அஸ்ஸாமிலும் களமிறங்கியது புல்டோசர்!

அஸ்ஸாமிலும் களமிறங்கியது புல்டோசர்!

Share it if you like it

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகாரை தொடர்ந்து தற்போது அஸ்ஸாமிலும் பா.ஜ.க.வின் புல்டோசர் கலாசாரம் தொடங்கி இருக்கிறது.

பா.ஜ.க. ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் பாலியல், வன்முறை உள்ளிட்ட மிகப்பெரிய குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி வருகின்றன அம்மாநில அரசுகள். இதனால், மேற்கண்ட மாநிலங்களில் இதுபோன்ற குற்றச்செயல்கள் குறையத் தொடங்கி இருக்கின்றன. டெல்லியிலும் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்ட ரோகிங்கியா முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது அஸ்ஸாமிலும் புல்டோசர் கலாசாரம் தொடங்கி இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலம் நகோவான் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி சஃபிகுல் இஸ்லாம் என்பவரை, ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக பதாத்ரபா காவல் நிலைய போலீஸார் கடந்த 20-ம் தேதி கைது செய்திருக்கிறார்கள். இவர், காவல் நிலைய விசாரணையின்போது உயிரிழந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், அப்பகுதி மக்களும் மேற்கண்ட காவல் நிலையத்துக்கு தீவைத்து விட்டனர். இதனால், வெகுண்டெழுந்தது மாநில அரசு. காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்ததற்காக இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்த மாநில அரசு, தீவைப்பு சம்பவத்தில் தொடர்புடைய 20 பேரை கைது செய்தது.

இதையடுத்து, காவல் நிலையத்துக்கு தீவைத்தது யார் என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சஃபிகுல் இஸ்லாம் குடும்பத்தினரும், அவரது உறவினர்கள் 5 பேர் குடும்பத்தினரும்தான் தீவைத்தார்கள் என்பது தெரியவந்தது. மேலும், மேற்படி 5 பேரின் குடும்பங்களும் சரியான ஆதாரம் இல்லாமல் போலியான ஆவணங்களை வைத்து சட்ட விரோதமாக வீடு கட்டி குடியேறி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 5 குடும்பங்களின் வீடுகளையும் நகோவான் மாவட்ட நிர்வாகம் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியது.

இச்சம்பவம் குறித்து அஸ்ஸாம் டி.ஜி.பி. கூறுகையில், “உள்ளூர்வாசிகள் சட்டத்தை தங்கள் கையிலெடுத்து இக்குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதில், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் அடக்கம். இத்தாக்குதல் உணர்ச்சிப் பெருக்கில் திடீரென நடைபெற்றது என்று கருத்தில் கொள்ள முடியாது. திட்டமிடப்பட்டு நடைபெற்ற தாக்குதல். இத்தாக்குதல் குறித்த முழு ஆதாரத்தையும் திரட்டி வருகிறோம். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது” என்றார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், “ஒரு காவல் நிலையம் எரிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்வரை இதுபோன்ற குற்றங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். அப்பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு அதிகம் இருக்கிறது. அவற்றையும் அடையாளம் காண மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறேன். அஸ்ஸாமின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சட்டத்தின் மூலம் தீர்வு காண்போம்” என்றார்.


Share it if you like it