பழங்காலத்தை கண்முன் கொண்டு வரும் பசுமை வாக்குச்சாவடிகள் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கூழ், மோர் தர தேர்தல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 பொது வாக்குச்சாவடிகள் (எண் 14 பாகத்தில் 1, 2) பசுமை வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன. பசுமை பனை ஓலைகள், வாழை மரங்கள் மூலம் முன்பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் சிறுதானியமான கம்பு கதிர்கள் வைக்கப்பட்டுள்ளன. உள்ளே பனை ஓலை, தென்னை ஓலை மூலம் கூரை வேயப்பட்டுள்ளன. அதன் பக்கவாட்டில் தென்னை ஓலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பனை உள்ளிட்ட இலைகள் மூலம் மயில் போன்ற பறவைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண் அலங்காரப் பொருள்களும் தொங்கவிடப்பட்டுள்ளன. வாக்களிக்கச் செல்வோரை கவரும் வகையில் பாரம்பரிய பாத்திரங்கள், பழங்கால வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட பசுமை வாக்குச்சாவடியில் முழுமையாக வாக்களிப்போம், மாதரை பெருமைப்படுத்துவோம், மனைகள் தோறும் பனை நடுவோம் என பல பண்பாட்டு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடியை இன்று மாலை ஆய்வு செய்த பிறகு மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் கூறுகையில், “வாக்குச் சாவடிகள் புதுச்சேரியில் 967 அமைத்துள்ளோம். வாக்குப்பதிவு நடத்தும் அதிகாரிகள் அனைவரும் அவரவர் வாக்குச்சாவடிக்கு சென்றடைந்தனர். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. புதுச்சேரியில் வித்தியாசமான வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளோம்.
1886-ல் தொடங்கப்பட்ட பாரம்பரிய கட்டுமானம் கொண்ட வஉசி பள்ளி மீண்டும் அதே முறையில் வடிவமைக்கப்பட்டது. இங்கு பசுமை வாக்குச்சாவடிகள் இரண்டு அமைந்துள்ளோம். பழங்கால வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். பழங்கால திருவிழா போல் வடிவமைப்பு இந்த வாக்குசாவடியில் உள்ளது. வாக்களிக்க வருவோருக்கு பதநீர், கூழ் என பாரம்பரிய உணவு தரவும் ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.