மறந்து போன பஞ்சரத்தின உணவு வகை பெருகி வரும் கருவாக்கம் மையங்கள்

மறந்து போன பஞ்சரத்தின உணவு வகை பெருகி வரும் கருவாக்கம் மையங்கள்

Share it if you like it

உணவே மருந்து மருந்தே உணவு என்ற உன்னதமான வாழ்வியலை பின்பற்றிய நம் முன்னோர்கள் ஆண் – பெண் – குழந்தைகள் – உடல்நலம் குன்றியவர்கள் என்று அனைவரின் வயது – உடலியல் ஏற்ப அவர்கள் அனைவரையும் உடல் நலனும் ஆரோக்கியமும் பாதுகாக்கும் வரையிலான பல்வேறு உணவுப் பழக்கங்களை பின்பற்றி வாழ்ந்தார்கள். ஒரே விதமான தானியங்களை பல்வேறு வகையான உணவு பண்டங்களாக தட்பவெப்பம் சூழலியல் மாறுபாடுகளை உணர்ந்து அதன் அடிப்படையில் தங்களின் உணவு பழக்கத்தை பின்பற்றியதன் காரணமே அவர்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கொண்டு பூரணமாக வாழ்ந்ததன் ரகசியம்.

ஆனால் இன்று நவீனம் என்ற பெயரில் ஒருபுறம் ஒவ்வாத உணவு வகைகளும் மறுபுறம் உணவு பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமல் போனதும் சிறு குழந்தைகளுக்கு கூட நீரிழிவு – சிறுநீரக பாதிப்புகள் – உடல் பருமன் என்று வியாதிகள் வரிசை கட்டி நிற்கிறது. மறுபுறம் செயற்கையான நிறமிகள் – உணவு பண்டங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் – செயற்கையான ஜீரண பொருட்கள் – கார அமிலங்கள் எல்லாம் உயிர் குடிக்கும் விஷங்களாக மாறி புற்றுநோய் – இருதய நோய்களையும் , சிறுநீரக – மூளை – நரம்பு பாதிப்புகளையும் உருவாக்கி 40 வயதிற்குள் மரணத்தை பரிசளிக்கிறது.

குறிப்பாக 13 வயது குழந்தைகள் முதல் திருமண வயதில் இருக்கும் ஆண் பெண் மற்றும் பேறு காலத்தில் இருக்கும் ஆண் – பெண்களின் ஆரோக்கியம் வரை பாதுகாக்க பல்வேறு சிறப்பு உணவுகள் நம் பாரம்பரியத்தில் பின்பற்றப்பட்டது. 13 வயது தொடங்கி நடு வயதை கடக்கும் வரையிலும் பஞ்சரத்தின உணவு வகை என்ற ஒற்றை உணவியல் பழக்கம் அவர்களின் ஆயுள் ஆரோக்கியம் உடலியலை பாதுகாத்தது .அதன் பலனாகத்தான் 10 பிள்ளைகளை சுகப்பிரசவத்தில் பிரசவித்தாலும் நீண்ட ஆயுளோடும் எந்த விதமான ஆரோக்கிய குறைபாடுகளும் இல்லாமல் நமது முந்தைய பாட்டி தலைமுறை பெண்கள் வாழ்ந்தார்கள். நாள் முழுவதுமான கடின உழைப்பு இரவு பகல் பாராத விவசாய பணிகள் என்று உழைப்பை தவிர வேறொன்றும் அறியாத நம் தாத்தாக்கள் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் – மாரடைப்பு எல்லாம் பக்கத்தில் நெருங்காமல் வாழ்ந்தார்கள்.

ஆனால் நவீனம் என்ற பெயரில் அவர்களின் உணவுப்பழக்கத்தை உதாசீனப்படுத்தியதன் விளைவு இன்று ஒருபுறம் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு – பதின்ம வயது பெண் குழந்தைகள் சந்திக்கும் பூப்பெய்தும் இடர்பாடுகள் , . ஆண் – பெண் மலட்டுத்தன்மை , பிரசவம் என்பது பெண்களுக்கு பேரிடராக மாறிய கொடுமை, மகப்பேறு சுகப்பிரசவம் என்பது அருகி அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்ற அசாதாரண நிலை வந்ததும் அதன் மூலம் தாய் சேய் நலம் பாதிக்கப்படுவதோடு பெண்களின் உடலியலும் முற்றிலுமாக பாழாகிறது.

உடலுக்கு அதீத ஊட்டச்சத்தையும் உள்ளுறுப்புகளை பலப்படுத்தும் அருமருந்தாகவும் எளிதாக செரிமானமாகும் மிதமான உணவாகவும் உடலுக்கு கேடு விளைவிக்காத அமிர்த உணவுகளான இருந்த இந்த பஞ்சரத்தின உணவுகள் அரிசி பிட்டு – இனிப்பு வடை – உளுத்தங்களி – எள்ளுருண்டை – பொரிவிளங்கா உருண்டை என்று பல்வேறு உணவு பண்டங்களாக தயாரிக்கப்பட்ட போதிலும் இதன் அடிப்படை பஞ்சரத்தினமாக இருந்தது சிவப்பு அரிசி – உளுந்து- வேர்க்கடலை – எள் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை என்ற இயற்கையான முறையில் இந்த மண்ணில் விளைந்த ஐந்து விளைபொருட்கள் மட்டுமே. இதோடு கேழ்வரகு – சோளம் – கம்பு உள்ளிட்ட தானியங்கள் உபயோகம் கூடுதல் பலம் சேர்க்கும்.

தினை – வரகு – சாமை – குதிரைவாலி – மூங்கில் அரிசி உள்ளிட்ட சிறு தானிய உபயோகம் அன்றாட வழக்கில் இருந்தது.

நம் மண்ணில் எல்லா தட்பவெப்ப நிலையிலும் எல்லா இடங்களிலும் சர்வ சாதாரணமாக விளையக்கூடிய இந்த பொருட்களை எண்ணையில் பொரிக்கும் கேடின்றி அதீத எண்ணெய் உபயோகமும் இன்றி எளிதில் செரிமானமாகும் மிதமான உணவாகவும் அதே நேரத்தில் உடலுக்கு அபரிமிதமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் அமிர்த உணவாகவும் நம் முன்னோர்கள் உண்டு வாழ்ந்தார்கள். இந்த ஆரோக்கிய உணவு உண்ணும் வழக்கத்தை நமக்கும் ஊட்டி வளர்த்ததாலும் தான் இன்று ஓரளவேனும் நம் தலைமுறைகள் இந்த காலகட்டத்தில் கூட பெரும் நோய் தாக்குதல் இன்றி தப்ப முடிகிறது.

ஆனால் நம் தலைமுறையினர் நமக்கு கொடுத்த இந்த உணவு பொக்கிஷத்தை நவீனம் என்ற பெயரில் நாம் அலட்சியப்படுத்தியதும் , அதன் மகத்துவத்தை உணர்ந்து நம் குழந்தைகளுக்கு நாம் கொண்டு போய் சேர்க்காததாலும் இன்று நம் குழந்தைகள் வெறும் சக்கைகளை உண்டு எலும்பும் சதையும் போர்த்திய பலவீனங்களின் வடிவமாக நம் முன்னே வளரும் அவலம். இந்த அமிர்த உணவுகள் வழக்கொழிந்ததன் பலனே கர்ப்ப காலம் – பிரசவ காலம் – பாலூட்டும் காலமெல்லாம் இன்று பெரும் சுமையாக மாறி நிற்பதும். இன்னும் ஒரு படி மேலே போய் ஆண் – பெண் மலட்டுத்தன்மை உச்சமாகி தெருவுக்குத் தெரு கருவாக்க மையங்கள் முளைத்து நிற்பதும் சுகப்பிரசவம் என்பது அரிதிலும் அரிதாகி அறுவை சிகிச்சை ஒன்றே பிரசவம் என்ற அவலம் நேரிட்டதும் இன்று நாம் கண்முன்னே தொடர்வதன் காரணம்.

மேலே குறிப்பிட்ட இந்த பஞ்சரத்தின உணவு வகைகளை இரும்பு வாணலி – மண்பாண்டங்கள் – பித்தளை – வெண்கல பாத்திரங்கள் துணையோடு நம் முன்னோர் சமைத்ததும் ஆவியில் வேக வைத்தல் – வறுத்து அரைத்தல் – இடித்து பொடித்தல் என்று அபரிமிதமான உணவுகளை அமுது படைத்தது தான் நம் முன்னோரின் ஆயுள் ஆரோக்கிய உடலியல் ரகசியம். அதே நேரத்தில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை அடையாளம் கண்டு அது நிறைந்திருக்கும் தேங்காய் எண்ணெய் – நல்லெண்ணெய் – கடலை எண்ணெய் வகைகளை சமையலுக்கு பயன்படுத்தி வாழ்ந்த வரையில் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் – கெட்ட கொழுப்பு வகைகள் அதன் காரணமான உயிர் கொல்லி நோய்கள் எல்லாம் எட்டியே இருந்தது. ஆனால் நம் முன்னோரின் மகத்துவமும் அவர்கள் உணவுப் பழக்கத்தின் உன்னதமும் உணராது அந்நிய மோகத்தை பளபளக்கும் உணவுப் பொருட்களும் – மனம் கவரும் விளம்பரங்களும் உண்மையின் உறைவிடம் என்று நாம் முட்டாள்தனமாக நம்பி போனதன் விளைவு தான் இன்று நம் கண் முன்னே நாம் காணும் அத்தனை ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் முதல் காரணம்.

பத்து குழந்தைகளை வீட்டிலேயே பிரசவித்து ஆரோக்கியமாக வளர்த்தெடுத்த பாட்டியின் கண் முன்னே இன்று அவளது மூன்றாம் தலைமுறை ஒற்றைப் குழந்தையாக வளர்வதும் அந்த ஒற்றை குழந்தையும் பதின்ம வயது பெண் குழந்தை பூப்பெய்தும் காலத்தில் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் வளர்வது பூப்பெய்தும் காலம் இடர்பாடுகள் காரணமாக குழந்தையை மகப்பேறு மருத்துவர் சிறப்பு ஆய்வுக்காக அழைத்துப் போவதும் காணும்போது முந்தைய தலைமுறையின் மனம் எப்படி பதைபதைக்கும்.? அவர்கள் பொத்தி வளர்த்த பிள்ளைகள் – பொக்கிஷமாக நினைக்கும் பேரன் – பேத்திகள் கண்முன்னே ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் ஆயுளை பாழாக்கும் உடலியல் என்று அணுவாக சிதைவதை பார்க்கும் போது அவர்களின் மனம் எப்படி புழுங்கும்‌? என்பதை யோசிக்க நம்மில் யாருக்கும் நேரமில்லை.

ஆனால் இன்றளவும் நம் ஆரோக்கியம் நம் தலைமுறையின் பாதுகாப்பில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை தான் அருகி வரும் அந்த இயற்கை உணவு பண்டங்களை எல்லாம் இன்னும் சமைத்து அவர்கள் சந்ததிக்கு உண்ணவும் – சமைக்கவும் பழக்க முயல்வது. 80 வயது கடந்த மூதாட்டி தம்பதியர் கூட நெடுஞ்சாலைகள் தொடங்கி சிறிய ஊர்கள் வரையிலும் இயற்கை உணவகம் என்ற பெயரில் தம்மால் முடிந்த வரையில் இந்த உணவு பண்டங்களை அடுத்த தலைமுறைக்கு ஏதேனும் ஒரு வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் ஆரோக்கியம் உடலியல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தன்னலமற்ற உணவு தொண்டாக இன்றும் எத்தனையோ பேர் செய்வதை கண்கூடாக பார்க்கிறோம் . அதை பார்த்த பிறகாவது இது வெறும் வியாபார தந்திரம் அல்ல. இதன் பின்னே இருக்கும் தன்னலமற்ற சேவையும் அதன் மூலம் அவர்கள் நமக்கு சொல்ல வரும் இயற்கை உணவின் அருமையும் அதன் மூலம் மட்டுமே நம் சந்ததிகளின் ஆயுள் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் உணர்ந்து இனியேனும் நாம் நமது பாரம்பரிய உணவு பழக்கங்களை மதித்து பின்பற்றுதல் நலம் பயக்கும்.


Share it if you like it