போலீஸ் போல கொள்ளை… பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: இம்ரான், இம்தியாஸ், இம்ராஸ் கைது!

போலீஸ் போல கொள்ளை… பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: இம்ரான், இம்தியாஸ், இம்ராஸ் கைது!

Share it if you like it

சென்னையில் நகை வியாபாரியிடம் 1.4 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கொள்ளையடிக்கும் பணத்தை தீவிரவாத இயக்கத்திற்கு கொடுத்த அதிர்ச்சி சம்பவம் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஆந்திராவைச் சேர்ந்தவர் நகை வியாபாரி சுப்புராவ். இவர், நகை வாங்குவதற்காக 1.4 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு, தனது மேலாளர் ரகுமான் என்பவருடன் கடந்த 2-ம் தேதி சென்னை யானைகவுனி பகுதிக்கு வந்தார். அப்போது, கையில் லத்தி மற்றும் கைவிலங்குடன் காரில் வந்திறங்கிய ஒரு கும்பல், இவர்கள் சென்ற ஆட்டோவை வழிமறித்து, போலீஸ் போல் நடித்து, சுப்புராவிடம் இருந்த 1.4 கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து யானை கவுனி காவல் நிலையத்தில் புகார் செய்தார் சுப்புராவ். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது ஹவாலா மற்றும் குருவி கும்பலை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் இம்ரான், அவனது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மற்றும் கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் எண் ஆகிய ஆதாரங்களை வைத்து தனிப்படை போலீஸார் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட 5 மாநிலத்திற்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், குற்றவாளி இம்ராஸ் என்பவன் கைது செய்யப்பட்டான். இவன் அளித்த தகவலின் பேரில், நீலகிரி, சேலம், கர்நாடகா ஆகிய இடங்களில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி இம்ரான், இம்தியாஸ் உட்பட 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். கொள்ளை கும்பல் தலைவன் இம்ரானிடம் நடத்திய விசாரணையில், குருவி மற்றும் ஹவாலா முறைகேட்டில் ஈடுபடும் நபர்களை குறிவைத்து, ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரியவந்தது. ஏனெனில் இவர்கள்தான் கொள்ளை போனாலும் வெளியே சொல்ல மாட்டார்கள்.

இதேபோல, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இம்ரான் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும், போலீஸாரிடம் சிக்காமல் இருக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இம்ரான் கொள்ளையடித்த பணத்தை, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு வழங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தையே உலுக்கிய அம்பத்தூர் ஹிந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய பயங்கரவாத குற்றவாளிகளுக்கு இம்ரான் பண உதவி செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. இக்கொள்ளை கும்பலிடம் இருந்து 60 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீஸார், இக்கும்பலுக்கு வேறு எந்தெந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது, யார் யாரிடம் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், முக்கிய குற்றவாளி இம்ரான் மீது தமிழ்நாடு முழுதும் பல்வேறு வழிபறி வழக்குகள், ஆயுத தடைச் சட்ட வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.


Share it if you like it