இந்திய மாணவருக்கு சரமாரி கத்திக்குத்து!ஆஸ்திரேலியாவிலும் இனவெறி தாக்குதலா?

இந்திய மாணவருக்கு சரமாரி கத்திக்குத்து!ஆஸ்திரேலியாவிலும் இனவெறி தாக்குதலா?

Share it if you like it

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் 11 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷுபம் கார்க். 28 வயதாகும் இவர், மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் எம்.டெக். படிப்பை முடித்து விட்டு, பிஹெச்.டி. படிக்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். அங்கு சிட்னியிலுள்ள சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி அடையாளம் தெரியாத நபரால் ஷுபம் கார்க் 11 முறை கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது, அவருக்கு ஆஸ்திரேலியாவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எனினும், முகம், வயிறு, மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பேசிய ஷுபம் கார்க்கின் தந்தை ராம் நிவாஸ் கார்க், “ ஷுபம் கார்க் மீது தாக்குதல் நடத்திய 27 வயது நபரை ஆஸ்திரேலியா போலீஸார் கைது செய்து, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட நபரை என் மகனுக்கோ, அவனது நண்பர்களுக்கோ அடையாளம் தெரியவில்லை. ஆகவே, இது இனவெறித் தாக்குதலாகத்தான் இருக்க வேண்டும். எனது மகனை பார்க்க கடந்த ஒரு வாரமாக விசாவுக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இதுவரை எதுவும் நடைபெறவில்லை. எனவே, எங்களுக்கு இந்திய அரசு உதவ வேண்டும்” என்றார்.


Share it if you like it