மனைவிக்கு உணவு கொடுக்காமலும், குளிப்பதற்கு பாத்ரூம் தராமலும் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருவதாக, வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக். கதாநாயகன், வில்லன், குணசித்திர நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, தென்னிந்திய திரையுலகில் பிரபலமாகி வருகிறார். இவரது மனைவி அஞ்சனா கிஷோர் பாண்டே. நவாசுதீனை திருமணம் செய்த பிறகு, முஸ்லீமாக மதம் மாறி, தனது பெயரையும் ஆலியா சித்திக் என்று மாற்றிக் கொண்டார். திருமணமாகி 12 வருடங்களாகும் இத்தம்பதிக்கு, யானி சித்திக் என்ற மகனும், ஷோரா சித்திக் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு, நவாசுதீன் சித்திக்கிடமிருந்து விவாகரத்து பெறப்போவதாக ஆலியா அறிவித்திருந்தார். இதன் பிறகு, இருவரும் சமாதானமடைந்து ஒன்றாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வில்லன் நடிகரான நவாசுதீன், தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், வில்லனாக வலம் வருவதாக அவரது மனைவி அலியா குற்றம்சாட்டி இருக்கிறார். அதாவது, நவாசுதீனின் தாயார் மெஹ்ருனிசா சித்திக்குக்கும், மனைவி ஆலியாவுக்கு சொத்து தொடர்பாக பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து மெஹ்ருனிசா அளித்த புகாரின் பேரில், ஆலியா மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடந்தி வருகின்றனர். இந்த சூழலில்தான், நவாசுதீனும், அவரது குடும்பத்தினரும் தனக்கு உணவு கொடுக்காமலும், குளிப்பதற்கு பாத்ரூம் கூட கொடுக்காமலும் டார்ச்சர் செய்து வருவதாக குற்றம்சாட்டி இருக்கிறார் ஆலியா.
இதுகுறித்து ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ மற்றும் பதிவில், “கடந்த 7 நாட்களாக எனது சொந்த கணவர் வீட்டில் உள்ள ஹாலில் மட்டுமே வாழவும், தூங்கவும், பயன்படுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டேன். வீட்டில் இருக்கும் 7 படுக்கையறைகளும் எனது மாமியார்களால் பூட்டப்பட்டுள்ளன. துபாயில் இருந்து வந்த என் குழந்தைகள் ஹாலில் 2 சோபா செட் போட்டு என்னுடன் தூங்குகிறார்கள். நான் விருந்தினர்களுக்கான ஒரு சிறிய கழிப்பறையில்தான் குளித்தேன். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்புக் காவலர்கள் என்னைச் சுற்றிலும் போடப்பட்டிருக்கிறார்கள். இப்போது, சி.சி.டி.வி. கேமராக்கள் கூட நிறுவப்பட்டு ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது. அமைதியும் இல்லை, தனியுரிமையும் இல்லை. எனது கணவர் நவாசுதீன் சித்திக், என்னை பாதுகாக்கவோ அல்லது எனக்காக நிற்கவோ முடியவில்லை. நீதிமன்ற ஆவணங்களுக்கு எனது கையொப்பம் எடுக்க, எனது வழக்கறிஞர்கூட அனுமதிக்கப்படவில்லை. என் மாமியார்களின் தொல்லைகள் முடிவுக்கு வருமா? நீதிக்காக காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து ஆலியாவின் வழக்கறிஞர் கூறுகையில், “ஆலியாவை வீட்டை விட்டு வெளியே கொண்டுவர எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவரது குடும்பத்தினர் போலீஸாரையும் மிரட்டுகிறார்கள். தற்போது ஆலியா மீது அடக்குமுறைகள் நிகழ்த்தப்படுகின்றன. நவாசுதீனும், அவரது குடும்பத்தினரும் கடந்த 7 நாட்களாக ஆலியாவுக்கு உணவு வழங்கவில்லை. தூங்குவதற்கு படுக்கை, குளிப்பதற்கு பாத்ரூம் கூட தரப்படவில்லை. அறையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.