வீரம், வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சி என்று என்னால் புகழ முடியாது: கவர்னர் தரப்பில் விளக்கம்!

வீரம், வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சி என்று என்னால் புகழ முடியாது: கவர்னர் தரப்பில் விளக்கம்!

Share it if you like it

வீரம், வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சி என்றெல்லாம் புகழ முடியாது என்பதால்தான் சட்டப்பேரவையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார் என்று கவர்னர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தின் நிகழாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் படிக்க வேண்டிய உரை, தமிழக அரசுத் தரப்பில் இருந்து கவர்னருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், தனது உரையில் இருந்த பல்வேறு விஷயங்களை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்து விட்டார். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, கவர்னர் இருக்கும்போதே தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். அதில், இன்றைக்கு அச்சிடப்பட்டு மாண்புமிகு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் ஏற வேண்டும். இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்று தெரிவித்தார். இந்த தீர்மானத்தை ஸ்டாலின் வாசித்து கொண்டிருக்கும்போதே கவர்னர் வெளியேறினார். இதனால் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் முன்பே வெளியேறியதாக புதிய சர்ச்சைக்கு ஆளானார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து கவர்னர் வெளியேறியது ஏன் என்பது தொடர்பாக, கவர்னர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில், “உரையில் திருத்தம் செய்ய கூறியபோது அச்சுக்கு சென்று விட்டதால் பேசும்போது மாற்றிக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் உரையை நீக்குவதாக கூறிவிட்டு ஒளவையார் மற்றும் பாரதியாரின் வரிகளை நீக்கி இருக்கிறார்கள். ஆளுநர் உரைக்கு பின்னர் சபையை முடிக்காமல் முதல்வர் பேசியது மரபு மீறல். ஜனவரி 12-ம் தேதி விவேகானந்தர் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து ஆளுநர் பேசியது மரபு மீறியது அல்ல. வீரம் மற்றும் விரீயம் கொண்ட திராவிட மாடல் ஆட்சி என்பதை ஆளுநர் கூற முடியாது. எதார்த்தத்தை மீறிய அரசை புகழும் வரிகளை பேச மாட்டேன் என்று ஆளுநர் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார். தமிழக மீனவர்கள் விடுவிடுக்கப்பட்டது மாநில அரசின் பங்களிப்பு மட்டுமே என்பதை எப்படி ஏற்பது? தொழில் முதலீடு தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட தகவல் இருந்ததால் ஆளுநர் பேசாமல் தவிர்த்துவிட்டார். ஆளுநர் உரைக்கு எதிராக உறுப்பினர்கள் கோஷமிட்டபோது சபாநாயகர் தடுக்காதது மரபு மீறிய செயல்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Share it if you like it