காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை முன் வைத்து பேசிய தமிழகத்தின் நீர்வளத் துறை அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் தமிழ்நாடு ஏதோ தனி நாடு போல நடந்து கொள்ளக் கூடாது நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று பேசி இருக்கிறார்.திமுகவின் இந்த திடீர் ஒற்றுமை உணர்வும் இந்தியன் என்ற பேச்சும் அடையாளமும் திமுகவிலேயே பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனால் சமகால அரசியல் புரிந்தவர்களுக்கும் திமுகவின் இரட்டை முகம் தெரிந்தவர்களுக்கும் துரைமுருகன் இந்த அறிக்கை அதன் பின்னிருக்கும் அரசியலும் தெளிவாக புரியும்.
இந்தியன் என்ற உணர்வு வேண்டும். இந்த தேசம் தேசிய இறையாண்மை பற்றிய மரியாதை வேண்டும். தேசிய ஒருமைப்பாடு உணர்வு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும் என்ற உணர்வோடு தேசத்தின் பாதுகாப்பு தேசிய இறையாண்மையை மதித்து நடக்க வேண்டும். தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பதால் மட்டுமே தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பில் இருக்கும் ஆர்.என் ரவி ஐபிஎஸ் அவர்களை இதே திமுகவினர் எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்தார்கள்? என்பதை துரைமுருகன் மறந்திருக்கலாம். ஆனால் இங்குள்ள ஒவ்வொரு தேசியவாதியும் தேசாபிமானியும் என்றைக்கும் மறக்க மாட்டான்.
தேசிய உணர்வும் ஆன்மீக உணர்வும் இங்கு உள்ள ஒவ்வொரு இந்தியனின் உதிரத்தில் கலந்தது. அந்த உணர்வோடு வெளிப்படையாக வாழ்ந்து வரும் ஆளுநரை ஆளுநர் ரவியா? ஆர் எஸ் எஸ் ரவியா? என்று பேசுவதும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறு ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறு என்று அவமதிப்பது. ஆட்டுக்கு தாடியும் மாநிலத்துக்கு ஆளுநரும் தேவையில்லாத ஆணி என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே அவமதிப்பது. எல்லாம் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆதரவு அமைப்புகள் மட்டும் தான்.
இந்தியா என்று சொன்னாலே அது வட இந்தியாவில் மட்டும் தான் குறிக்கும். தமிழ்நாடு என்றுதான் நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அதுதான் நம்முடைய வரலாறு என்று பெருமை பேசி தேசிய ஒருமைப்பாட்டை அவமதித்த திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் எ வ வேலு விற்கு இருக்கும் இந்திய உணர்வை விட இங்குள்ள சாமானிய இந்தியனுக்கு இருக்கும் ஒற்றுமை உணர்வும் ஒருமைப்பாடும் மிக அதிகம்.
தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று உணர்வோடு வாழ்வதுதான் இந்திய உணர்வு. இந்திய ஒருமைப்பாட்டு உணர்வு. அதை வலியுறுத்தும் ஆளுநரை தினமும் அவமதிப்பவர்கள் சட்டத்தை மீறி அவருக்கு கண்டன தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்தவர்கள். மேடை தோறும் அவரை ஆபாச வார்த்தையில் அர்ச்சனை செய்து அவரை அச்சுறுத்தும் வகையிலாக பேசியவர்கள் . தமிழகத்தில் மக்கள் உங்கள் சித்தாந்தத்தை பற்றி பேசி பாருங்கள் அவர்கள் உங்களை காலணிகளை கழற்றி அடிப்பார்கள் என்று ஆளுநரை பார்த்து பேசிய உதயநிதியை விட இங்குள்ள சாமானியர்களுக்கு இருக்கும் இந்திய உணர்வும் ஒருமைப்பாட்டு இறையாண்மை உணர்வும் உண்மையானது. பன்மடங்கு வலிமையானது என்பதை துரைமுருகன் உணர்ந்துக் கொள்ளட்டும்.
இந்தியா என்ற ஒரு நாடு கிடையாது. அந்த வரையறைக்குள் வரமாட்டோம் .இந்திய ராணுவத்தின் இழப்பை வெற்றி திருவிழாவாக கொண்டாடுவோம் .அதே இந்திய ராணுவம் சாதித்து காட்டினால் தேசம் ஏதேனும் ஒரு விவகாரத்தில் சாதித்து காட்டினால் அதில் இருப்பவன் ஒரு தமிழன் என்றால் அவனைப் பிடித்துக் கொண்டு இது தமிழர்களின் வெற்றி என்று பிரிவினை பேசுவதெல்லாம் இன்று வரை திமுகவின் ஆ ராசா தான். ஆனால் எங்கோ வடகிழக்கு மாநிலத்தில் இருக்கும் ஒரு இந்தியன் சாதித்தாலும் அதை தன்னுடைய சாதனையாக எண்ணி மகிழும் சாமானிய இந்தியன் குமரியில் உண்டு . தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கடல் எல்லையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்வோடு காவல் காக்கும் வட இந்திய கடற்படை வீரனும் உண்டு. ஆனால் தேசத்தின் பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒற்றை காரணம் கொண்டு அவர்களை எல்லாம் விரோதிகளாகவே பாவிப்பது. இன்றுவரை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் என்பதை துரைமுருகன் நினைவில் நிறுத்திக் கொள்ளட்டும்.
நேதாஜியின் இந்திய ராணுவத்திற்கு படை திரட்டும் நிகழ்வில் முன் நின்று தளபதியாக செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தேவரையும் நேதாஜியையும் நம்பி தேசத்தின் விடுதலைக்காக உயிரையும் துச்சமாக தர துணிந்து பல லட்சம் பேர் அதில் இணைந்தார்கள். அவர்களின் பெரும்பாலானவர்கள் இதே தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள் தான். ஆனால் இன்று இதே தமிழகத்தில் ஆளும் கட்சியின் பின்புலம் இருக்கிறது . ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற ஆணவத்தில் எல்லையில் உயிரை துச்சமாக நினைத்து தேசத்தை பாதுகாத்த ஒரு ராணுவ வீரனை சாதாரண வாய் தகராறுக்காக குழுவாக சேர்ந்து போய் அடித்து கொலை செய்தவர்கள் இதே திமுகவினர் தான். அன்று இந்த துரைமுருகன் இவரது கட்சியின் தலைமையோ அந்த ராணுவ வீரனின் மரணத்திற்கு ஒரு இரங்கலும் தெரிவிக்கவில்லை. தேசம் காக்கும் ராணுவப் பணியில் இருக்கும் ஒரு நபரை ஒன்றுமில்லாத விஷயத்திற்காக அடித்தே கொள்ளும் அளவில் கட்சிக்காரர்களின் அராஜகம் பெருகி இருப்பதையும் உணரவில்லை .அதை கண்டிக்கவும் இல்லை.
தேசிய உணர்வோடு தேசம் காக்க தன் மகனை அனுப்பிய ஒரு வயோதிக தந்தை. அதே தேசம் தன் சொந்த மாநிலத்தில் சொந்த ஊரில் தனது மகனை அடித்தே கொன்றதை பார்த்து மனம் கலங்கி நின்றபோது துரை முருகன் எங்கிருந்தாரோ? . குடும்பத்தோடு அந்த ஊரில் வாழ்வதற்கு கூட பாதுகாப்பு உத்திரவாதம் இல்லாமல் குடும்பத்தோடு வேறு ஒரு ஊருக்கு இடம்பெயர்ந்து வாடகை வீட்டில் வாழும் பரிதாப நிலையும் அந்த இராணுவ வீரன் குடும்பத்திற்கு இதே திமுகவின் ஆட்சியில் தான் நீடிக்கிறது. எங்கே போனது துரைமுருகன் இந்திய உணர்வு ஒற்றுமை உணர்வும்? என்று அவரை மனசாட்சி அவரைக் கேட்கட்டும்.
இந்தியன் என்ற உணர்வும் ஒருமைப்பாடும் இன்னுமும் இங்குள்ள தேசாபிமானிகளுக்கு இருக்கிறது. இந்துக்களை ஆன்மீக உணர்வில் கலந்து இருக்கிறது. இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் இந்தியன் என்ற உணர்வு நிறைந்து இருக்கிறது. ஆனால் இந்தியன் என்ற உணர்வும் தேசம் என்ற ஒருமைப்பாடும் இல்லாதவர்கள் எல்லாம் திமுகவினர் அதன் கூட்டணி கட்சியினர் அவர்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மட்டும்தான். அதனால் தான் இங்கு இந்திய உணர்வும் ஒருமைப்பாடும் பேசுபவர்கள் எல்லாம் காவி பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள் .அதை செய்பவர்களும் திமுகவினர் தான் துரைமுருகனின் இந்திய உணர்வும் ஒருமைப்பாடும் உதட்டளவில் இல்லாமல் உணர்வுபூர்வமாக இருக்குமானால் முதலில் அவரின் இந்திய உணர்வு ஒற்றுமை பாடத்தை அவரது கட்சியின் மேடையில் இருந்து தொடங்கட்டும்.