ராமர், சீதா சிலைக்கு நேபாள் பாறைகள்: அயோத்தி நோக்கி 2 ட்ரக்குகளில் புறப்பட்டன… மக்கள் தரிசனம்!

ராமர், சீதா சிலைக்கு நேபாள் பாறைகள்: அயோத்தி நோக்கி 2 ட்ரக்குகளில் புறப்பட்டன… மக்கள் தரிசனம்!

Share it if you like it

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலில் ராமர் மற்றும் சீதா தேவி சிலை செய்வதற்காக நேபாள் நாட்டிலிருந்து 2 பெரிய பாறைகள் 2 ட்ரக்குகளில் கொண்டுவரப்படுகின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2024-ம் ஆண்டு ஜனவரிக்குள் ராமர் கோயில் தயாராகிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். அந்தவகையில், உயர்தர சிற்பிகள் கோயிலின் வெளிப்புறத்தை உருவாக்கி வருகின்றனர். ராமர் மற்றும் சீதா தேவி சிலைகளை செதுக்குவதற்காக 2 பெரிய பாறைகள் நேபாளத்தில் இருந்து அயோத்தி கோயிலுக்கு எடுத்துவரப்படுகின்றன. நேபாளத்தின் காளி கண்டகி நதியில் இருந்து இந்த பாறைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஷாலிகிராம் ஷிலா என்ற வகையைச் சேர்ந்தவை இந்த பாறைகள்.

இந்த பாறைகள் 350 டன் எடையும், 7 அடி நீளமும் கொண்டவை. புவியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் குழுவால் கற்கள் அடையாளம் காணப்பட்டது. இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் வல்லமை படைத்தது என்றும், பூகம்பம் ஏற்பட்டாலும் சேதமடையாது என்றும் கூறப்படுகிறது. இந்த 2 புனித கற்களையும் ஜனக்பூர்தாமுக்கு ஒப்படைக்கும் விழா கடந்த ஜனவரி 26-ம் தேதி போகாராவில் நடந்தது. பின்னர், 2 பெரிய டிரக்குகள் மூலம் பாறைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ட்ரக்குகள் ஜனக்பூர்தம், மதுபானியின் பிப்ரூன் கிர்ஜஸ்தான், முசாபர்பூர் மற்றும் கோரக்பூர் வழியாக அயோத்தியை சென்றடையும்.

அனேகமாக, பிப்ரவரி 1-ம் தேதி அயோத்தியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாராயணி என்று பிரபலமாக அறியப்படும் காளி கண்டகி நதிதான் ஷாலிகிராம ஷிலாவின் ஒரே ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஷாலிகிராம் சிலாக்கள் விஷ்ணுவாகவும், ராமர் விஷ்ணுவின் அவதாரமாகவும் போற்றப்படுகிறது. நேபாள் நாட்டில் இருந்து புறப்பட்டிருக்கும் மேற்கண்ட புனித பாறைகளுக்கு, அந்நாட்டைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it