சந்திராயன் 3 சாதனை வெற்றி இந்தியாவை உலகின் விண்வெளி வல்லரசாக நிலை நிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள்

சந்திராயன் 3 சாதனை வெற்றி இந்தியாவை உலகின் விண்வெளி வல்லரசாக நிலை நிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள்

Share it if you like it

ஆகஸ்ட் 23 – 2023 இந்திய நேரம் மாலை 5-30 முதல் ஒட்டுமொத்த உலகமும் இந்திய இஸ்ரோவை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் ஏற்கெனவே திட்டமிட்ட படி சந்திராயன் 3 நிலவின் மிக நெருக்கத்தில் இருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்த விஞ்ஞானிகள் அங்குலம் அங்குலமாக சந்திராயன் தரை இறக்கத்தை பகிர்ந்தார்கள். சில நாழிகையில் சந்திராயன் நிலவில் வெற்றி கரமாக தரையிறங்கியது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆனந்த கூத்தாட தேசம் ஆனந்த கண்ணீரில் நனைய தென் ஆப்ரிக்காவில் இருந்து பிரதமர் இந்தியாவின் இந்த சாதனை வெற்றியை உலகுக்கு அதிகார பூர்வமாக அறிவித்தார்.

தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பது யாருக்கு பொறுந்துமோ ? இல்லையோ சந்திராயன் மிஷன் க்கு முற்றிலும் பொருந்தும். சந்திராயன் 1 இறுதியில் தோல்வி அடைந்ததும் சுயமாக நொறுக்கப்பட்டது. ஆனால் அதில் துவளாத இந்திய விஞ்ஞானிகள் முயற்சியில் அடுத்த கட்டமாக சந்திராயன் 2 முயற்சி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. எதிர் பாராத விதமாக சந்திராயன் 2 நிலவின் நெருக்கத்தில் போய் தடுமாறியது. தகவல் தொடர்பு துண்டிப்பு செயலிழப்பு என்று காணாமல் போன கதையானது. அன்றைய தினம் விஞ்ஞானிகள் குமுறி அழுதாலும் விழுந்த வேகத்தில் எழுந்து வந்து விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தங்கள் முயற்சி தொடங்கினார்கள். நான்காண்டுகள் உழைப்பு திட்டமிட்ட ஒருங்கிணைப்பு அரசின் முழு ஒத்துழைப்பை மக்களின் பிரார்த்தனைகள் எல்லாம் கூடிய இறையருளால் நேற்று சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் தடம் பதிந்து விட்டது.

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்ற பாரதியின் கனவு மெய்ப்பட தொடங்கிவிட்டது. இந்திய இஸ்ரோவின் விஞ்ஞானிகள் தங்களின் பல ஆண்டுகள் உழைப்பு அர்ப்பணிப்பால் தன் சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தேசத்தின் வெற்றிக்காக ஒருங்கிணைந்து உழைத்ததன் பலனே சந்திராயன் 3 என்ற இமாலய சாதனை.இதவரை உலக நாடுகள் எல்லாம் நிலவின் வட துருவம் நோக்கியே ஆய்வுகள் பயணம் செய்தது. ஆனால் இந்தியா மட்டுமே நிலவின் தென்துருவம் நோக்கிய சவாலை முன் எடுத்தது. முதல் இரண்டு முயற்சியில் தோற்ற போதிலும் தொடர்ந்து போராடி மூன்றாம் முயற்சியில் இந்திய இஸ்ரோ சாதித்துக் காட்டியது. இந்த சரித்திர சாதனை மூலம் உலகின் விண்வெளி வல்லரசாக இந்திய நல்லரசு சந்திரனில் அரியாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. இதன் மூலம் இந்திய இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு அடுத்த நிலைக்கு நகர்வதோடு உலக நாடுகள் தங்களின் விண்வெளி ஆய்வு பணிக்காக இந்திய இஸ்ரோவை நாடி வரும் போது இந்திய பொருளாதாரம் பன் மடங்கு உயரும்.

இன்று எப்படி அந்நிய செயற்கை கோள்களை வியாபார ரீதியாக நம் ஸ்ரீ ஹரி கோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவி அதை ஒரு சர்வதேச பொருளாதார மூவமாக மாற்றினோமோ ? அதே நிலை விண்வெளி சந்திரன் ஆய்வு மற்றும் அடுத்த கட்டமாக பயணம் என்ற கூட்டு முயற்சி வரும் போது இந்திய பொருளாதாரம் உலகின் முதலிடம் நோக்கி வேகமாக நகரும். உள் நாட்டில் இந்த விண்வெளி ஆய்வு சம்பந்தப்பட்ட உயர் கல்வி ஆராய்ச்சி கல்வி அதிகரிக்கும். இந்த ஈர்ப்பால் எதிர் காலத்தில் இளம் விண்வெளி விஞ்ஞானிகள் அதிகம் கொண்ட வல்லரசாக பாரதம் தலைநிமிரும். இதன் மூலம் உள்நாட்டு உயர் கல்வி வேலை வாய்ப்பு ஆராய்ச்சி நிலையங்கள் தனிமனித பொருளாதாரம் என்று அனைத்து மூலங்களும் அசுர வேகத்தில் வளரும்.

நிலவை கை வணங்கும் தேசம் அந்த நிலவில் எதிர் காலத்தில் ஆலயம் அமைக்கலாம். நிலவை காட்டி குழந்தைக்கு சோறூட்டும் இந்திய தாய்கள் எதிர் காலத்தில் நிலவில் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வரலாம். தேசம் ஒரு பெருமிதமான சாதனையை நிகழ்த்தி கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த வேளையில் இந்த வெற்றிக்காக அடித்தளமிட்ட முன்னோடிகளை எல்லாம் கை கூப்பி வணங்குகிறது. ஹோமி பாபா விக்ரம் அம்பாலால் சாராபாய் சதீஷ் தவான் அப்துல் கலாம் என்று இஸ்ரோவின் முன்னோடிகளை ஆத்மார்த்தமாக வணங்கி ஆனந்த கண்ணீரில் நனைகின்றது. சந்திராயன் 3 விண்கலத்தின் லாந்தருக்கு விக்ரம் என்று பெயரிட்டு அவருக்கு மரியாதை செய்யும் தேசம் இன்று அவரின் ஆசியை பூரணமாக பெற்றதன் அடையாளம் தான் விக்ரம் லாந்தரின் ஸாஃப்ட் லேண்டிங் என்ற மெல்லிய ‌தரையிறக்கம் சாத்தியமானது.

சதீஷ் தவான் ஆசிதான் நாற்பது நாள் முன்பு விக்ரமை சுமந்து போன குண்டு பையனை வெற்றி கரமாக பயணிக்க வைத்தது. ஸ்ரீ ஹரி கோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளம் இன்று அதன் பூரணத்தை அடைந்து விட்டது. ஹோமி பாபாவும் அப்துல் கலாம் ம் நிலவின் ஆய்வு பணிகளில் விக்ரம் லாந்தரை ஒருங்கிணைந்து வழிநடத்தும் பணியில் இருப்பார்கள் அதனால் அடுத்தடுத்து முயற்சிகள் யாவும் வெற்றிகரமாகும் என்ற நம்பிக்கையில் தேசம் மகிழ்கிறது. நேற்று இந்தியர்கள் ஜாதி மத இன மொழி பேதம் கடந்து இந்த தேசத்தின் வெற்றியை கொண்டாடி தீர்த்தார்கள் . உலகெங்கும் உள்ள இந்தியர்கள் இன்னமும் தாய் பூமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச நாடுகள் தொடங்கி அதன் விண்வெளி ஆய்வு மையம் வரை அனைத்தும் வாழ்த்துக்களோடு இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் இணைந்து பணியாற்ற தயார் என்று வரிசையில் நிற்கிறது.

சந்திரனை மனோகாரகனாக மாத்ரூ காரகனாக வழிபடும் இந்திய தேசத்தை சந்திரனை தலையில் சூடிய சந்திரசூடேஸ்வரனை முழுமுதற் கடவுளாக வழிபடும் பாரதத்தின் விண்வெளி பயணத்தை ஆசிர்வதித்து தன்னில் இடம் தந்து அரவணைத்த சந்திரபகவானுக்கு நன்றிகள் என்று தேசம் பணிந்து வணங்குகிறது. ஆம் அவனது பூரண ஆசி பெற்ற திருமலை திருப்பதியில் சிறப்பு வழிபாடு செய்து அவனை வணங்கிய பிறகு தான் இஸ்ரோ விஞ்ஞானிகள் அவனது பாதம் தேடி போகும் சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணில் ஏவினார்கள். தன்னாலான அனைத்தையும் செய்து அவன் தான் பணிந்து அவனருள் வேண்டிய விஞ்ஞானிகள் உழைப்பு திறமை அர்ப்பணம் பக்திக்கு சந்திரன் மனமுருகி இன்று அவர்களின் வசமாகிறான். இந்த முயற்சி வெற்றியானதற்கு ஆசி வழங்கிய. திருமலை திருப்பதி ஏழுமலையான் அன்பிற்கும் தேசம் கை கூப்பி நன்றி தெரிவிக்கும் பொன்னான தருணம் இது.சந்திரனில் இஸ்ரோவின் வெற்றி கொடியாய் பறக்கும் பாரதத்தின் தேசிய கொடி.

ஜாதி மத மொழி இன பேதம் கடந்து கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தங்களின் அறிவார்ந்த திறமை அதீத ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு என்று தன்னலமற்ற அர்ப்பணிப்போடு உழைப்பில் தேசத்தின் வெற்றிக்கு வித்திட்ட இந்திய விண்வெளியை புதிய உச்சத்திற்கு கொண்டு சேர்த்த இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தேசம் பெருமிதத்தோடு தலை வணங்குகிறது. இந்த சந்திராயன் மூன்று விண்கலத்தை கனக்கச்சிதமாக விண்வெளியில் கொண்டு சேர்த்த செல்லக்குட்டிகள் எங்களின் குண்டு பையனுக்கும் அவனது மடியில் அழகாக பயணித்த சுட்டிப் பையன் சந்திராயனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொள்கிறது.

தகுதியும் திறமையும் உள்ள இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளை தேசத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சிப் பணிகளுக்காக தேர்வு செய்து பணியமர்த்தி அவர்களை முழு சுதந்திரமாக செயல்பட அனுமதித்து அவர்களுக்கு தேவையான அத்தனை கட்டமைப்புகளையும் செய்து கொடுத்து அவர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் உலக சாதனையாக நிகழ்த்திக் கொட்டிய இந்திய அரசுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றிகள். சந்திராயன் மூன்றின் பயணம் தொடங்கிய நாள் முதல் இந்நிகழ்வு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று நல்லெண்ண வார்த்தைகளை உதிர்த்து இறைவனிடம் பிரார்த்தனை செய்த இந்தியர்களுக்கும் இந்தியாவின் நலன் விரும்பும் நட்புறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பரிமாறிக் கொள்கிறது.தேசத்தின் வெற்றிக்காகவும் பெருமிதத்திற்காகவும் தங்களின் சுக துக்கம் குடும்பம் உன் உறக்கம் மறந்து அர்ப்பணிப்போடு உழைத்திட்ட தேசிய பொக்கிஷமான இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளே. உங்களால் இது சாத்தியம் உலகம் உள்ள வரையில் வரலாறு உங்களின் இந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் என்றென்றும் பெருமிதத்தோடு உயர்த்தி பிடிக்கும். தொடரட்டும் இந்திய இஸ்ரோவின் வெற்றிப் பயணம்.

சந்திரனில் கால் பதிக்கும் இந்த வரலாற்று முன்னெடுப்பிற்கு முழு ஆசி வழங்கி வெற்றிகரமாக நிகழ்த்திக் கொடுத்த திங்களை முடி மேல் சூடிநிற்கும் எங்களின் ஈசனுக்கு கண்ணீர் துளிகளை நன்றி காணிக்கையாக்குகிறது.. தன் தேசத்தின் வளர்ச்சி ஒன்றையே இலக்காக்கி ஒருங்கிணைந்து பயணித்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு இந்திய அரசின் வழிகாட்டல் என்று அனைத்திற்கும் முழு ஆசி வழங்கி இதனை முழு வெற்றியாக சரித்திர சாதனையாக மாற்றிக் கொடுத்த எங்களின் பாரத தேவியின் பாதங்களில் எங்கள் தேசத்தின் வெற்றியையும் பெருமிதத்தையும் கமலமலராக சமர்ப்பிக்கிறது.

ஜெய் ஹிந்த்.


Share it if you like it