மகனின் சடலத்துக்கு லஞ்சம்: பிச்சை எடுத்த பெற்றோர்!

மகனின் சடலத்துக்கு லஞ்சம்: பிச்சை எடுத்த பெற்றோர்!

Share it if you like it

இறந்துபோன தங்களது மகனின் சடலத்தை கொடுக்க மருத்துவமனை ஊழியர் ரூ.50,000 லஞ்சம் கேட்டதால், அவரது வயதான பெற்றோர் பிச்சையெடுத்து பணம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனையின் உச்சம்.

பொதுவாகவே, அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் தலைவிரித்தாடும். நல்ல சிகிச்சை கிடைக்க வேண்டும் என்றால் ஆயா வேலை பார்ப்பவர்கள் தொடங்கி நர்ஸ், டாக்டர் வரை லஞ்சம் கொடுத்தால்தான் நடக்கும். தவிர, ஆஸ்பத்திரியிலோ, விபத்திலோ இறந்தவர்களின் உடலை வாங்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுத்தாக வேண்டியது கட்டாயம் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இப்படித்தான் பீகாரில் உயிரிழந்த தங்களது மகனின் சடலத்தை கொடுக்க ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணம் கேட்டதால், பிச்சை எடுத்து கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அவரது பெற்றோர்.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர். கூலித் தொழிலாளி. இவரது மகன் சஞ்சீவ் தாக்குர். 35 வயதான இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவரை, கடந்த 2 வாரங்களாக காணவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே, இது குறித்து லோக்கல் போலீஸில் புகார் செய்தனர். இந்த சூழலில், சஞ்சீவ் தாக்குரின் சடலம் முஸ்ரிகராரி பகுதியில் கடந்த 6-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோரை அழைத்த போலீஸார், அது அவர்களது மகன் சஞ்சீவ் தாக்குர்தானா என்று அடையாளம் காட்டும்படி கூறினார்.

இதைத் தொடர்ந்து, இறந்தது சஞ்சீவ் குமார்தான் என்பதை அவரது பெற்றோரும் உறுதிப்படுத்தினர். இதன் பிறகு, அவரது உடலை சதார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீஸார். எனவே, மகனின் சடலத்தை வாங்குவதற்காக மகேஷ் தாக்குர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். ஆனால், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த ஊழியர்கள், ரூ.50,000 கொடுத்தால்தான் சஞ்சீவ் குமார் சடலத்தை கொடுப்போம் என்று கறாராகக் கூறிவிட்டனர். ஆனால், கூலித் தொழிலாளியான மகேஷ் குமாரிடம் அவ்வளவு பணம் இல்லை. அதேசமயம், மகனின் உடலை வாங்கி, இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டியது தந்தையின் கடமை ஆயிற்றே.

இதனால், செய்வதறியாது திகைத்த மகேஷ், வேறு வழியின்றி அந்த முடிவுக்கு வந்தார். அதாவது, தனது மனைவியுடன் சேர்ந்து பிச்சை எடுத்தாவது, அரசு மருத்துவமனை ஊழியர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து, தனது சடலத்தை வாங்கி அடக்கம் செய்வது என்று முடிவு செய்தார். இதையடுத்து, தனது மனைவியுடன் சேர்ந்து அதே பகுதியில் பிச்சை எடுக்கத் தொடங்கினார். 3 நாள்களாக பிச்சை எடுத்தும் 50,000 ரூபாய் தேறவில்லை. இதனிடையே, இவர்கள் எதற்காக பிச்சை எடுக்கிறார்கள் என்கிற காரணத்தைத் தெரிந்துகொண்ட லோக்கல் பிரமுகர் ஒருவர், மகேஷ் குமார் தம்பதி பிச்சை எடுப்பதை வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார்.

இந்த வீடியோ வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூம் எடுக்கவே, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், சஞ்சீவ் தாக்குரின் உடலை உடனடியாக அவரது பெற்றோரிடம் ஒப்படைத்ததோடு, மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதன் தொடர்ச்சியாக, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்கள் மட்டும் இல்லாவிட்டால், நாட்டில் நடக்கும் பல பிரச்னைகள் மக்களின் கவனத்துக்கும், அரசின் கவனத்துக்கும் வராமலேயே போய்விடும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


Share it if you like it