்டுமான பின்னடைவு இல்லை. எப்படி சனாதன விவகாரத்தில் உதயநிதியின் பேச்சை குறிப்பிட்டு ஒட்டுமொத்த ஐஎன்டிஐஏ கூட்டணியையும் பிரதமர் மோடி சனாதன எதிர்ப்பு கூட்டணி என்று அடையாளப்படுத்தினாரோ ? அதே வகையில் தயாநிதிமாறனின் செயல்பாடுகளை முன்வைத்து ஏதேனும் ஒரு பாஜக எம் பியோ அமைச்சரோ ஒட்டுமொத்த ஐஎன்டிஐஏ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபை நாகரீகம் தெரியாத மதிக்காத நாகரிகமற்ற அரசியல்வாதிகள் என்ற ரீதியில் அடையாளப்படுத்த தொடங்கினால் அது அவர்களுக்கு பெருத்த அவமதிப்பையும் சிக்கலையும் தேடித் தரும் . தயாநிதி மாறன் என்ற தனி மனிதனின் இந்த செயலை அவருக்கும் ஆ ராசாவையும் கடந்து ஒட்டுமொத்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐஎன்டிஐஏ கூட்டணி கட்சி உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் ஒரு பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது.

எது எப்படியோ தனது தந்தையாரின் நம்பிக்கை நற்பெயரை தயாநிதி மாறன் காப்பாற்றவில்லை . முரசொலி மாறனின் சபை நாகரீகம் அரசியல் மாண்பு அவரிடத்தில் இல்லை என்று தந்தைக்கு அவப்பெயரைத் தேடிக் கொடுத்து விட்டார். ஆனால் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவரது தாத்தா கருணாநிதி அவரது மாமா ஸ்டாலின் வரிசையில் அவர்கள் சட்டசபையில் எப்படி நடந்து கொண்டார்களோ? அதே பாணியில் தன்னுடைய செயல்பாடுகளை தேசிய அளவில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியதன் மூலம் தனக்கு மகுடம் சூட்டி உச்சி முகர்ந்த தாத்தா கருணாநிதியின் அரசியல் வரலாறை நிலை நிறுத்தி விட்டார் என்பதே உண்மை. திமுக பொறுத்த வரையில் தலைமுறைகள் மாறலாம். மாநில அரசியல் தேசிய அரசியல் என்று அரசியல் களம் மாறலாம். ஆனால் திமுகவின் நாலாந்தர அரசியலும் திமுக பிரதிநிதிகளின் மலிவான அநாகரிக நடவடிக்கைகளும் எப்போதும் மாறாது என்ற திமுகவின் பாரம்பரியமான வரலாற்றை தயாநிதிமாறன் தவறாமல் மெய்ப்பித்து விட்டார் .


Share it if you like it