மாமுனிவர் காஞ்சி பரமாச்சாரியார்

மாமுனிவர் காஞ்சி பரமாச்சாரியார்

Share it if you like it

மாமுனிவர் காஞ்சி பரமாச்சாரியார்

1966 அக்டோபர் 23..

ஐக்கிய நாடுகள் சபையில் பாரத ரத்னா திருமதி எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பாடிய இறை வணக்கம், மைத்ரீம் பஜத…

உலகம் முழுவதற்கும் அன்பு, அஹிம்சை போதித்த அற்புதமான பாடல். இதனை வடிவமைத்து உலகிற்கு அளித்தவர், ஸ்ரீ ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடாதிபதி.

இந்தப் பாடல் உலகிற்கு அளித்த செய்தி,  நாம் உள்ளங்களை ஆட் கொள்வோம், உலகிலுள்ள அனைவரையும் உறவினராகக் கருதுவோம், போரும் போட்டியும் வேண்டாம், மற்றவர்களை அடிமைப் படுத்தும் எண்ணம் வேண்டாம், அன்போடும் கருணையோடும் இரக்கத்தோடும் வாழ்வோம், உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழட்டும்…

இந்தப் பாடல் உலகிற்கு நமது பாரதம் அளித்த செய்தி.

காஞ்சி பரமாச்சாரியார் மிகச் சிறந்த குரு. “மகா பெரியவா”, “மகா சுவாமி” என்றெல்லாம் பக்தர்களால் அன்போடு, பக்தியோடு அழைக்கப் பட்டவர், இருபதாம் நூற்றாண்டில் ஈடு இணையற்ற ஆன்மீக கோபுரமாக, ஞானக் கதிரவன் ஆக விளங்கினார்.

வேதங்கள், உபநிஷதங்கள், தர்ம நூல்கள், தேவாரம், திருவாசகம், நீதி இலக்கியங்கள் என அனைத்தையும், தனது சிறு வயதிலேயே, கற்று உணர்ந்தார், சுவாமிகள்.

பரமாச்சாரியார், 1894 மே மாதம் இருபதாம் தேதி, விழுப்புரம் அருகில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், சுவாமிநாதன். கல்வி, கேள்விகளில் ஆற்றல் வாய்ந்த மாணவனாகத் திகழ்ந்தார்.

சங்கர மடத்தின் 66வது பீடாதிபதி, இவரை அழைத்தார். அவர் திடீரென சிவபதம் அடைந்தார். அடுத்த பீடாதிபதியும் சிவபதம் அடைந்தார். ஆகவே இவர் அறுபத்தி எட்டாவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தனது இளம் வயதில், ஆங்கிலம் பிரெஞ்ச், மராத்தி ,சம்ஸ்கிருதம், தமிழ் என பல மொழிகளையும் கற்று உணர்ந்தார். உலகிற்கு அன்பையும், கருணையையும் பொழிந்தார். பாரத நாடு முழுவதும் பலமுறை நடை பயணமாக சுற்றுப் பயணம் செய்தார்.

விடுதலைப் போரில் தனது பங்காக நமது நாட்டின் “காதி” கதர் உடைகளையே அணிந்தார். “பிடி அரிசித் திட்டம்” இவர் கொண்டு வந்த மகத்தான திட்டம். ஒவ்வொருவரும் தினமும் ஒரு பிடி அரிசி எடுத்து வைத்து, ஒன்று சேர்த்து பிரசாதம் ஆக்கி, கோயில்களில் வழங்கும் இந்தத் திட்டம், பெரிதும் ஏழைகளுக்குப்  பயன்பட்டது.

கும்பகோணம் சங்கர மடத்தில், தம் அருட்பணி தொடங்கி, காஞ்சிபுரம் வந்து, மடம் அமைத்து அருள் செய்தார். ராமேஸ்வரம் முதல்  இமயம் வரை, பல வேத பாட சாலைகளை நிறுவினார். துறவியர் மாநாடு நடத்தி வேதங்கள், தர்மங்கள், சாஸ்திரங்கள் இவற்றை புனருத்தாரணம் செய்தார்.

இவரது சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் “தெய்வத்தின் குரல்” என திரு ரா கணபதி அவர்களால் தொகுக்கப் பட்டது.

கோயில் மரத்தடி, கோ சாலை இப்படி எங்கும் தங்கும் மகான், 87 ஆண்டுகள் தூய துறவறம் காத்த சுவாமிகள், ஆதிசங்கரரின் போதனைகளை மக்களிடம் கொண்டு சென்றார். இவரது காலத்தில் காஞ்சி காமகோடி மடம் புத்தொளி பெற்றது. பக்தர்கள் உடலாலும், உள்ளத்தாலும் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பக்தர்கள் தியானம் மூலம், தம்மைத் தாமே தூய்மையாக வைத்திருத்தல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என விரும்பினார். நம்மை நாமே தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டால், நம் மனம் தூய்மை அடையும், உலகம் நம்மைப் பின்பற்றும் என்றும் கூறினார்.

இன்றும் ஆயிரக்கணக்கான இடங்களில், சுவாமிகள் பெயரால் வேத பாடசாலைகள், பக்த மண்டலிகள், கோ சாலைகள் மூலம் இவரது வழிமுறைகளை பக்தர்கள் பின்பற்றி வருகின்றனர் .

காஞ்சி மஹா சுவாமிகள் அனைவரது உள்ளத்திலும், இல்லத்திலும், என்றும் வாழ்கிறார்கள். அவரது வழி, தர்மத்தின் வழியே நடப்பதே, அவருக்கு நாம் செய்யும் உண்மையான வழிபாடு.

  • வெங்கடேசன்

Share it if you like it