நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தார். அங்கு குடியுரிமை சட்டத்துக்கு சில மாநிலங்களின் எதிர்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. எனவே, அரசியல் சட்டப்படி, அந்த சட்டத்தை எல்லா மாநிலங்களும் அமல்படுத்தியே தீர வேண்டும். இது தேசநலன் சார்ந்தது.
கேரளாவோ, மேற்கு வங்காளமோ, ராஜஸ்தானோ, மத்தியபிரதேசமோ எந்த மாநிலமாக இருந்தாலும் இதை அமல்படுத்தியாக வேண்டும். அப்படி அமல்படுத்த முடியாது என்று கூறினால், அது அரசியல் சட்டத்துக்கு ஏற்புடையது அல்ல.
குடியுரிமை சட்டம் என்பது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்காக கொண்டுவரப்பட்டது.
எனவே, இந்திய முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை. காங்கிரஸ் கட்சிதான் இந்த சட்டத்துக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருகிறது. இது, நாட்டுக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.