இயற்கை மருத்துவம் – மூல நோய்க்கு மருந்தாகும் அரிய வகை கீரைகள் துத்தி – வாழைக் கொத்தான்

இயற்கை மருத்துவம் – மூல நோய்க்கு மருந்தாகும் அரிய வகை கீரைகள் துத்தி – வாழைக் கொத்தான்

Share it if you like it

சமீப காலமாக மாறிவரும் வாழ்வியல் முறை இயந்திரத்தனமான யதார்த்த வாழ்க்கை நவீனம் என்ற பெயரில் சீரழிந்த உணவு பழக்கம் உள்ளிட்டவற்றால் ஆரோக்கியக் குறைவுகளும் நோய்களும் பெருகி வருகிறது . பிறக்கும் குழந்தை கூட நோயுடன் ஊட்டச்சத்து குறைபாடுடனும் பிறப்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இதில் பல்வேறு நோய்களுக்கு இயற்கை மருத்துவம் அலோபதி மருத்துவம் என்ற பல்வேறு மருத்துவ முறைகளை தீர்வு காணப்பட்டாலும் ஒரு சில நோய்கள் முழுமையாக குணமாகாமல் நம்மை ஏதோ ஒரு வகையில் தொந்தரவு கொடுத்து யதார்த்த வாழ்க்கையை நரகமாக மாற்றிவிடும். அதில் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியிலேயே அதிக அளவில் பரவி வரும் மூலநோயும் ஒன்று.

அதிகப்படியான உடல் சூடு உடலில் நீர்ச்சத்து குறைவது அதன் காரணமான அஜீரணம் எளிதில் செரிமானம் ஆகாத கடினமான உணவுப் பொருட்களை அதிக அளவில் உண்பது உடல் உழைப்பு அதிகம் இல்லாத பணி சூழல் கெட்ட கொழுப்புகள் மிகுந்த உணவு பண்டங்கள் உண்பது அதிக அளவிலான காரம் எண்ணெய் மசாலா கலந்த அசைவ உணவுகள் உண்பது கீரைகள் பழங்கள் தானியங்கள் என்று நீர் சத்துக்களும் நார்ச்சத்துக்களும் மிகுந்த உணவுப் பொருட்கள் தவிர்ப்பது உள்ளிட்ட காரணங்களால் மந்தம் அஜீரணம் தோன்றும்.உடல் சூடு அதிகரிக்கும். இந்த நாள்பட்ட மந்தமும் அஜீரணமும் உள் சூடும் மலச்சிக்கலை உருவாக்கும். மலச்சிக்கலை ஆரம்பத்தில் கண்டறிந்து சரி செய்யாத பட்சத்தில் அது மூலநோய்க்கான அறிகுறிகளை காட்டும். அறிகுறிகள் தென்படும் பட்சத்திலேயே இந்த மூல நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அது நமக்கு பெரும் சிரமங்களை கொடுக்கும்.

தற்போது மூல நோய்க்கு மூன்று நாட்களில் சரி செய்யும் மாத்திரைகள் தருகிறோம் . அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கிறோம். ரத்தம் வலியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து முடிக்கிறோம் என்று திரும்பிய பக்கமெல்லாம் விளம்பர பதாகைகளை பார்க்க முடிகிறது. சிக்கலான நோய் இதுதான் பிரச்சனை என்று வெளியில் சொல்ல முடியாத தர்ம சங்கடம் என்று பல்வேறு காரணங்களை உள்ளடக்கி பலரும் இந்த விளம்பரங்களை நம்பி பல ஆயிரங்களை செலவழித்தும் பூரண நலம் பெற முடியாமல் மன உளைச்சலோடு உழல்கிறார்கள். ஆனால் மூல நோய்க்கு இயற்கையான முறையிலேயே நம் முன்னோர்களின் வழியில் பாரம்பரிய உணவுகள் உணவு பயன்பாடுகள் வழியிலேயே இதை சரி செய்ய முடியும் .

பெரும் சிரமத்தை தரும் இந்த மூல நோய்க்கு மருந்தாகி முழுவதுமாக ஆரோக்கியத்தை மீட்டுத் தரும் அபூர்வ வகை கீரைகள் இந்த மண்ணில் ஏராளம் உண்டு. அவற்றில் துத்திக் கீரை வாழைக் கொத்தான் கீரை வெந்தயக்கீரை உள்ளிட்டவை அருமருந்தாக செயல்படுகிறது.அந்த உணவு பண்டங்கள் பற்றியோ அதன் சமையல் முறைகள் உபயோகம் பற்றியோ சமகாலத்தில் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது துரதிருஷ்டம்.

நம் முன்னோரின் வாழ்வியலில் துத்தி மூலத்திற்கு கத்தி என்று ஒரு சொல்வடை உண்டு. இருதயத்தின் வடிவில் மெல்லிய கீரையாக பச்சை நிறத்தில் தரைகளில் படர்ந்தும் மரங்கள் வேலிகளில் படர்ந்தும் வளரும் தன்மை கொண்டது. இந்த துத்திக் கீரை . எந்த விதமான சுவையும் வாசனையும் இல்லாத இந்த கீரை சர்வ சாதாரணமாக வயல் வெளிகளிலும் நீர் துறைகளிலும் விளைவது. இந்த துத்திக் கீரையை பறித்து சுத்தம் செய்து பூண்டு வெங்காயம் மிளகு சீரகம் சேர்த்து வதக்கி துவரம் பருப்பு தேங்காய் துருவல் உள்ளிட்டவற்றை சேர்த்து அதிக காரமும் எண்ணெயும் இல்லாமல் மிதமான ஒரு கீரை கூட்டு போல சமைத்து வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் உணவில் சேர்த்து உண்டு வர சில வாரங்களிலேயே மூல நோயிலிருந்து நிவாரணம் பெற முடியும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்பது விரைவில் பலன் தரும்.

வாழைக் கொத்தான் கீரை என்று சொல்லப்படுவது அபூர்வ மூலிகையை போல இன்று அபூர்வமாகத்தான் கிடைக்கவும் செய்கிறது. காரணம் இந்த வாழைக்கொத்தான் கீரை இயல்பில் நல்ல நீரும் மண்வளமும் இருக்கும் இடத்தில் மட்டுமே விளையும். நீரோ நிலமோ மாசடைந்த இடங்களில் இந்த வாழைக்கொத்தான் வளராது. கரும்பு மற்றும் தென்னை தோட்டங்களில் இயல்பாக வளர்ந்து படரும் இந்த வாழைக் கொத்தான் பார்ப்பதற்கு கோவை கீரையை போலவே இருக்கும். ஆனால் கோவை கீரையை விட அளவில் பெரியதாக இருக்கும். விரலை வைத்து கீரையில் வருடும் போது மிக நுண்ணிய அளவில் முட்கள் இருப்பதைப் போல உணர முடியும். ஆனால் அவை முட்கள் அல்ல அந்த கீரையின் மேல் படர்ந்து இருக்கும் வெளிப்புற நார் படலம்.

இந்த வாழைக் கொத்தான் கீரை எந்தவிதமான சுவையும் மனமும் இல்லாத கீரை என்றாலும் அதிகப்படியான வழவழப்பு கொண்ட கீரை இதை எண்ணெய் சேர்க்காமல் மண்சட்டி அல்லது இரும்பு வானலியில் அப்படியே வதக்கிக் கூட சமைத்து உண்ண முடியும் .அந்த அளவிற்கு வழவழப்பு மிகுந்தது. உணவில் அதிக ருசியோ மணமோ இந்த வாழைக் கொத்தான் கீரை சேர்ப்பதில்லை. ஆனால் உடலுக்கு உள்ளிருந்து நலம் சேர்த்து ஜீரண மண்டலத்தை சீராக்கி நாள்பட்ட மூல நோய் தொந்தரவிலிருந்து விடுதலை கொடுப்பதில் இந்த வாழைக்கொத்தான் கீரை முதலிடம் வகிப்பது.

தற்போது கூட ஏரிக்கரைகள் மலையடிவாரங்கள் என்று சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து இன்னும் தப்பி பிழைக்கும் இடங்களில் இந்த வாழைக் கொத்தான் கீரைகளை சகஜமாக பார்க்க முடியும் . பாண்டிச்சேரி விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திரும்பிய பக்கம் எல்லாம் சாலை ஓரங்களிலும் விவசாய விளைநிலங்களிலும் வேலிகளிலும் இந்த வாழைக் கொத்தான் கீரை சாதாரணமாக படர்ந்து இருப்பதை அந்த வழியில் பிரயாணிக்கும் யாரும் பார்க்க முடியும்.

இந்த வாழைக் கொத்தான் கீரையை பூண்டு சிறு வெங்காயம் நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி காய்ந்த மிளகாய் புளி உப்பு சேர்த்து வதக்கி அப்படியே அம்மியில் அரைத்து அந்த விழுதோடு ஒரு கவளம் சேர்த்து நன்கு பிசைந்த உருண்டையாக சிறு குழந்தைகளுக்கு வழங்குவது வழக்கம். குழந்தைகளுக்கு அஜீரணம் அசமந்தம் தீர்ந்து நல்ல பசி எடுக்கும். குழந்தைகளுக்கு வயிற்றில் இருக்கும் புழுக்கள் பூச்சிகள் மலத்தின் வழியாக வெளியேறி குழந்தைகளின் ஜீரண மண்டலம் சுத்தமாகும்.

கர்ப்பிணி பெண்கள் பிரசவித்த பெண்களுக்கு பிரசவ காலத்திலும் நம் முன்னோர்கள் இந்த துத்திக் கீரை வாழைக்கொத்தான் உள்ளிட்ட கீரைகளை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தார்கள் . இதன் காரணம் பிரசவ காலத்தில் முன்பும் பின்பும் பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியமும் மலச்சிக்கல் தொந்தரவும் தீரும். அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிரசவத்தின் காலத்தில் இழந்த சத்துக்களை ஈடு செய்யவும் இந்த கீரை உணவுகள் அரும் பங்கு வகிக்கும்.

பொதுவாகவே அகத்திக்கீரை சிறுகீரை பருப்புக்கு கீரை தண்டுக்கீரை புளிச்சக்கீரை பொன்னாங்கண்ணி உள்ளிட்ட கீரைகள் உடலில் ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் உள்ளிட்ட தொந்தரவுகள் நெருங்காமல் பாதுகாக்கும் . அதே நேரத்தில் உள்ளுறுப்புகளுக்கு பலம் சேர்க்கும் அத்தியாவசிய உயிர் சத்துக்களை நிரம்ப வழங்கும் அதனால் தான் தினமும் ஒரு கீரை வகைகளையும் ராகி களியையும் உண்டு நம் முன்னோர்கள் நாள் முழுவதும் ஓய்வின்றி உழைக்கவும் முடிந்தது. நோய் நொடியின்றி நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் வாழ முடிந்தது.

ஆனால் உடலுக்கு ஆரோக்கியமும் பலமும் சேர்க்கும் நம் பாரம்பரிய உணவு முறைகளை எல்லாம் நாம் உதாசீனம் செய்துவிட்டு நவீனம் என்ற பெயரில் சக்கைகளை உண்ணும் காரணமாகத்தான் நமக்கு தினமும் ஒரு நோய் புதிதாக முளைத்து வருகிறது. நவீனம் என்ற மோகத்தை விட்டு நம் உடலில் ஆரோக்கியமும் பலமும் தான் முக்கியம் என்பதை நாமும் உணர்ந்து நம் சந்ததிகளும் உணரச் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு முன் உதாரணமாக அரிய வகை கீரை வகைகள் மூலிகைகள் மருந்து பொருட்களை தினசரி உணவில் நாம் உட்கொள்வதும் அதன் மூலம் கிடைக்கும் நல் பலன்களை நம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் அவர்களையும் இந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மாற்ற முடியும்.

மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் . நம் கண் முன்னே இருக்கும் அபூர்வ கீரை வகைகளான துத்தி வாழைக் கொத்தான் கீரைகளை அதன் மகத்துவம் குறையாது சமைக்கும் வகையில் உயிர் சத்துக்களை அழிக்காத இயற்கை முறையில் மண்பாண்டங்கள் உலோக பாத்திரங்கள் அல்லது இரும்பு வாணலி பயன்படுத்தி நம் முன்னோர்களின் வழியில் இந்த அபூர்வ கீரைகளை சமைத்து உண்பதை வழக்கமாக்கிக் கொள்வோம். மூலம் என்னும் நம்மை மிரட்டும் நோய் தொந்தரவிலிருந்து நம்மையும் பாதுகாத்துக் கொள்வோம். நம் சந்ததிகளையும் பாதுகாப்போம்.


Share it if you like it