செந்தில்பாலாஜி புத்தர்… கவர்னர் வில்லனா? அண்ணாமலை அதிரடி கேள்வி!

செந்தில்பாலாஜி புத்தர்… கவர்னர் வில்லனா? அண்ணாமலை அதிரடி கேள்வி!

Share it if you like it

செந்தில்பாலாஜி ஏதோ புத்தரைப் போலவும், உத்தமரைப் போலவும், கவர்னரை வில்லனாகவும் சித்தரிக்கிறது தி.மு.க. என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “ஆளுநர் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். இதற்கு முதலில் முதல்வர் கண்ணாடியில் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாத பிரச்னைகளுக்கு எல்லாம் ஆளுநர்தான் காரணம் என்று சொல்லக்கூடிய வகையில்தான் அக்கடிதம் இருக்கிறது. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு. அவர்கள் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் எவ்வளவோ இருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப்பார்த்து அவர்தான் காரணம் என்கிறார்கள்.

அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கியது தவறு என்கிறார்கள். அக்கடிதத்தில் செந்தில்பாலாஜியை உத்தரமராகவும், புத்தராகவும், ஒரு மானிடத்தையே காக்க வந்த சேவகராகவும் பார்க்கிறார்கள். எதற்காக இத்தனை பொய்கள்? தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக தன்னுடைய கட்சி செய்த குற்றங்களை மறைப்பதற்காக ஆளுநரை குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம். தங்கள் தவறுகளை மறைப்பதற்காக ஆளுநரை வில்லனாகக் காட்ட தி.மு.க.வினர் முயற்சி செய்கிறார்கள். கள்ளச்சாராய சாவுகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளிட்ட எவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது. எதற்காக ஆளுநர் மீது பழிபோடுகிறார்கள்?

ஆளுநரை மிகவும் தரக்குறைவாக, அவரது மாண்புக்கு எந்தவித மரியாதையும் இல்லாமல், ஆளுநரை பற்றி ஒருமையில் பேசுகிறார்கள் என்றால் அது தி.மு.க.வினர்தான். தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. தோல்வியின் பயம் முதல்வருக்கு தெரிகிறது. முதல்வர் ஸ்டாலினின் தோல்வி பயத்தை காட்டக்கூடியதாவேதான் அக்கடிதம் இருக்கிறது. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைக்க போகிறார். அந்த இயலாமையைத்தான் கடிதத்தில் முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறாரே தவிர, வேறு எந்த விதமான உண்மையையும் கடிதத்தில் நான் பார்க்கவில்லை. தமிழகத்தின் உண்மையான நிலைமையை பிரதிபலிப்பதாக அந்த கடிதம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it